அமெரிக்கா - இரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியமா? மாறி வரும் சர்வதேச அரசியல் கணக்குகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அர்மென் நெர்செசியன்
- பதவி, பிபிசி உலக சேவை
இரானுடைய அணுசக்தி திட்டம் குறித்து, அந்நாட்டுடன் அமெரிக்கா "நேரடிப் பேச்சுவார்த்தை" நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வாரம் அறிவித்திருந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்தாலும், உரையாடல் நடக்க இருப்பது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
ஏனெனில், 2015ஆம் ஆண்டு இரானுடன் செய்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து (JCPOA) விலகிய அதே அமெரிக்க அதிபர்தான் பேச்சுவார்த்தை குறித்து அறிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
பல ஆண்டுகளாக பொருளாதார சுமையும், அரசியல் அழுத்தங்களும் இரான் அரசுக்கு அதிகரித்து வந்திருந்தாலும், இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நீண்ட காலமாகத் தவிர்த்து வருகிறார்.
ராஜதந்திர காரணங்களுக்காக மட்டுமின்றி, இஸ்லாமிய குடியரசின் கருத்தியல் மற்றும் அரசியல் அடித்தளங்களைப் பாதுகாக்கும் அவரது நோக்கத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

பட மூலாதாரம், Avi Ohayon (GPO) / Handout/Anadolu via Getty Images
வரலாற்று ரீதியாகவே, அமெரிக்கா, இரானின் பகைவராக இருப்பதால், அதனுடன் நேரடியாகப் பேசுவது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்கா எதிர்ப்பு வாதங்களைப் பலவீனப்படுத்தும் அபாயமும் உள்ளது.
மேலும், இரானில் உள்ள கடுமையான பழமைவாதக் குழுக்களிடையே அயதுல்லா அலி காமனேயியின் அதிகாரத்தையும் இந்தப் பேச்சுவார்த்தை குறைக்கலாம். ஓமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெறும் என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்கா நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால், இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கன்ட்ரோல் ரிஸ்க்ஸ் எனும் ஆலோசனை நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அனிசே பஸ்ஸிரி தப்ரிசி இதுகுறித்துக் கூறுகையில், இரு தரப்பும் ஓர் உடன்பாட்டை விரும்புகின்றன என்று நம்புவதாக பிபிசியிடம் குறிப்பிட்டார்.
"முதல் சந்திப்பே உடனடியாக ஓர் உடன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதன் போக்கைப் பொறுத்து, அத்தகைய உடன்பாட்டுக்கான நிலைப்பாடு உருவாகக்கூடும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இரான் உண்மையாகவே ஒப்பந்தத்தை விரும்புகிறதா? அல்லது நீண்டகால மற்றும் மோசமான அரசியல் நெருக்கடியை உருவாக்கும் மற்றொரு விளையாட்டுதான் இந்தப் பேச்சுவார்த்தையா?
அழுத்தத்தில் உள்ள ஆட்சி

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images
இரான் மீதான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ளது. பணவீக்கம் 32 சதவிகிதத்தைக் கடந்து, வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. வரலாறு காணாத வீழ்ச்சியை இரானின் தேசிய நாணயம் சந்தித்துள்ளது.
இதனால் பொது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே, மிகுந்த விரக்தி உருவாகியுள்ளது. பொருளாதார சிரமங்களும், அரசியல் அடக்குமுறையும் ஒரு சமூகத்தை எவ்வளவு தூரம் தளர்வடையச் செய்துள்ளன என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பரவலான போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.
அதே நேரத்தில், பிராந்திய அளவிலும் இரானின் செல்வாக்கு பலவீனமடைந்துள்ளது. ஹெஸ்பொலா, ஹமாஸ், ஹூதிகள் போன்ற இரானின் முக்கியக் கூட்டாளிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். சிரியாவில் பஷர் அல்-அசத் வீழ்ச்சி, ஹெஸ்பொலாவுடனான முக்கிய தொடர்பைத் துண்டித்து, பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தியுள்ளது.
இரானுடன் தொடர்புடைய போராளிகள் மற்றும் இரானின் உள்நாட்டு இலக்குகளை அழிக்கும் நோக்கில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாகத் தனது அதிகாரத்தை முன்னிறுத்தும் இஸ்லாமிய குடியரசின் (இரானின்) திறன், முன்பு இருந்ததைப் போல் தற்போது இல்லை.
உள்நாட்டில் நிலவும் குழப்பமும் பிராந்திய அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இணைந்து, இரான் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதன் மீதான தடைகளைத் தளர்த்தி, சற்று நிவாரணம் பெறுவதற்காகவாவது, அமெரிக்காவுடன் மீண்டும் உரையாடல்களில் ஈடுபடுவதை புத்திசாலித்தனமான முடிவாக இரான் கருதக்கூடும்.
நம்பிக்கையற்ற கூட்டணி

பட மூலாதாரம், BEHROUZ MEHRI/AFP via Getty Images
இருப்பினும், எந்தவொரு ராஜதந்திர முயற்சியும் ஆழமாகப் பதிந்துள்ள அவநம்பிக்கையை எதிர்கொள்கிறது. இரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தின் (JCPOA) முடிவை இரானிய அதிகாரிகள் இன்னும் தெளிவாக நினைவில் வைத்துள்ளனர்.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இரான் தனது பங்கை முழுமையாக நிறைவேற்றியது. ஆனால் 2018ஆம் ஆண்டு, டிரம்ப் நிர்வாகம் அதைச் சிதைத்துவிட்டது.
அதன் விளைவாக, இரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, இரானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு, அமெரிக்கா நம்பிக்கைக்குரிய நண்பன் இல்லை என்ற காமனேயியின் நீண்டகால எண்ணத்தை இந்த அனுபவம் மேலும் உறுதிப்படுத்தியது. இந்தச் சந்தேகம், வரலாற்றில் நடந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் தொடர்ந்து வலுவடைந்து வந்துள்ளது.
கடந்த 1953ஆம் ஆண்டில், சிஐஏ ஆதரவுடன் பிரதமர் முகமது மொசாடேக்குக்கு எதிரான சதியில் இருந்து, இரான்–இராக் போர் காலத்தில் சதாம் ஹுசைனுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது, பின்னர் சமீபத்தில் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவம் வரையிலான எல்லா நிகழ்வுகளிலும் அமெரிக்காவின் தொடர்ச்சியான துரோகத்தையும், விரோதப் போக்கையும் இரானிய அரசு கண்டுள்ளது.
இந்தச் சம்பவங்களை இரான் மறக்கவில்லை. அதை நினைவில் கொண்டே இரான் அரசியலில் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவின் முரணான நிலைப்பாடே இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images)
ஒருபுறம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் வெளியுறவுத் தலைவர் மார்கோ ரூபியோ ஆகியோர், இரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதில், யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஏவுகணைத் திறன்களும் அடங்கும். இது "லிபியா மாதிரி" என்று அழைக்கப்படுகின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க நாட்டின் அப்போதைய ராணுவ ஆட்சியாளர் கர்னல் முயம்மர் கடாபி ஆயுதங்களைக் கைவிட சம்மதித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை 'லிபியா மாதிரி' குறிக்கிறது.
மறுபுறம், மத்திய கிழக்கு விவகாரத் தூதராக உள்ள ஸ்டீவ் விட்காஃப், இந்த முரண்பாடுகளை ராஜதந்திர வழியில் சமாளிக்கலாம் என நம்புகிறார். சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட சோதனை முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலைத்த அரசியல் அணுகுமுறை தேவை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இதுகுறித்துப் பேசிய முனைவர் பஸ்ஸிரி கூறுகையில், இரானுக்கு என்ன வகையான உத்தரவாதங்கள் அளிக்கப்படும் என்பதே முக்கியமானதாக இருக்கும் என்றார்.
"தங்களின் திட்டம் முற்றிலும் முடிவுக்கு வரமால் இருப்பதைத்தான் இரான் உண்மையில் விரும்பும். தங்களது அணுசக்தித் திட்டத்தை முழுவதுமாகக் கைவிடக்கூடாது என்பதில்தான் இரானியர்கள் உறுதியாக இருப்பார்கள்," என்கிறார் முனைவர் பஸ்ஸிரி.
"அமெரிக்காவும், இரானும் போரைத் தவிர்க்க விரும்புகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை," என்று சிகாகோ பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் ஜான் மெயர்ஷெய்மர் கூறுகிறார். "ஆனால் அது நடக்குமா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது, ஏனென்றால் மூடிய கதவுகளுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது."
இரானின் செல்வாக்கும் அச்சமும்

பட மூலாதாரம், Ernesto Ruscio/Getty Images
இரானை பொறுத்தவரை, "லிபியா மாதிரி" ஒப்பந்தம், அதாவது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. 2011இல் முஅம்மர் கடாஃபி தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிட்ட பின்னர், மேற்கத்திய ஆதரவுடன் நடந்த எழுச்சியில் வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இதைத் தான் பின்பற்ற வேண்டிய மாதிரியாக இல்லாமல், இரானின் உச்ச தலைவர் காமனேயி ஓர் எச்சரிக்கையாகப் பார்க்கிறார். இரானின் அணுசக்தி திட்டமே தற்போது அதன் சக்தி வாய்ந்த பேரம் பேசும் ஆயுதமாக உள்ளது.
பிராந்தியத்தில் அதன் கூட்டாளிகள் பலவீனமடைந்து, பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அணுசக்தி அதிகாரம் மட்டுமே இரானிடம் எஞ்சியுள்ள ஒரே பலமாக இருக்கலாம். எனவே முழுமையான, உறுதியான உத்தரவாதங்கள் இல்லாமல் இதைக் கைவிடுவது, வெளிநாட்டு தாக்குதலையும், உள்நாட்டு எதிர்ப்புகளையும் இரானிய ஆட்சி எதிர்கொள்வதற்குக் காரணமாக அமையலாம்.
"லிபியா மாதிரியைப் பின்பற்ற வேண்டும்" என்று அமெரிக்கா வலியுறுத்தினால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்குவதற்கு வாய்ப்புள்ளது" என்று பேராசிரியர் மெயர்ஷெய்மர் கருதுகிறார்.
"இரான் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலையை அதிபர் டிரம்ப் ஏற்படுத்திக் கொள்வதைப் போலத் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார்.
மேலும், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது இரானிய ஆட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இது மிதவாதிகளுக்கு அதிக செல்வாக்கை வழங்கி, புரட்சிகர காவல்படையின் அதிகாரத்தைக் குறைத்து, மேற்கத்திய நாடுகள் இரானுக்கு எதிரி என்ற ஆட்சியின் அடிப்படை நம்பிக்கையை சவாலுக்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது.
ராஜதந்திரம் வெற்றியடைந்து, பொருளாதாரச் சூழல் மேம்பட்டால், சீர்திருத்தவாதிகளின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாகக் கடுமையான பழமைவாதக் குழுக்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
இரான் முன்பு உள்ள அபாயம்

பட மூலாதாரம், MANDEL NGANAMER HILABI/AFP via Getty Images
இரு தரப்பும் தற்போது கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணுசக்தி வரம்புகள் மற்றும் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் ஒரு குறுகிய, இரானின் அணுசக்தி (JCPOA) ஒப்பந்தம் மட்டும் போதுமா அல்லது இரான் தனது முக்கிய உள்கட்டமைப்புகளைத் தளர்த்த வேண்டிய விரிவான ஒப்பந்தம் வேண்டுமா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டும்.
அதே நேரத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் மற்றும் தனிமைப்படுத்தலால் தொடரும் பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றை இரான் கணக்கிட வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இரான் தோல்வியடையப் போகிறது என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக, இந்த ராஜதந்திர முயற்சியை அமெரிக்காவில் உள்ள சிலர் கருதுகிறார்கள். இதன்மூலம், பின்னாளில் நடக்கக்கூடிய ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால், மற்றவர்களோ, பதற்றங்களைக் குறைத்து, பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு உண்மையாகவே உதவும் என எதிர்பார்க்கிறார்கள். தற்போது மிக முக்கியமான சூழல் நிலவுகிறது.
இந்த ஒப்பந்தம் வெற்றியடைவதாக இருந்தால், அது அமெரிக்கா-இரான் உறவுகளில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது தோல்வியடைந்தால், ஏற்கெனவே பதற்றம் நிறைந்த பிராந்தியத்தில் மேலும் குழப்பம் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
இந்த மோதலின் அடுத்த கட்டம் முக்கியமானதாக இருக்கும் என்பது தற்போது தெளிவாக உள்ளது. இரானுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வரும் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காமனேயி தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைபிடித்தாலும், பொருளாதாரச் சிக்கல்கள், மக்களின் அதிருப்தி மற்றும் மூலோபாய நடவடிக்கையின் அவசியம் ஆகியவை தற்போது புறக்கணிக்க முடியாத அளவுக்கு வலிமையாக உள்ளன.
பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும், அந்த முடிவின் தாக்கம் இரானின் அணுசக்தித் திட்டத்தை மட்டுமின்றி, மத்திய கிழக்குப் பகுதியின் எதிர்காலப் பாதுகாப்பையும் தீர்மானிக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












