ரிஷப் பந்த் உயிரை காப்பாற்றிய இளைஞர் இன்று உயிருக்குப் போராட்டம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images/BBC
- எழுதியவர், ஷெபாஸ் அன்வர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக முசாஃபர்நகரில் இருந்து
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த 2022ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கியபோது, அவருக்கு உதவிய முசாஃபர் நகரைச் சேர்ந்த ரஜத் என்ற இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜத்தும் அவரது காதலி எனக் கூறப்படும் பெண்ணும் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் அந்தப் பெண் இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
ரஜத்தும் அவரது குடும்பத்தினரும், தங்கள் பெண்ணைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக, பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இருப்பினும், ரஜத்தின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தற்கொலைக்கு முயல்வதற்கு முன், இருவரும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்ததாகவும், அதில் 'அவர்கள் ஒன்றாக வாழ்வது மற்றும் இறப்பது குறித்துப் பேசுவது போல' காணப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

என்ன நடந்தது?
பிப்ரவரி 11ஆம் தேதியன்று, உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் உள்ள புர்காஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புர்காஜி காவல் நிலைய பொறுப்பாளர் ஜெய்வீர் சிங் கூறுகையில், "ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மஜ்ரா புச்சா பஸ்தியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தச் சம்பவத்தில் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரஜத்தின் உடல்நிலை சீராக உள்ளது. உடற்கூராய்வு அறிக்கை மற்றும் உடல் உறுப்புகள் பரிசோதனை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
இருப்பினும், இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து எந்த முறையான புகாரும் வரவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.
சதர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு குமார், "இது தற்கொலை வழக்கு. இருவரும் ஒருவரையொருவர் நேசித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்," என்றார்.
ரஜத்தின் கிராமத்தில் பட்டியல் சாதி, காஷ்யப், சைனி, கும்ஹார் மற்றும் பிற சாதிகளைச் சேர்ந்த சுமார் 450 பேர் வசிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கிராமத் தலைவர் கோபால் சிங், "இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் அவர்களது குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கிராமத்தில் அவர்களுடைய காதல் விவகாரம் குறித்த பேச்சு உள்ளது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர், திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு பிப்ரவரி 11ஆம் தேதியன்று நடத்தப்பட்டது," என்று தெரிவித்தார்.
பெண் வீட்டாரின் குற்றச்சாட்டுகள் பற்றி ரஜத் குடும்பத்தினர் கூறுவது என்ன?

உயிரிழந்த பெண்ணின் தந்தை மின்சார ரிக்ஷா ஓட்டுகிறார், அதோடு காவலாளியாகவும் வேலை செய்கிறார்.
"என் மகளுக்கு எந்தவித காதலும் கிடையாது. அவள் பானிபட்டில் இருக்கும் என் உறவினர்களுடன் தங்கி மின்சாரத் துறையில் வேலை செய்து வந்தாள். அவளுக்கு மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக சமீபத்தில்தான் அங்கிருந்து வீட்டிற்கு வந்தாள். என் மகளைக் கடத்திச் செல்வதாக மிரட்டியது ரஜத்தும் அவரது குடும்பத்தாரும்தான்," என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமானவர். உயிரிழந்த பெண்ணுக்கு சஹாரன்பூரில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
அவரின் தாயார் கோட்வாலி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் நகல் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற எந்தப் புகாரும் தங்களிடம் கொடுக்கப்படவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரஜத்தின் குடும்ப உறுப்பினர்களை கிராமத்தில் காணவில்லை. ரஜத்தின் செல்போனும் அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிபிசி ரஜத்தின் தம்பி ஓம் குமாருடன் தொலைபேசியில் பேசியது.
ஓம் குமார் உத்தராகண்ட் மருத்துவமனையில் தனது சகோதரர் ரஜத்துடன் இருக்கிறார். அவர் பேசியபோது, "அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். தற்கொலைக்கு முயலும் முன்பு, அந்தப் பெண்ணும் ரஜத்தும் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், அவர்கள் குடும்பத்தினர் தங்கள் காதலுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறுகின்றனர்," என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய ஓம் குமார், "இந்த இருவருக்கும் இடையே காதல் இருப்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ரஜத்திற்கு திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது," என்றும் கூறினார்.
ரிஷப் பந்துக்கு உதவியதன் மூலம் பிரபலமான ரஜத்
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று, உத்தராகண்ட் எல்லையான புர்காஜியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்துக்கு உள்ளானார். அப்போது, உள்ளூர் சர்க்கரை ஆலையில் வேலை செய்த ரஜத்தும் அவரது நண்பர் நிஷுவும் காரிலிருந்து ரிஷப் பந்தை வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றினர்.
இதன் பின்னர், பல தலைவர்கள் இருவரையும் கௌரவித்தனர். ரிஷப் பந்த் ஒரு ஸ்கூட்டியை அவருக்குப் பரிசாக வழங்கியதாக ரஜத்தின் சகோதரர் ஓம் குமார் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், RISHABH PANT/X
ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில், தனது நன்றியை அந்த இரு இளைஞர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
"விபத்தின்போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும், நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் சென்றடைவதை உறுதி செய்துள்ளார்கள். ரஜத் குமார், நிஷு குமார் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்," என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நாளை நினைவுகூர்ந்து பேசிய நிஷு, "அந்த நாளை எப்படி மறக்க முடியும். கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதை நானும் ரஜத்தும் கண்டதும், உடனே ஓடிச் சென்று உதவினோம். காரில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அதையெல்லாம் செய்தோம். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் உயிரைக் காப்பாற்ற நாங்கள் உதவியுள்ளோம் என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டோம்," என்று கூறுகிறார்.
ரஜத் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.
இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து முறையான புகார் கிடைத்தால், விசாரணை இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படும் என்று போலீசார் கூறுகின்றனர்.
முக்கியத் தகவல்
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












