இந்திய தேசியக்கொடி முன் பாகிஸ்தான் வீரர் நின்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். உலக தடகளப் போட்டியில் அவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக, ஈட்டி எறிதலில் அவர் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தார்.
இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. செக் குடியரசு வீரர் யாகூப் வாட்லெச் வெண்கலம் வென்றார்.
உலக தடகளத்தில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதையும் தாண்டி, பரிசளிப்பு விழாவில் அவரும், பாகிஸ்தான் வீரரும் இந்திய தேசியக் கொடி முன்னே நின்று புகைப்படம் எடுத்த நிகழ்வு அதிக கவனம் பெற்றுள்ளது. அப்போது என்ன நடந்தது?
உலக தடகள சாம்பியன்ஷிப்
ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியிருந்த 24 வயதேயான நீரஜ் சோப்ரா பங்கேற்றதால் இந்தியர்கள் அனைவரின் கவனமும் இந்த போட்டியின் மீது திரும்பியிருந்தது.
நீரஜ் சோப்ரா மீண்டும் சாதிப்பார் என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல், உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் அசத்தினார் நீரஜ் சோப்ரா. கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அவர் இம்முறை முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
சரிவில் இருந்து மீண்ட நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் காட்டிலும் பின்தங்கியே இருந்தார். ஆனாலும், சுதாரித்துக் கொண்டு அடுத்த சுற்றிலேயே மீண்டு வந்தார். உடலில் இருந்த சக்தியை ஒன்றுதிரட்டி, முழு வேகத்தில் அவர் வீசியெறிந்த ஈட்டி 88.17 மீட்டர் தொலைவில் போய் விழுந்தது. இது நீரஜ் சோப்ராவின் சிறந்த முதல் 5 செயல்பாடுகளில் ஒன்றாக அமையவில்லை. ஆனாலும், இதுவே இந்தப் போட்டியில் ஒரு வீரர் அதிக தூரம் ஈட்டிய தூரமாக அமைந்தது.
இதன் மூலம் போட்டியில் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வசமாக்கினார். காமன்வெல்த் போட்டிகளில் 90 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமால் இம்முறை 87.52 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. செக் குடியரசு வீரர் யாகூப் வாட்லெச் 86.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா ஐந்தாவது இடத்தையும், டி.பி.மானு ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றிக்குப் பிறகு நீரஜ் என்ன சொன்னார்?
தங்கம் பதக்கத்தை வென்ற பின்னர் பேசிய நீரஜ் சோப்ரா, "என்னால் அதிக தூரம் ஈட்டி எறிய முடியும் என்று நினைத்தேன். முதல் சுற்றில் சில உத்தி ரீதியான பிரச்னையால் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அது மோசமாக அமைந்துவிட்டது. அது நடக்கவே செய்யும். ஆனால், இன்னும் அதிகமாக நான் முயற்சித்தேன். என்னுடைய காயம் குறித்தும் சிந்தித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருந்தது. என்னுடைய செயல் திறன் 100 சதவீத அளவில் இல்லை. நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் சிறப்பாக உணர மாட்டேன். உடல் தகுதிக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்." என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக நள்ளிரவிலும் கண் விழித்திருந்த இந்தியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நான் வென்ற இந்த தங்கப்பதக்கம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உரியது. ஒலிம்பிக்கில் சாம்பியனான நான் தற்போது உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறேன். இந்தியர்கள் எதையும் சாதிக்க முடியும்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மூவர்ணக் கொடியின் கீழ் பாகிஸ்தான் வீரர்
ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஆகியோர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியான பின் அவர்களைப் பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது.
போட்டி முடிந்தபின் வெற்றி பெற்ற மூவரும் இணைந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது நடந்த இந்த விஷயம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரும் அளவு பேசப்பட்டு வருகிறது.
உண்மையில், செக் குடியரசு நாட்டில் ஜேக்கோப் வால்டெக் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் அவர்களுடைய தேசிய கொடிகளுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதற்கிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமையும் புகைப்படம் எடுக்க அழைத்தார். ஆனால், அர்ஷத்திடம் பாகிஸ்தான் தேசிய கொடி இல்லாததால் அவரும் இந்திய தேசிய கொடியுன் நீரஜ் சோப்ரா எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இடம்பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.
நெட்டிசன்கள் பாராட்டு
இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிரும் ஏராளமான நெட்டிசன்கள் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீமை புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் பாகிஸ்தானியர் ஒருவர் பகிர்ந்த பதிவில், "அர்ஷத் நதீமை இந்த அழகிய புகைப்படத்தில் இடம்பெற நீரஜ் சோப்ரா அழைத்தார். அண்டை நாட்டவரிடையே வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக நாம் அன்பைப் பரப்பவேண்டும்," என எழுதியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொருவர் தமது பதிவில், "என்ன ஒரு அழகான படம். இருநாடுகளைச் சேர்ந்த இரு ஹீரோக்கள்," எனக்குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER/NAWAZ
இதே காட்சிகளைப் பகிர்ந்துள்ள யுனைடெட் இந்தியா என்ற எக்ஸ் சமூக வலைதளப் பதிவாளர், "வெற்றியைக் கொண்டாட அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ரா அழைத்தார். வெறுப்பைப் பரப்புங்கள்- அன்பை அல்ல," எனப்பதிவிட்டுள்ளார்.
இரண்டு வீரர்களும் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் படமும் இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள ஒரு பதிவர், "மிகவும் அருமையான வேலையைச் செய்துள்ளீர்கள் நீரஜ் மற்றும் அர்ஷத். இதே போல் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையும் பகிர்ந்துகொள்வதைக் கடைபிடியுங்கள், " எனப்பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












