மாநில சுயாட்சி குறித்த மூவர் குழு: என்ன சாதிக்க முடியும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநிலத்தின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைத் தருவதற்கு குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் குழுவால் என்ன சாதிக்க முடியும்?
தற்போது நடந்து வரும் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில், செவ்வாய்க் கிழமையன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். இதைப்பற்றி ஆராய மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பும், உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் முன்னாள் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு - தமிழக அரசு இடையிலான உறவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.கவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.கவும் அரசியல் களத்தில் தொடர்ந்து மோதி வந்தாலும்கூட, கடந்த சில மாதங்களில் இந்த உறவுகள் மிகவும் மோசமடைந்திருக்கின்றன.
குறிப்பாக, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுத்ததையடுத்து உறவுகள் மோசமடைந்தன. நாடாளுமன்றத்திலேயே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க. எம்.பிக்களை கடுமையாக விமர்சித்தார். இது மொழிப் பிரச்சனையாக உருவெடுத்தது. தமிழ்நாட்டில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என அறிவித்தது தமிழக அரசு.
இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, ரூபாயைக் குறிக்க 'ரூ' என்ற தமிழ் எழுத்தையே பயன்படுத்தி வெளியான நிதிநிலை அறிக்கையின் முன்னோட்ட வீடியோ அகில இந்திய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சலசலப்பு ஓய்வதற்கு முன்பாக, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என குரல் எழுப்பினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அப்படிப் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்களின் கூட்டம் ஒன்றையும் சென்னையில் நடத்தினார்.
இதற்குப் பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நீக்குவது குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தினார் மு.க. ஸ்டாலின்.
இவையெல்லாம் தவிர, மாநில ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நீடித்துவந்த மோதல்களும் மற்றொரு பக்கம் தொடர்ந்தன. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில்தான் மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை அளிப்பது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க மூன்று பேர் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருக்கிறார் முதலமைச்சர்.
இது முதல் முறை அல்ல

பட மூலாதாரம், Getty Images
முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் தொடர்பாக குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெறுவது இது முதல் முறை அல்ல. சி.என். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, மு. கருணாநிதி முதலமைச்சரான சில மாதங்களில் இதுபோன்ற ஒரு குழுவை அமைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.வி. ராஜமன்னார் தலைமையில் முன்னாள் நீதிபதி சந்திரா ரெட்டி, டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை 1971ஆம் ஆண்டு அளித்தது.
"பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் தவிர பிற அதிகாரங்கள் எதுவும் மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கட்டளையிட வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவுகளைத் திருத்துவது, மாநிலங்களின் முதலமைச்சர்களை உள்ளடக்கிய குழுக்களை அமைத்து, முக்கிய விவகாரங்களை அதில் விவாதித்து முடிவெடுப்பது, மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டுமென்ற பிரிவை நீக்குதல், ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், மாநில அரசை கலைக்கும் அதிகாரங்களை நீக்க வேண்டும்" போன்ற பரிந்துரைகளை இந்தக் குழு அளித்தது.
இதனை தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது என்றாலும் மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
இதற்குப் பிறகு, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு, மாநில அரசுகளை கலைக்கப் பயன்படுத்தப்படும் 356வது பிரிவை அரிதாகவே பயன்படுத்த வேண்டும், மாநில அரசுகளை கலந்தாலோசித்து ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தக் குழு அளித்தது. ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் பூஞ்ச்சி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. 2010ல் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற சுற்றுக்கு விடப்பட்டது. அதற்குப் பிறகு இதில் ஏதும் நடக்கவில்லை.
2023-இல் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக, மாநிலங்களின் கருத்துகள் மீண்டும் பெறப்படும் எனக் குறிப்பிட்டது. அதற்குப் பிறகு இதில் ஏதும் நடக்கவில்லை.
புதிய ஆணையம் ஏன்?

பட மூலாதாரம், Tamil Nadu Legislative Assembly
மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து இத்தனை ஆணையங்கள் அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டும் அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் இதுபோன்ற ஒரு ஆணையத்தை அமைப்பது ஏன்?
"பயனில்லாத முயற்சியாக இதனைப் பார்க்கக்கூடாது. மாநில உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்ததால்தான், பல தருணங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநிலங்களுக்கு ஆதரவாக வருகின்றன. சம்பரானில் மகாத்மா காந்தி போராட வந்தபோது, அதுவரை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதால், இந்தப் போராட்டத்தையும் அவர் நடத்தாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்று கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
தொடர்ந்து பேசிய அவர், "சமத்துவத்துக்கான, சம உரிமைக்கான போராட்டங்கள் எப்போதுமே முடிவதில்லை. அதிகாரக் குவிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அதற்கு எதிரான முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். அப்படியான முயற்சிதான் இது" என்கிறார்.
"மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகுதான் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக நிலைநாட்டப்பட்டு வருகின்றன. அதேபோல, எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வந்த தீர்ப்புக்குப் பிறகுதான் மாநில அரசுகளை விருப்பம் போல மத்திய அரசு கலைப்பது நின்றது. இப்போது ஆளுநருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்திருக்கிறது. இதுபோல வழக்குகளைத் தொடராமல் இருந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.
ஆனால், தி.மு.க. நீண்ட காலமாக மத்திய அரசில் பங்கேற்றிருந்த போது, கல்வி விஷயத்தில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவது போன்ற சில விஷயங்களையாவது செய்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
"மத்திய அரசில் இடம்பெற்றிருந்த காலத்தில் தி.மு.க., கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கலாம். அது சாத்தியமாகியிருக்கவும் கூடும். ஆனால், அதைச் செய்யவில்லை. இப்போது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தி.மு.க. நினைத்திருக்கலாம்" என்கிறார் அவர்.
'2014-க்குப் பிறகான அதிகாரக் குவிப்பு'
இந்த விவகாரத்தை வேறுவிதமாகப் பார்க்கிறார் மூத்த பத்திரிகையாளரான வெங்கடரமணன். அதிகாரக் குவிப்பு வேகமாக நடக்கும்போதுதான், அதற்கு எதிரான நடவடிக்கைகளும் வேகம் பெறும் என்கிறார் அவர்.
"1990களின் இறுதியில் அமைந்த வாஜ்பேயி அரசு, அதற்குப் பிறகு அமைந்த ஐ.மு.கூ. அரசு ஆகியவற்றின் காலகட்டங்களில் கூட்டணி ஆட்சியே இருந்தது என்பதால் மத்திய - மாநில அரசு உறவுகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
ஆனால், 2014க்குப் பிறகு மத்தியில் அதிகாரக் குவிப்பு வேகமாக நடக்க ஆரம்பித்தது. ஆகவேதான், இப்போது மீண்டும் அது குறித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தமிழ்நாடு அரசு செய்கிறது" என்கிறார் வெங்கடரமணன்.
"இதனால், ஏதாவது நடக்குமா என்பதைவிட, தாங்கள் இதற்காகக் குரல் கொடுக்கிறோம், இதில் எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை தி.மு.க. அரசு சொல்லியிருக்கிறது" என்கிறார் கே. வெங்கடரமணன்.
இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது பா.ஜ.க. வெளிநடப்புச் செய்துவிட்டது. வேறு சில விஷயங்களைப் பேச அனுமதிக்கவில்லையெனக் கூறி அ.தி.மு.கவும் வெளிநடப்புச் செய்துவிட்டது.
"இது தேவையில்லாத வேலை" என ஊடகங்களிடம் சொன்னார் மாநில பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன்.
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்திருக்கும் அ.தி.மு.கவுக்கு இது சங்கடமான சூழலை உருவாக்கியிருந்தாலும், "இது தேர்தல் நெருங்குவதால் செய்யப்பட்டிருக்கும் ஸ்டண்ட் வேலை" என்று சொல்லியிருக்கிறார் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.
ஆனால், இதுபோன்ற ஆணையங்களின் பரிந்துரைகள், அரசியலமைப்புச் சட்ட ரீதியாக மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன். "இதற்கு முன்பாக பி.வி. ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு, பூஞ்ச்சி ஆணையம் போன்ற ஆணையங்கள் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்துள்ளன. இதில் எந்தப் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்றதில்லை. பி.பி. ராஜமன்னார் குழுவாவது மாநில அரசால் அமைக்கப்பட்டது.
ஆனால், சர்க்காரியா குழு, பூஞ்ச்சி ஆணையம் ஆகியவை மத்திய அரசால் அமைக்கப்பட்டவை. இருந்தபோதும் அந்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற ஆணையங்கள், குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளை ஏற்க அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
அதற்கெல்லாம் எந்த அரசும் தயாராக இருப்பதில்லை. இதுபோன்ற ஆணையங்களை அமைத்து பரிந்துரைகளைப் பெறுவதால், மக்களிடம் ஒரு விழிப்புணர்வையும் விவாதத்தையும் ஏற்படுத்தலாம். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு பற்றி மக்களைத் தொடர்ந்து பேச வைக்கலாம்" என்கிறார் ஹரி பரந்தாமன்.
இது ஒரு அரசியல் நடவடிக்கை எனக் கூறும் அவர், "மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்த விவகாரம் என்பது பொதுவான விஷயம்தான். இதற்கு அ.தி.மு.க. ஆதரவளித்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆகவே, மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களில் தி.மு.கதான் குரல்கொடுக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இது தி.மு.கவுக்கு உதவிகரமாக இருக்கும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












