அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பென் சூ
- பதவி, பிபிசி வெரிஃபை
ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்துக்கும் இந்த 84 சதவிகிதம் வரி அமலாகும் என சீனா அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகளுக்கு எதிராக தேவைப்பட்டால் "கடைசி வரை போராடுவோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை "கொடுமையான நடைமுறைகளை" பின்பற்றுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் 6 அமெரிக்க நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சீனா இணைத்துள்ளது.
சீனாவின் பதிலடி வரி விதிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான நேரம் என குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் இந்த வர்த்தக மோதல் உலகப் பொருளாதாரத்தை என்ன செய்யும்?
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் எவ்வளவு?
இரண்டு பொருளாதார சக்திகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு சுமார் 585 பில்லியன் டாலர் (சுமார் 50,65,661 கோடி ரூபாய்கள்).
ஆனால், சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ததை விட (145 பில்லியன் டாலர்), அமெரிக்கா வெகு அதிகமாக (440 பில்லியன் டாலர்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
இதனால் அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக வித்தியாசமான 295 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா கடந்த 2024 ம் ஆண்டு சந்தித்துள்ளது. இந்தக் கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்கப் பொருளாதரத்தில் சுமார் 1 சதவிகிதத்துக்கு சமம்.
ஆனால், இந்த வாரம் முழுக்க டிரம்ப் பலமுறை கூறிய 1 டிரில்லியன் டாலர் அளவிலான பற்றாக்குறை என்பதை விட குறைவானதே.
ஏற்கெனவே டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவர் சீனாவின் மீது குறிப்பிடத்தக்க இறக்குமதி வரி விதித்திருந்தார். அவர் பதவிக் காலத்துக்குப் பின்பும் தொடர்ந்த அந்த இறக்குமதி வரிகளை ஜோ பைடன் அரசும் அதிகரித்தது.
இந்த வர்த்தகத் தடைகள் சேர்ந்து 21 சதவிகிதமாக அமெரிக்காவில் இருந்த சீன இறக்குமதியை சென்ற ஆண்டு 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.
இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் வர்த்தகத்துக்காக சீனாவை அமெரிக்கா நம்பி இருப்பது குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எனினும், சில சீனப் பொருட்கள் நேரடியாக அல்லாமல் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
உதாரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி தகடுகளுக்கு, 2018ல் டிரம்ப் நிர்வாகம் 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தது.
ஆனால், அதன்பிறகு சீனத் தயாரிப்பாளர்கள் தங்கள் சூரிய சக்தித் தகடுகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை (assembly operations) மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற இடங்களுக்கு மாற்றி முடிக்கப்பட்ட தயாரிப்புகளை அங்கிருந்தே அமெரிக்காவுக்கு அனுப்புவதன் மூலம் இறக்குமதி வரியைத் தவிர்க்கிறார்கள் என, 2023ல் அமெரிக்க வர்த்தகத் துறை ஆதாரங்களை சமர்ப்பித்தது.
அந்த நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் 'பரஸ்பர வரிகள்', அடிப்படையில் சீனாவில் உற்பத்தியான கணிசமான பொருட்களுக்கு அமெரிக்காவில் விலை ஏறும்.
சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்கள்
2024 இல் அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததில் முதன்மையானது சோயாபீன்ஸ் - சீனாவின் 44 கோடி பன்றிகளின் உணவாக அவை பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா சீனாவுக்கு மருந்துகளையும், கச்சா எண்ணெயையும் கூட ஏற்றுமதி செய்கிறது.
மறுபுறம் சீனாவிடம் இருந்து அமெரிக்கா மிக அதிக அளவிலான மின்னணு சாதனப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள் போன்றவற்றை வாங்குகிறது. மின்சார வாகனங்களுக்கு இன்றியமையாத தேவையான பெருமளவிலான மின்கலன்களும் (battery) சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் ஸ்மார்ட்ஃபோன் வகைகள் மிக முக்கியமானவை. இவை மொத்த இறக்குமதியில் 9 சதவிகிதத்தைப் பிடித்துள்ளன. இதில் பெரும்பகுதி, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்காக சீனாவில் தயாரிக்கப்படுபவை.
கடந்த சில வாரங்களில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இறங்குவதற்கு அமெரிக்கா சீனாவின் மீது விதித்திருக்கும் இறக்குமதி வரிகள் மிக முக்கிய காரணியாகும். கடந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
டிரம்ப் நிர்வாகம் பீஜிங்கின் மீது விதித்துள்ள 20 சதவிகித இறக்குமதி வரியின் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அமெரிக்காவில் கணிசமாக விலை ஏறும்.
எல்லாப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி – 100 சதவிகிதமாக உயர்ந்தால் – அதன் விளைவாக விலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம்.
சீனாவின் பதிலடி வரி விதிப்பால் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்து, இதேபோன்ற வழியில் சீன நுகர்வோரைத்தான் இறுதியாக பாதிக்கும்.
ஆனால், இறக்குமதி வரியைத் தவிரவும், இரண்டு நாடுகளும் வர்த்தகம் மூலமாக ஒன்றை ஒன்று சேதப்படுத்திக் கொள்வதற்கு பிற வழிகளிலும் முயற்சிக்கலாம்.
தொழில்துறைக்குத் தேவையான தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த உலோகங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காமல் செய்வதற்கான தடைகளை பெய்ஜிங் ஏற்படுத்தலாம்.
ராணுவ தெர்மல் இமேஜிங்கிலும், ரேடாரிலும் பயன்படுத்தப்படும் ஜெர்மானியம் மற்றும் கேலியம் இரண்டு பொருட்களின் விஷயத்திலும் சீனா இதை ஏற்கெனவே செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே ஜோ பைடன் தொடங்கிய சீனாவின் மீதான தொழில்நுட்ப முற்றுகையைத் தொடரலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மேம்பட்ட மைக்ரோசிப்கள் போன்ற சீனா இன்னமும் தயாரிக்க முடியாத பொருட்களின் இறக்குமதியை சீனாவுக்கு அமெரிக்கா கடினமாக்க முடியும்.
அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய விரும்பினால் சீனாவுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று கம்போடியா, மெக்ஸிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்த வாரம் குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ.
மற்ற நாடுகளை இது எப்படி பாதிக்கும்?
சர்வதேச நாணய நிதியத்தின் படி (ஐ.எம். எஃப்), அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு , அதாவது 43 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.
இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சி குறைந்தாலோ, அல்லது பொருளாதார மந்தநிலையை நோக்கித் தள்ளப்பட்டாலோ, அது உலக வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும்.
சர்வதேச முதலீடும் பாதிக்கப்படலாம்.
வேறு விளைவுகளுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு. அது தன் சொந்த மக்கள் தொகை நுகர்வதை விட மிக அதிகமான பொருட்களைத் தயாரிக்கிறது.
ஏற்கெனவே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உபரியாக உற்பத்தி செய்து வருகிறது - அதாவது தான் இறக்குமதி செய்வதை விட உலகின் பிற பகுதிகளுக்கு அது ஏற்றுமதி செய்கிறது.
மலிவாகக் கிடைக்கும் கடன்கள் போன்ற அரசு நிதி உதவிகள், உள்நாட்டு மானியங்கள் போன்றவற்றால் சலுகை பெறும் நிறுவனங்கள், அந்தப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
எஃகு இதற்கு ஒரு உதாரணம்.
இந்தப் பொருட்களை சீனா அமெரிக்காவுக்குள் நுழைக்க முடியவில்லை என்றால், சீன நிறுவனங்கள் இவற்றை உலகின் எங்கு வேண்டுமானாலும் 'தள்ளிவிடும்' ஆபத்து இருக்கிறது.
சில நுகர்வோருக்கு இதனால் நன்மை பயக்கும் என்றாலும், உலகெங்கும் இதே பொருட்களைத் தயாரிக்கும் மற்ற நாடுகளுக்கு சம்பளம் மற்றும் வேலை இழப்பை இது ஏற்படுத்தலாம்.
'லாபி' அமைப்பான யுகே ஸ்டீல், அதிகப்படியான எஃகு பிரிட்டன் சந்தைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளது.
முழுமையான சீன- அமெரிக்க வர்த்தகப்போர் பாதிப்பின் எச்சம், உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












