பீனிக்ஸ் ரோபோ: ஜவுளிக் கடையில் துணி மடிக்கும் இந்த ரோபோ வீட்டு வேலைக்கு தயாராவது எப்போது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பென் மொரிஸ்
- பதவி, வணிகத் தொழில்நுட்பப் பிரிவு ஆசிரியர்
மனிதர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கற்பனைக்கு வருபவை எல்லாம், மொபைல் போன், கார் மற்றும் வீடுகள் தானே ?
இவை அனைத்தும் பெரிய சந்தைகள் தான் ஆனால், வரும் தசாப்தங்களில் தந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒரு புதிய பொருள், இவை அனைத்தையும் சிறுமைப்படுத்தும் என்கிறார் சான்ச்சுரி ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜியோர்டி ரோஸ்.
கனடாவின் வான்கூவர் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், பீனிக்ஸ் என்கிற மனித உருவ ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறது.
இந்த ரோபோ தயாரான பின், மக்களுக்கு என்ன வேண்டும், இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது ஆகியவற்றை புரிந்துகொண்டு, மக்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டிருக்கும்.
“மனித உழைப்புச் சந்தை தான் எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டியது. வணிகம் மற்றும் தொழில்நுடப் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒரு சந்தையாக மனித உழைப்பு சந்தை இருக்கும். அது நாம் செய்ய விரும்பும் அனைத்து விஷயங்களும் ஆகும்,” என்று அவர் கூறுகிறார்.
அவர் சொல்வது குறித்து நாம் ஆழமாக யோசிப்பதற்குள், அவர் பேசியதை அவர் தெளிவுபடுத்துகிறார். “நாம் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வெகுதூரம் செல்ல வேண்டும்” என்கிறார்.
நமது வீடுகளில் ரோபோ எப்போது துணி துவைக்கவும், அறைகளை சுத்தம் செய்யவும் தயாராகும் என்ற கேள்விக்கு ரோஸ் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், அந்தத் துறையில் உள்ள மற்ற வல்லூநர்களிடம் நாம் பேசியபோது, அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இது சாத்தியப்படும் என்கிறார்கள்.
உலகெங்கிலும் சுமார் 12 நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
ஐக்கிய இராச்சியமான யூகே.யில் டைசன்(Dyson) என்ற நிறுவனம் வீட்டு வேலைகள் செய்வதற்கான ஏஐ(AI) மற்றம் ரோபோட்டிக்ஸில் முதலீடு செய்துள்ளது.
மனித ரோபோக்கள் மீதான கவனம் செலுத்தும் நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images
எலோன் மஸ்க்கின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா சந்தையில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கலாம்.
அந்நிறுவனமும் தற்போது மனித உருவ ரோபோ தயாரிப்பு பணியில் இருக்கிறது. இதுகுறித்து பேசிய மஸ்க், சில வருடங்களில் விற்பனைக்காக சந்தைக்கு வரும் என்கிறார்.
ஆனால், அது சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு நம்மால் என்ன சொல்ல முடியும் என்றால், செயற்கை நுண்ணறிவின் அடுத்தக்கட்டம் மனித உருவிலான ரோபோ தான்.
“தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்கிறது. செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன,” என்கிறார் ரோஸ்
கடந்த ஆண்டு சாட்ஜிபிடி.யின் ((ChatGPT) ஒரு சக்தி வாய்ந்த வடிவம் பொது வெளியில் வெளியிட்ட பின்னர், முக்கிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன.
ஆனால், பயனுள்ள பணிகளை மேற்கொள்ளும் ஒரு ரோபோவை இயக்குவதற்கான ஏஐ.ஐ உருவாக்குவது புதிதாக இருக்கும். அதேவேளையில், அது மிகவும் கடினமானது.
சாட்ஜிபிடி(ChatGPT) மற்றும் அதன் போட்டி நிறுவனங்களை போல அல்லாமல், மனித உருவ ரோபோக்கள் நிஜ உலகைப்பற்றி புரிந்துகொண்டு, உலகில் உள்ள பொருட்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி தொடர்புகொண்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும்.
ஏஐ.யினால் இயங்கும் மனித ரோபோக்கள்

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் மிகவும் எளிமை எனக் கருதக்கூடிய வேலைகள் கூட, மனித உருவிலான ரோபோக்களுக்கு கடினமானவை.
உதாரணமாக, ஒரு ரோபோ பரிசோதனையில் சான்ச்சுரி நிறுவனத்தின் பீனிக்ஸ் ரோபோ ஒரு கனடாவில் ஜவுளிக்கடையில் துணிகளை மடித்து பாலித்தீன் பைகளில் வைத்துக்கொண்டிருக்கிறது.
“இப்படி ஏஐ.,யினால் செயல்படும் மனித உருவிலான ரோபோக்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. பாலித்தீன் பைகள் மிகவும் இலகுவாக இருக்கும், அவை வெளியில் இருந்து பார்க்கக் கூடியதாகவும் இருக்கும், அந்த பையை திறக்கும் பகுதி ஒன்று இருக்கும்.
“மனிதர்கள் நாம் இயல்பாக பையின் திறப்பு பகுதியை பிரிந்த பின், ஒரு கையினால் அந்த பையில் போட வேண்டிய பொருளை எடுத்து உள்ளே வைப்போம்,” என்கிறார் ரோஸ்.
ஆனால். ஒரு மனித உருவிலான ரோபோவை இதற்கு தயார்படுத்துவது மிக மிகக் கடினம் என்கிறா் ரோஸ்.
சான்ச்சுரி நிறுவனம் உருவாக்கி வரும் பீனிக்ஸ் ரோபோக்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனம் பயிற்சியளிக்கிறது. அந்த பயிற்சியின் போது, ஒரு குறிப்பிட்ட பணியை படம் பிடித்து, முழு நிகழ்வையும் டிஜிட்டல் மயமாக்கும்.
அந்த டிஜிட்டல் தகவல்களின் அடிப்படையில், ஒரு மெய்நிகர் சூழலை உருவாக்கி, அதில் அனைத்து பொருட்களையும் கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித ரோபோ, அந்த மெய்நிகர் சூழலில் பணியைச் செய்ய முடியும். இது ஒரு மில்லியன் முறை கூட பயிற்சி செய்யலாம். எப்போது அதனை தயாரிக்கும் நபர், நிகழ்காலத்தில் அந்த மனித உருவ ரோபோவால் செயல்பட முடியும் என நினைக்கிறாரோ அப்போது, நிஜ உலகில் முயற்சிக்க அனுமதிக்கப்படும்.
இந்த வழியில், பீனிக்ஸ் ரோபோ சுமார் 20 வகையான பயிற்சிகள் பெற்று வருகிறது.
இதுகுறித்து மேலும் பேசிய ரோஸ், “வீட்டு வேலைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்ச்சி பெற்றால், அவை வணிகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்,” என்கிறார்.
ரோபோவுக்கு தொடு உணர்வைக் கொடுப்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று குறிப்பிடும் ரோஸ், ஒரு பொருளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை ரோபோக்கள் அறியும் என்கிறார்.
அனைத்து சூழலிலும் ரோபோவால் வேலை செய்ய முடியுமா ?

பட மூலாதாரம், Getty Images
ஒரு வீட்டில் அல்லது ஒரு பணியிடத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமாளிக்கக் கூடிய ஒரு ரோபோவை உருவாக்க இன்னும் பெரிய அளவிலான வேலைகள் செய்யப்பட வேண்டும்.
"நீங்கள் ஒரு ரோபோவை கட்டமைக்கப்படாத ஒரு சூழலில் வைத்துவிட்டு, அதை சுற்றி வரச் சொல்ல முடியாது. இந்த நேரத்தில் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் அப்படி செய்யச் சொல்லி கேட்பது மிகவும் அதிகம்" என்கிறார் ரோபோட்டிக் மோஷன் இன்டலிஜென்ஸ் லேப்பை(Robotic Motion Intelligence Lab) நிறுவிய பேராசிரியர் அலிரேசா முகமதி.
ஒரு ரோபோவிற்கு செயற்கை நுண்ணறிவை வைத்த மில்லியன் முறை பயிற்சி கொடுத்தாலும் அது நிஜ உலகில் அதுவரையில் பார்த்திராத ஒன்றை சந்திக்கலாம் என்று கூறும் அவர்,“அப்போது அது கணிக்க முடியாத, சில நேரங்களில் ஆபத்தான முறையில் கூட செயல்படுவதற்கான வய்ப்புகள் உள்ளது,” என்கிறார்.
மனிதர்களுக்கு சூழல் மற்றும் அதன் விளைவுகள் குறித்த உணர்வும் புரிலும் உள்ளது, ஆனால், அது ரோபோவிடம் இருக்காது என ரோபோக்களிடம் உள்ள பிரச்னைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார் அலிரேசா முகமதி.
"அடுத்த பத்து ஆண்டுகளில், சில வழிகாட்டுதலுடன் நடக்கக் கூடிய ரோபோக்கள் நம்மிடம் இருக்கலாம், ஆனால் முற்றிலும் கட்டமைக்கப்படாத சூழலில் ரோபோக்களை கொண்டு வர வாய்ப்பு இல்லை,," என்கிறார் பேராசிரியர் முகமதி.

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் வேலையை ரோபோக்கள் செய்ய முடியுமா ?
ஆனால் அந்த சவால்களை சமாளிக்க முடிந்தால், மனித ரோபோக்கள் தற்போது மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்ய ஆரம்பிக்க முடியுமா?
இதுகுறித்து பேசிய ரோஸ், பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அவருடைய ரோபோக்கள் ஒரு நாள் அந்த வேலைகளை செய்ய முடியும் என்கிறார்.
ஸ்டீவர்ட் மில்லர் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையான நேஷனல் ரோபோடேரியத்தின் தலைமை நிர்வாகி ஆவார், இது AI மற்றும் ரோபாட்டிக்ஸ் மீது கவனம் செலுத்துகிறது.
இதுகுறித்து பேசிய நேஷனல் ரோபோடேரியத்தில் தலைமை நிர்வாகியான ஸ்டீவர்ட் மில்லர்,"எதிர் காலத்தில் மனிதர்கள் செய்த வேலைகளைச் செய்ய ரோபோக்கள் இருக்கப் போகின்றன. அதனை தவிர்க்க முடியாது. அப்படியானால், அதன் அர்த்தம் என்ன?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"நாம் சில வலிகளை சந்திப்போம். ஆனால் அதைப் பற்றி சிந்திக்கும்போது, இயந்திரங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றின் மீது நேரத்தை செலவிடாமல், மனிதர்கள் சிறப்பாகச் செய்வதை வலியுறுத்த கவனம் செலுத்த ஆரம்பிக்கலாம்," என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












