"எங்களை கேலி செய்வார்கள், வேடம் கட்டினால் நாங்கள் தெய்வம்" - இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

"நாடகம் போடும் ஊருக்கு சென்று இறங்கும் போதே எங்களை கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், காளி வேடம் கட்டி ஆக்ரோஷத்துடன் நின்றால், அங்கு சுற்றி இருக்கும் மக்களுக்கு அந்த 10 நிமிடங்களுக்கு நான் தான் தெய்வம்," என்கிறார் ஷர்மி.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது திருநங்கை ஷர்மிக்கு, சிறுவயது முதலே தெருக்கூத்து, நாடகங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம். கோவில் திருவிழாக்களில் அரங்கேற்றப்படும் தெருக்கூத்தை பார்த்தே அக்கலையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருக்கிறார், எவ்வித முறையான பயிற்சியும் இல்லை.

"திருவிழாக்களில் நாடகங்களை பார்க்கும் போது நான் நடிப்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என விரும்பினேன். ஆரம்பத்தில் சிறுசிறு நாடகங்களில் நடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருக்கூத்து கலைஞராக இருக்கிறேன்," என்கிறார் ஷர்மி.

தற்போது பொன்னியம்மன் நாடக மன்றத்தில் தெருக்கூத்து கலைஞராக உள்ளார். கோவில் திருவிழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள் தவிர, துக்க நிகழ்வுகளிலும் கூத்து நிகழ்த்துகிறார் ஷர்மி.

"சாவு வீடுகளில் இரவு 9 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்து, 10 மணிக்கு தெருக்கூத்தை ஆரம்பிப்போம். காலை 6 மணி வரை விடியவிடிய கூத்து நடக்கும். ஒரு மரணம் நிகழ்ந்து துக்கத்தில் இருப்பவர்களை ஏதோ ஒருவிதத்தில் அவர்களின் மனதை லேசாக்குகிறோம். அந்த உணர்வால், எங்களின் கஷ்டங்கள் பறந்துவிடும்." என்கிறார் ஷர்மி.

பங்குனி (ஏப்ரல்) முதல் புரட்டாசி (செப்டம்பர்) வரை தான் அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், தமிழ்நாட்டில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அந்த 6 மாதங்கள் மட்டுமே பெரும்பாலும் அதிகமான நிகழ்ச்சிகள் கிடைக்கும்.

"இந்த 6 மாதங்கள் சம்பாதித்ததை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்து அடுத்த 6 மாத செலவுகளை சமாளிப்போம்." என்கிறார் ஷர்மி.

'இதுதான் கௌரவம்'

தெருக்கூத்து கலையின் மிக முக்கிய அம்சமே அதன் ஒப்பனை தான். அதிக நேரத்தையும் பொறுமையையும் கோரும் ஒப்பனைகள்தான், அந்த புராண கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன. தெருக்கூத்து கலைஞர்கள் பலரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி ஒப்பனை செய்துகொள்கின்றனர்.

"புடவை கட்டவும் மேக்கப் போடவும் நானே தான் கற்றுக்கொண்டேன். ஆனால், வழக்கமான மேக்கப்புக்கும் தெருக்கூத்து மேக்கப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. உதட்டுச்சாயம், மை ஆகியவற்றை கவனத்துடன் பூச வேண்டும், மேக்கப் அழுத்தமாக இருக்க வேண்டும். அந்த மேக்கப், நாமே தேங்காய் எண்ணெய் வைத்து கலைத்தால் தான் அழியும். மேக்கப் போடும் போதே மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொன்றையும் ரசித்துரசித்து செய்வேன்" என்கிறார் ஷர்மி.

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

படக்குறிப்பு, ஒப்பனை போட தானே கற்றுக்கொண்டார் ஷர்மி

'மின்னலொளி' எனும் புராண நாடகத்தில் தான் ஷர்மி அதிகமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். மின்னலொளி நாடகம் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு புராணக் கதை.

"அர்ஜுனனின் எட்டு மனைவிகளுள் ஒருவர் தான் மின்னலொளி. ஐந்து வயதில் அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் மின்னலொளி, வளர்ந்து பெரியவளாகி தன் கணவர் யாரென கேட்கிறாள். அப்போது, 48 நாட்கள் சிவ பூஜை செய்தால் உன் கணவர் வருவார் என அவருடைய தந்தை கூறவே, அவ்வாறே செய்கிறாள் மின்னலொளி. 48வது நாளில் அர்ஜுனன் வருகிறார். ஆனால், பூஜை தடைபட்டு விடுமோ என்ற ஐயத்தில் கணவருடன் சேர மறுக்கிறார் மின்னலொளி. கடைசியில் எப்படி சேருகின்றனர் என்பதுதான் கதை" என சற்றும் யோசிக்காமல் முழு கதையையும் நேர்த்தியாகக் கூறுகிறார் ஷர்மி.

ஷர்மியை பொருத்தவரை தெருக்கூத்து கலைஞராக இருப்பது என்பது "ஒரு கௌரவம்".

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

படக்குறிப்பு, தெருக்கூத்து கலைஞராக இருப்பதையே தனக்கான கௌரவமாக கருதுகிறார் ஷர்மி

'திருநர் ஆர்கைவ்ஸ்' எனும் அமைப்பின் மூலம் புகைப்படக் கலைஞர்கள் அக்‌ஷரா சனல் மற்றும் பூங்கொடி மதியரசு ஆகியோர் திருநர் சமூக மக்களின் வாழ்வியல், கலை மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைகளை புகைப்படங்களாக சமீபத்தில் சென்னை, அலையன்ஸ் ஃபிரான்சைஸில் காட்சிப்படுத்தினர்.

'திருநராகிய நாங்கள், இங்கேயே தான் இருக்கிறோம்' என்ற பெயரில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதில், புகைப்படங்கள் வாயிலாக ஷர்மியின் வாழ்க்கையும் ஒளிர்ந்தது. இன்னும் எண்ணற்ற திருநங்கை சமூகத்தவரின் கதைகள் அங்கே பகிரப்பட்டன.

"அறியாமையாலும் அநீதியாலும் திருநர் சமூகத்தினர் சமூக-அரசியல் அமைப்புகளில் அனைத்து நிலைகளிலும் ஆவணப்படுத்தப்படாமல் நிராகரிக்கப்படுகிறார்கள். தற்போதைய சமூக அமைப்பில் திருநர் தெளிவுபாட்டை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம்," என்கிறார் அக்‌ஷரா.

'அம்மாதான் புடவை கட்டிவிட்டார்'

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த திருநங்கை ஷியாமளா, இளம் வயதிலேயே தன் தந்தையின் மரணத்தால் குடும்பத்தை சுமக்கும் பொறுப்புக்கு ஆளானார்.

"பள்ளியில் கேலி, கிண்டல்களால் 3-ம் வகுப்புடன் படிப்பதை நிறுத்திவிட்டேன். பின், கேரளாவில் வீட்டு வேலைக்கு சென்றேன். அங்கு 5-6 ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் தமிழ்நாடு திரும்பியவுடன் திருநங்கை சமூகத்தவரை சந்திக்க ஆரம்பித்தேன்." என்கிறார் ஷியாமளா.

ஷியாமளாவுக்கு அவருடைய அம்மா பெரும் ஆதரவாக இருந்துள்ளார்.

"திருநங்கை என்று தெரிந்தவுடன் வழக்கமாக பல வீடுகளில் நடப்பது போன்றில்லாமல் என் அம்மா என்னை திட்டவோ, அடிக்கவோ இல்லை. இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க எனக்கு நம்பிக்கையளித்தவர் அம்மா தான்," என்று கூறும் 36 வயது ஷியாமளா, 19 ஆண்டுகளாக நடனக் கலைஞராக இருந்துவருகிறார்.

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

படக்குறிப்பு, நிகழ்ச்சிக்குப் பின் பணம் கூட கொடுக்காமல் ஏற்பாட்டாளர்கள் ஒளிந்துகொள்வார்கள் என்கிறார், ஷியாமளா

"கோவிலில் நவராத்திரி அன்று முதன்முறையாக புடவை கட்டிக்கொண்டு ஆடினேன். எனக்கு அம்மாதான் முதன்முதலில் புடவை கட்டிவிட்டு அழகு பார்த்தார். வட்டமான பொட்டு, லிப்ஸ்டிக், கண் மை போட்டுவிட்டார். ஜவுரி முடி வைத்துவிட்டார். அப்போது, 'சலங்கை ஒலி' படத்தில் வரும் 'ஓம் நமச்சிவாய…' பாடலுக்கு ஆடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, மற்றவர்களும் பாராட்டினர்" என தன் முதல் அரங்கேற்றத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் ஷியாமளா.

சிறுவயதில் துரத்தும் வறுமையை சமாளிக்க திருவிழாக்களில் நடனமாடியதிலிருந்து, தற்போது ராஜமாதங்கி திருநங்கைகள் கலைக்குழு என சொந்தமாக ஒரு குழுவை நடத்திவருவது வரை ஷியாமளாவின் பயணம் புறக்கணிப்புகளும் அவமானங்களும் நிறைந்ததாக இருக்கிறது.

"பத்மினி, ராகினி ஆகியோரின் நடனம் என்றால் பிடிக்கும். வீட்டில் டிவியில் பாடல்களை போட்டு, அம்மாவின் புடவையைக் கட்டிக்கொண்டு ஆடிப் பார்ப்பேன்."

புறக்கணிப்பும் அவமானங்களும்

பரதம், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள், மேற்கத்திய நடனம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஷியாமளா, சிறுவயதில் முறையாக பரதம் கற்க முயற்சி மேற்கொண்ட போது புறக்கணிப்புகளை சந்தித்ததாகக் கூறுகிறார்.

"பரதத்தை எனக்கு முறையாக கற்றுக்கொடுக்க யாரும் தயாராக இல்லை. இரண்டு, மூன்று பேரிடம் கேட்ட போது என்னை புறக்கணித்துவிட்டனர். குரு நமஸ்காரம் மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு அனுப்பிவிடுவார்கள்.

இல்லையென்றால் அங்கு பரதம் கற்க வரும் மற்ற பெண்கள் என்னைப் பார்த்து கேலி செய்வார்கள். அதனால் நானே டிவியை பார்த்து அடவு, முத்திரைகளை கற்றுக்கொண்டேன். இப்போது, என்னை புறக்கணித்த நாட்டியாலயாவுக்கே சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறேன்," என பெருமைப்படுகிறார் ஷியாமளா.

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

படக்குறிப்பு, தன் கலைக்குழுவினருடன் ஷியாமளா

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் பல அவமானங்களை சந்தித்ததாக கூறுகிறார் அவர்.

"நடன நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவார்கள், கல்லை தூக்கி எறிவார்கள். 'பெண் வேஷம் போட்டு ஆடுபவனையெல்லாம் கூட்டிவந்து ஆட வைக்கிறீர்கள்' என்பார்கள். கூறிய சம்பளத்தைக் கொடுக்காமல், நிகழ்ச்சி முடிந்ததும் எங்காவது சென்று ஓடி ஒளிந்துகொள்வார்கள். பின்னர் என் குழுவில் இருப்பவர்களுக்கு நான் என் கையில் இருக்கும் பணத்தை பகிர்ந்து கொடுப்பேன்." என தான் சந்திக்கும் இன்னல்கள் குறித்து கூறுகிறார் ஷியாமளா.

தன் குழுவினருடன் நிகழ்ச்சிக்கு செல்லும்போது, ரூ.25,000-30,000 ரூபாய் மட்டுமே தருவார்கள் என்றும், அதை பகிர்ந்துகொள்ளும் போது ரூ. 1,500 என்ற அளவிலேயே ஒருவருக்கு வருமானம் கிடைக்கும் என்றும் கூறுகிறார். பயண செலவுக்குக் கூட பணம் தர மாட்டார்கள் என்கிறார் அவர். "பல சந்தர்ப்பங்களில் புடவை, நகைகள், மேக்கப் பொருட்கள் வாங்கக்கூட பணம் இருக்காது."

பாலியல் துன்புறுத்தல்கள்

"உடை மாற்றுவதற்கு கூட இடம் தர மாட்டார்கள். 'நீ என்ன பெண்ணா? எங்காவது மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொள்' என்பார்கள்."

பல சந்தர்ப்பங்களில் தான் பாலியல் சீண்டல்களை சந்தித்ததாகக் கூறுகிறார் ஷியாமளா.

"அம்மனை தெய்வம் என்கின்றனர். ஆனால், அம்மன் வேடம் போட்டால் கூட கேலியாக பேசுவார்கள். கையை மேலே போடுவார்கள். ஒருமுறை நிகழ்ச்சி முடிந்து வரும்போது அடித்து துன்புறுத்தினார்கள், சித்ரவதை செய்திருக்கிறார்கள், பைக்கை மறித்து கத்தி முனையில் பாலியல் சீண்டல் செய்திருக்கிறார்கள்."

தமிழ்நாடு முழுக்கவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் தன் கலை நிகழ்ச்சிகளுக்காக பயணித்துள்ள ஷியாமளா, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக கலை வளர்மதி விருதை 2024-ல் பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

13 ஆண்டுகளாக தான் நடத்திவரும் ராஜமாதங்கி கலைக்குழு வாயிலாக 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள், இரு திருநம்பிகளுக்கு பல்வேறு விதமான கலைப் பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கலைகளின் மீதான ஆர்வம் வரலாற்று ரீதியானது. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என காப்பியங்களில் திருநங்கைகள் குறித்த குறிப்புகள் உள்ளன.

மாசி மாத அமாவாசையன்று நடக்கும் மயானக் கொள்ளையில் திருநங்கைகள் காளி வேடமிட்டு தெருக்களில் வலம் வருகின்றனர். அவ்வாறு, சுமார் 20 ஆண்டுகளாக மயானக் கொள்ளையில் வேடமிட்டு வருபவர், வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்த 37 வயதான ஐஸ்வர்யா. வறுமை தான் இவரையும் தெருக்கூத்து கலைஞராக்கியது.

"என்னுடைய சிறுவயதிலேயே அப்பா தவறிவிட்டார். 10வது வகுப்பில் நான் தோல்வியடைந்தேன். ஆரம்பத்தில் குடும்ப வறுமையால் தான் தெருக்கூத்தில் நுழைந்தேன். ஆனால், அதுவே தொழிலாக அமைந்துவிட்டது."

திருநங்கையர் தினம்

பட மூலாதாரம், Akshara Sanal

படக்குறிப்பு, "முதன்முதலில் நடனமாடியதற்கு 20 ரூபாயை சம்பளமாக பெற்றேன்" என்கிறார் ஐஸ்வர்யா

சிறுவயதில் திருவிழாக்களில் நடனமாடிவிட்டு வெறுமனே உட்கார்ந்திருக்கும் சமயங்களில், மூத்த கலைஞர்கள் எப்படி ஆடுகின்றனர், பாடுகின்றனர் என்பதை பார்த்துதான் தெருக்கூத்தை கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா.

"முதன்முதலில் நடனமாடியதற்கு 20 ரூபாயை சம்பளமாக பெற்றேன்."

"ஆரம்பத்தில் நடனம் மட்டும் தான் ஆடினேன். பின்னர் வில்லி, மகாராணி, நகைச்சுவை பாத்திரம், கதாநாயகி என பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்தேன். திரௌபதி, சிவன், நளாயினி, நல்லதங்காள் என ஏராளமான வேடங்களை ஏற்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் என்ன வேடமிடுகிறோமோ, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்".

சிவா அம்மு நாடக மன்ற அமைப்பாளர் சிவா தான் தன் திறமையை கண்டுகொண்டு ஊக்கமளித்ததாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா.

இரட்டை பாகுபாட்டை சந்திக்கும் துயரம்

பாலின பாகுபாடு தவிர்த்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா சமூக பாகுபாடையும் சந்திக்க வேண்டியிருந்ததாகக் கூறுகிறார்.

"திருநங்கை என்றாலே நாடகங்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். எந்த ஊர் என்று நான் கூற விரும்பவில்லை. 'இந்த சாதியை சேர்ந்தவர்' மேடையேறக் கூடாது என நான் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற்றியிருக்கின்றனர்," என்கின்றனர் ஐஸ்வர்யா.

"கோவில் திருவிழாவில் மகாபாரதம் நாடகம் போடுவதாக இருந்தது. மேடையிலேயே ஏறக்கூடாது என என்னை நிறுத்திவிட்டனர்."

அசோக் திருநங்கைகள் கலைக்குழுவை அவர் நடத்தி வருகிறார். "அம்மா-அப்பா வைத்த பெயர் மறைந்துவிடக் கூடாது என அந்த பெயரை குழுவுக்கு வைத்திருக்கிறேன்."

23 ஆண்டுகளாக தெருக்கூத்து கலைஞராக இருக்கும் ஐஸ்வர்யாவின் குழுவில் 17 பேர் உள்ளனர்.

"பகடைத் துயில் நாடகத்தில் திரௌபதி வேடம் எனக்குப் பிடிக்கும். ஆனால், அதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. எல்லா மனக்கஷ்டமும் வேடமிட்டு ஆடும்போது போய்விடும்." என்று கூறும் ஐஸ்வர்யா, 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த திருநங்கை விருதை பெற்றிருக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு