வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் கூறுவது என்ன?

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், @info_shibir

படக்குறிப்பு, வங்கதேச இஸ்லாமி சத்ரா ஷிபிர் அமைப்பு போராட்டம் நடத்தினர்

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் செய்யப்பட்ட வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி, வங்கதேச இஸ்லாமி சத்ரா ஷிபிர் ஆகிய அமைப்புகள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் ஊடகங்கள் இது இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளன.

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தினார்.

'நாங்கள் கண்டிக்கிறோம்'

வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மியா கோலம் போர்வார் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது மோதி அரசாங்கத்தின் "சர்ச்சைக்குரிய" நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

"இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறோம். இது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இதனை கண்டிக்கிறோம். இந்தியாவில் பாஜக அரசு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வருகிறது", என்று மியா கோலம் போர்வார் கூறியுள்ளார்.

"இந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகள், அவர்களின் மத சுதந்திரம் மற்றும் உரிமையை பாஜக அரசு எவ்வாறு குறைந்து மதிப்பிட முயற்சிக்கிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த சட்டத்தின் மூலம், மசூதிகள், மதரஸாக்கள், கல்லறைகள், தங்குமிடம் போன்ற இஸ்லாமிய சொத்துகளில் அரசாங்கம் தலையிட கதவுகள் திறக்கப்பட்டுள்ளன", என்றும் அவர் கூறினார்.

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்காரி

'இஸ்லாமியர்களுக்கு எதிரானது'

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு வங்கதேச இஸ்லாமிய மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, வங்கதேச இஸ்லாமி சத்ரா ஷிபிர் அமைப்பின் மத்திய தலைவர் ஜாஹிதுல் இஸ்லாம் மற்றும் பொதுச்செயலாளர் நூருல் இஸ்லாம் சதாம் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

"சர்ச்சைக்குரிய வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ஏப்ரல் 3 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களின் மத சுதந்திரம், உரிமைகளை குறைந்து மதிப்பிட உட்படுத்தும் பாஜக அரசாங்கத்தின் திட்டமிட்ட முயற்சிக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த சட்டத்தின் மூலம், மசூதிகள், மதரஸாக்கள், கல்லறைகள், தங்குமிடம் போன்ற இஸ்லாமிய மத சொத்துக்கள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் தலையிட அரசாங்கம் வழிவகை செய்துள்ளது", என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதன்படி, வக்ஃப் வாரியம் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது வக்ஃபின் மத புனிதத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்." என்கிறது அந்த அறிக்கை.

இதற்கிடையில், இந்தியாவில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள ஷாபாக் பகுதியில் வங்கதேச இஸ்லாமி சத்ரா ஷிபிர் அமைப்பின் டாக்கா பெருநகர பிரிவு சனிக்கிழமை (ஏப்ரல் 5) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டது. டாக்காவில் உள்ள பல பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவதென்ன?

பாகிஸ்தானின் 'தி டான் நாளிதழ்' வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து புதிய மசோதாவை மோதி அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த முறை, பாரம்பரியமாக இஸ்லாமிய வக்ஃப் வாரியங்களுக்குச் சொந்தமான மற்றும் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மீது மோதி அரசாங்கம் கண் வைத்துள்ளது. இருப்பினும், அரசாங்கம் இந்த மசோதாவை நிறைவேற்றியதன் நோக்கம் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகம் மற்றும் அதன் செயல்திறனை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது நிலத்தை அபகரிப்பதற்கான ஒரு வழி என்றே இந்திய எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மோதி அரசு ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து வருகிறது. அதில் பெருவாரியாக இஸ்லாமியர்களே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்." என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது. இந்திய அரசாங்கமே இஸ்லாமியர்களை இலக்காக கொண்டு நேரடியாக செயல்படுவது போல தெரிகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்திய நாடாளுமன்றம் சமீபத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது வக்ஃப் நிர்வாகத்துடன் தொடர்புடையது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், வக்ஃப் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு, அவர்களின் அதிகாரங்கள் குறையும். இது இஸ்லாமியர்கள் மற்றும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரிப்பவர்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது", என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த மசோதாவின் நோக்கம் வக்ஃப் நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையானதாகவும், வக்ஃப் வாரியங்களை அதிக பொறுப்புள்ளதாகவும் மாற்றுவதற்காகவே என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக பொறுப்புகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை சேர்ப்பது வக்ஃபின் நிர்வாகத்தை மேம்படுத்துவதைக் காட்டிலும், இஸ்லாமிய சமூகத்தின் நலன்களை நலன்களின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதைப் பற்றியது" என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஆய்வாளர்கள் என்ன சொன்னார்கள்?

பாகிஸ்தானின் ஏ.ஆர்.ஒய் நியூஸில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ஆய்வாளர் டாக்டர் கமர் சீமாவும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பேசினார்.

"இது மத சார்பின்மை அல்ல, இது இந்து பெரும்பான்மைவாதம். இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசாங்கம் முத்தலாக்கை குற்றமாக்கியது இஸ்லாமியர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்று உங்களுக்கு தெரியும். இதேபோல, உத்தர பிரதேசத்தில் 'லவ் ஜிகாத்' பிரச்னை எழுந்தது. பின்னர் கர்நாடகாவில் ஹிஜாப் தடை பிரச்னை எழுந்தது. இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன. தர்காக்கள் மற்றும் மசூதிகளில் இஸ்லாமியர்களுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என்று இப்போது அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அந்த ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக இது கொண்டுவரப்பட்டது", என்றும் டாக்டர் கமர் சீமாவும் கூறினார்.

"நாங்கள் டிஜிட்டல்மயமாக்குகிறோம் என்று பெயர் கொடுக்கிறார்கள். நாங்கள் உங்களைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள், ஆனால் இவை இந்து பெரும்பான்மைவாத சிந்தனை ஆகும். நரேந்திர மோதி அரசாங்கம் இஸ்லாமியர்களை ஓரங்கட்ட நினைக்கிறது. அவர்கள் ஒரு புதிய வரலாற்றை எழுதுகிறார்கள். உண்மையில், அவர்கள் இந்தியாவை ஒரு இந்து நாடாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்", என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், வங்கதேசத்தை சேர்ந்த யூடியூபர் சுமன் கைஸ் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவின் தலைப்பில் அவர், "இந்தியாவின் வக்ஃப் சட்டத்திருத்தம் ஒரு சீர்திருத்தம் அல்ல, மாறாக இஸ்லாமியர் சொத்துகளின் கட்டுப்பாட்டை இன்னொருவரிடம் ஒப்படைக்கும் முயற்சி ஆகும்", என்று குறிப்பிட்டிருந்தார்.

"இந்த சொத்துகள் மீதான கட்டுப்பாட்டை இஸ்லாமியர்கள் தற்போது இழந்துள்ளனர். இந்துகள் போன்ற பிற சமூகங்களும் இஸ்லாமியர்களின் சொத்துகளை கட்டுப்படுத்த வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் பொறுப்பு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் பொறுப்பாகும்", என்றும் அவர் தெரிவித்தார்.

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் என்றால் என்ன? இந்தியாவில் எவ்வளவு வக்ஃப் சொத்து உள்ளது?

வக்ஃப் என்பது இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் "அல்லாவின் பெயரால்" அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தர்மத்திற்காக நன்கொடை வழங்கும் எந்தவொரு அசையும் அல்லது அசையா சொத்துகள் ஆகும்.

வக்ஃப் நல மன்றத்தின் தலைவர் ஜாவேத் அகமது கூறுகையில், "வக்ஃப் என்பது ஒரு அரபு வார்த்தையாகும். அல்லாஹ்வின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் ஆகிவிட்டால் அது என்றென்றும் அல்லாஹ்வின் பெயரிலேயே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது" என்றார்.

இந்திய உச்ச நீதிமன்றமும் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்த ஒரு தீர்ப்பில், 'ஒரு முறை ஒரு சொத்து வக்ஃப் ஆனவுடன் அது என்றென்றும் வக்ஃப் ஆகவே இருக்கும்' என்று கூறியது.

வக்ஃப் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ அல்லது வேறொருவருக்கு மாற்றவோ முடியாது.

இந்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் வக்பு சொத்துகளை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக, வக்ஃப் வாரியம்தான் மிகப்பெரிய அளவில் நிலத்தைக் கொண்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.