கட்டுக்குள் வருகிறதா ஆளுநர் அதிகாரம்? - மத்திய அரசு அடுத்து என்ன செய்யும்?
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து மசோத்தக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநர் பல மசோதாக்களுக்கான ஒப்புதலை வழங்காமல் காலம் தாழ்த்து வருகிறார் என தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துக் கொண்ட கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததே தீர்ப்பின் முக்கிய அம்சம்
சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த தீர்ப்பு வரையறுத்துள்ளது. இதுவே இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
ஒரு மசோதாவுக்கு குறித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு விரைவில்" என்ற வார்த்தைகளே அரசியல் சாசன சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆளுநர்கள் சில நேரங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ' காலவரையற்ற' நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த தீர்ப்பு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சில விவகாரங்களில் ஒரு மாதத்துக்குள்ளும் சில விவகாரங்களில் மூன்று மாதங்களுக்குள்ளும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறது. இது தீர்ப்பின் முக்கியமான அம்சமாகும்.
இரண்டாவது முறை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது
ஆளுநர் அரசியல் சட்ட பிரிவு 200- ன் கீழ் செயல்படுகிறார். அதன்படி ஒரு மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை அவர் நிராகரிக்கலாம் அல்லது ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
ஒரு மசோதாவை குடியரசு தலைவருக்குஅனுப்பும் வாய்ப்பு அந்த மசோதா முதல் முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் போது தான் உள்ளது. இரண்டாவது முறையாக அதே மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டால் அதை அனுமதிப்பது தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்திலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசன சட்டத்தை மீறி நடந்துள்ளார். இந்த தீர்ப்பு அதை சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது சட்டவிரோதம் என தீர்ப்பு கூறுகிறது. அது மட்டுமில்லாமல் பிரிவு 142 -ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பத்து மசோதாக்களையும் உச்சநீதிமன்றம் நிறைவேற்றுகிறது.
இந்த மசோதாக்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வரை நியமனம் செய்யும் வகையிலான மசோதாக்கள் ஆகும். அவை ஆளுநருக்கு ஒத்து வராதவை, அவரை பாதிக்கக் கூடிய விஷயம் என்பதால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
திமுகவுக்கு முக்கியமான தீர்ப்பு
திமுகவுக்கு இது மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். எழுதிக் கொடுத்த ஆளுநர் உரையை படிக்காதது, திராவிடத்தை விமர்சிப்பது, தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை, மத ரீதியாக பல விஷயங்களை பேசியது என தமிழக ஆளுநர் சலசலப்பை ஏற்படுத்தி ஆளும் அரசுக்கு ஒரு சங்கடமாக இருந்தார்.
நிர்வாக ரீதியாக இன்று பல்கலைக்கழகங்கள் பல துணை வேந்தர் இல்லாமல் செயல்பட இயலாமல் இருக்கின்றன.
ஆளுநர் ஆளுங்கட்சியுடன் இசைந்து செயல்பட்டு, ஆளுங்கட்சிக்கு வழிகாட்டியாக ஆலோசகராக, நண்பராக செயல்பட வேண்டும், எதிரியாக செயல்படக் கூடாது என்பதையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டி காட்டி இருக்கிறது.
தொடர்ந்து மத்திய அரசால் நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாதிக்கப்படும் தமிழக அரசு, அவற்றுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்ற மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்
அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, அரசியல் சாசன சட்டம் ஆளுநருக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்பது தெளிவுப்படுத்தப்பட்டது. முதல்வர் தலைமையில் இருக்கும் அமைச்சரவை கூறுவதன் அடிப்படையில் ஆளுநர் செயல்பட வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகு யாரை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்பதில் சில அதிகாரமும் சட்டமன்றத்தை கூட்டுவதில் சில அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு. அதைத் தவிர வேறு எந்த முடிவும் எடுக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. அமைச்சரவை தீர்மானங்கள், சட்டமன்ற மசோதாக்கள் ஆகியவை இரண்டாவது முறையாக அனுப்பப்படும் போது கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவை அரசியல் நிர்ணய சபையால் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் ஆளுநர்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு விடை அளித்திருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் வழிகாட்டுதல் ஆகவும் நாளை ஒரு சட்டமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு அடுத்த என்ன செய்யக்கூடும்?
டெல்லி அரசுக்கு தான் அதிகாரிகளை மாற்றக்கூடிய அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் கூறிய போது, இல்லை துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்று சட்ட திருத்தத்தை பாஜக கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத பாஜக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டுதான் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாஜக தலைமையிலான மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும். எனவே மத்திய அரசு சீராய்வு மனு தொடுக்க வாய்ப்பு உள்ளது, அல்லது சிறப்பு சீராய்வு மனு தொடுக்கலாம்.
அரசியல் சாசன சட்டத்தில் ஆளுநர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதற்கு மாற்றாக காலக்கெடுவை இந்த தீர்ப்பு வகுத்துள்ளது. இதுபோன்ற மாற்றத்தை கொண்டு வர நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு கூறலாம். எவ்வாறாயினும் உச்ச நீதிமன்றம் கூறக்கூடிய விஷயங்கள் எதிர்காலத்தில் சட்டங்களாக மாறக்கூடியதாகவே இருந்திருக்கின்றன.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் தீர்மானங்கள், நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் இவற்றையெல்லாம் ஜனாதிபதி கையெழுத்திடாமல் காலதாமதம் செய்தால் பிரதமர் குரல் எழுப்பாமல் இருப்பாரா? அதே போல தான் இதுவும்.
தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் என்ன மாற்றம் ஏற்படும்?
பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற பொறுப்பை முதல்வர் எடுத்துக் கொள்வார். பல்கலைகழக தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதி ஒருவர் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் கூறுகிறார். இது போன்ற விவகாரங்களில் வேந்தர் அதாவது முதல்வர் இனி முடிவு எடுப்பார். ஆளுநரை முற்றிலுமாக புறக்கணிக்க மாட்டார்கள், ஆளுநரின் பிரதிநிதி ஒருவரும் குழுவில் இடம் பெற்றிருப்பார்.
பாஜக கூட்டணி கட்சியான பாமக இந்த தீர்ப்பை வரவேற்பதன் பின்னணி என்ன?
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி இருக்கிறது. ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியை விமர்சித்து பேச வேண்டிய ஆளுநருக்கு கிடையாது. கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமில்லை, பாஜகவிலும் கூட சிலருக்கு அவரது செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாமக இதனை வரவேற்பதில் ஆச்சர்யம் இல்லை.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



