அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் லேசர் ஆயுதம் தயாரிக்கும் இந்தியா - எவ்வாறு செயல்படும்?

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம், x.com/DRDO_India/status

படக்குறிப்பு, இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது.
    • எழுதியவர், அமரேந்திர யார்லகடா
    • பதவி, பிபிசி நிருபர்

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது.

எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.

"இது அதிஉயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொடக்கம் மட்டுமே" என்று சோதனை வெற்றியடைந்த பின்னர் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத் அறிவித்தார்.

பிபிசியிடம் பேசிய முன்னாள் டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, "இந்தியாவின் இந்த சோதனை பாதுகாப்புத் துறையில் மிகவும் முக்கியமானது" என்றார்.

லேசர் ஆயுதம் எவ்வாறு செயல்படும்?

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம், x.com/DRDO_India/status

படக்குறிப்பு, எதிர்காலத்தின் "ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்" என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போது, ​​போர் முறைகளும் மாறி வருகின்றன.

ஏவுகணைகளுக்குப் பதிலாக டிரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு போர்கள் நடத்தப்படுகின்றன.

யுக்ரேன் -ரஷ்யா போரில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன.

எதிர்காலத்தில் போர்கள் நடக்கும்போது, டிரோன் தாக்குதல்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுவது அவசியமாகிவிட்டது.

தற்காலிகமாக, அதிக சக்தி கொண்ட லேசரும், அதி நுண்ணலை போன்ற தொழில்நுட்பங்களையும் ஆயுதமாக மாற்றும் பணியில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) லேசரால் வழிநடத்தப்படும் ஆற்றல் ஆயுதமான 'டி.இ.டபிள்யூ ( DEW) Mk-II(A) ஐ உருவாக்கியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் டிரோன் தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள, டிரோன் மூலம் தாக்குதல்களை எதிர்க்கும் அமைப்புகளைத் தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று சதீஷ் ரெட்டி கூறினார்.

டி.ஆர்.டி.ஓ பரிசோதித்த லேசர் ஆயுதம், அதிக சக்தி கொண்டதாக இருப்பதாக அவர் கூறினார்.

தரையில் இருந்து இயக்கப்படும் லேசர் ஆயுதம், டி.ஆர்.டி.ஓவிலுள்ள உயர் ஆற்றல் அமைப்பு மற்றும் அறிவியல் மையத்தின் (CHES) ஆதரவின் கீழ் பரிசோதிக்கப்பட்டது.

டிரோனை லேசர் கற்றைகள் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

இது இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு திறன்களில் ஒன்று என்று டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத் அறிவித்தார்.

உயர் சக்தி லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று சமீர் வி. காமத் ஏ.என்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்த அவர், "அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது." "இஸ்ரேலும் வளர்ச்சியடைந்து வருகிறது," என்று கூறினார்.

'டி.இ.டபிள்யூ' (DEW) உதவியுடன் இலகுரக ஆளில்லா விமானங்களை மட்டுமல்ல, ஹெலிகாப்டர்களையும் கூட முற்றிலுமாக அழிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 'லேசர்' பரிசோதனைகள்

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம், x.com/DRDO_India

படக்குறிப்பு, DEW உதவியுடன் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த முடியும் என்று DRDO அறிவித்துள்ளது.

இந்த வகை லேசர் ஆயுத தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ 2019 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது.

அந்த நேரத்தில் அது இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள இலக்குகளை அழிக்கப் பயன்படுத்தப்பட்டது.

தற்போது, ​​30 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதத்தால், 4-5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்க முடியும்.

"இந்த லேசர் தொழில்நுட்பம் டிரோன்களை கட்டமைப்பு ரீதியாக அழித்து அவற்றின் கண்காணிப்பு சென்சார்களை செயலிழக்கச் செய்யும்" என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்தது.

டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முன்னாள் தலைமைக் கட்டுப்பாட்டாளரும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி பிபிசியிடம் கூறுகையில், டிரோன்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் மட்டுமே லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் செயல்படும் என்றார்.

இதுகுறித்து பேசிய அவர், "டிரோன்கள் இலக்குகளை நெருங்கும் போது தரைக்கு அருகில் வர நேரிடும். அவை குறிப்பிட்ட வரம்பிற்குள் வந்ததும், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சுட்டு வீழ்த்த முடியும்," என்றார்.

லேசர் கற்றைகள் தொலைவில் இருந்தால் அவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று விளக்கப்பட்டது.

அமிட்டி பல்கலைக்கழகம் தற்போது டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து லேசர் கற்றைகளை குளிர்விக்கும் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது.

டிரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

"லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." "இந்த பரிசோதனையின் மூலம், லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களின் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

லேசர் ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

பட மூலாதாரம், DRDO

படக்குறிப்பு, லேசர் கற்றைகள் மூலம் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக DRDO கூறுகிறது.

அதிக சக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம்

டி.ஆர்.டி.ஓ தற்போது 'அதிக சக்தி' கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய 300 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.

"நாங்கள் இப்போது மேற்பரப்பில் (நிலத்தில்) இருந்து செயல்படும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். காற்று மற்றும் நீர் மூலம் பயன்படுத்தக் கூடிய வகையில் அதை உருவாக்கி வருகிறோம்," என்று சமீர் வி. காமத் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று அவர் விவரித்தார்.

மறுபுறம், ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது லேசர் அடிப்படையிலான தீர்வுகள் குறைந்த விலையில் இருக்கும் என்று செல்வமூர்த்தி கூறினார்.

"ஏவுகணைகளை உருவாக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரம்."என்ற அவர், "லேசர் அமைப்பு குறைந்த செலவில் செயல்படுத்தப்படும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.