ஆபாச வெப்கேம் பெண்ணின் படத்தை வைத்து 'போலி காதல்' - கோடிக்கணக்கில் மோசடி

பட மூலாதாரம், Getty Images
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரத்தின் புகைப்படங்களை பயன்படுத்தி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அதிகம் பேர் இந்த காதல் மோசடியில் சிக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வனேசாவுடன் தங்களுக்கு உறவு இருப்பதாக கருதும் வெவ்வேறு ஆண்களிடமிருந்து வனேசா ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பெறுகிறார்.
இந்த ஆண்களில் சிலர் வனேசா தங்கள் மனைவி என்று பெருமைப்படுகிறார்கள்.
அந்த செய்திகளை அனுப்பும் பல ஆண்கள் கோபமாகவும் சற்றே குழப்பமாகவும் உள்ளனர். வாழ்க்கைச் செலவுகள், மருத்துவமனை கட்டணம் அல்லது உறவினர்களுக்கு உதவ அவருக்கு அனுப்பிய பணத்தைத் திருப்பித் தருமாறு அவர்கள் கோருகின்றனர்.
ஆனால் அதெல்லாம் பொய்.
அந்த மனிதர்களை வனேசாவுக்கு தெரியவே தெரியாது. அவரது அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க அவரது முழுப் பெயரையும் இங்கு எழுதவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2000 - களின் நடுப்பகுதியில் இருந்து, ஆன்லைன் காதல் மோசடிகளில் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் பயன்படுத்தப்படுகின்றன. வனேசா ஆபாசத் திரைப்படத்துறையில் பணிபுரிந்த காலம் அது.
வனேசாவின் பெயர் மற்றும் கடந்தகால புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி ஆன்லைன் சுயவிவரங்கள் மூலம் இத்தகைய பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. காதல் மோசடிகளின் மொழியில் இது 'கைட் ஃபிஷிங்' என்று அழைக்கப்படுகிறது.
பணத்தைத் திரும்பக் கோரும் ஆயிரக்கணக்கான மெசேஜ்களும் ட்ரோல்களும் வனேசாவை ஆட்டிப்படைத்தன.
கடந்த கால கதை
"அந்த செய்திகள் என்னை மனச்சோர்வடையச் செய்தன. எனது படங்கள் இல்லையென்றால், இந்த மனிதர்கள் என்னை இந்த மோசடிக்காக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று என்னை நானே நொந்துகொள்ள ஆரம்பித்தேன்."
வனேசா சுமார் எட்டு வருடங்கள் 'கேம் கேர்ளாக' (இணையத்தில் வெப்கேம் மூலம் ஆபாசம்) பணியாற்றினார்.
முதலில் கொஞ்சம் வெட்கமாக இருந்ததால், ஜெனீசா பிரேசில் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்."அது (கேம்கேர்ள்) நான் அல்ல, ஜெனீசா. அதனால் நான் வெட்கப்படக் கூடாது" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
அங்கு பிறந்த காரணத்தால் மட்டும் பிரேசிலை தன் பெயரில் அவர் வைத்துக்கொள்ளவில்லை. இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தைகளில் பிரேசிலும் ஒன்று என்பதும் இதற்கான ஒரு காரணம்.
அந்த நேரத்தில் இந்த முடிவு சரியானது என்று தான் கருதியதாக வனேசா கூறினார்.
"நான் அந்த பெயரை வெறுக்கிறேன், ஆனால் அது எனக்கு மிக விரைவாக பிரபலமடைய உதவியது."
மோசடி வெளியானது எப்படி?
சிறிது காலம் வனேசாவுக்கு எல்லாம் நன்றாகவே இருந்தது. வனேசா பாலியல் பேச்சு மற்றும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்காக நிமிடத்திற்கு 20 டாலர் வரை ஊதியம் பெற்றார், மேலும் அவர் தன்னை விரும்புபவர்களுடன் அந்த உறவுகளை முழுமையாக அனுபவித்தார்.
"நான் அவர்களை கவர விரும்பினேன். நான் அவர்களை மகிழ்விப்பேன், அவர்கள் என் மீது பைத்தியம் ஆகிவிடுவார்கள்."
தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து வந்ததாக வனேசா கூறுகிறார். மேலும் அவர் தனது சொந்த வலைத்தளத்தை வைத்திருந்தார். அவர் ஒரு வெற்றிகரமான பிராண்டாக ஆன்லைனில் மிகவும் பிரபலமாக இருந்தார்.
ஆனால் 2016 இல் அவரது ஆன்லைன் சுயவிவரம் மீது மக்களின் ஆர்வம் குறைந்தது.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் ஒரு சாதாரண குடியிருப்பில் வசித்து வந்த வனேசாவை தனது 'பாட்காஸ்ட் லவ்' நிகழ்ச்சிக்காக கண்டுபிடிக்க பிபிசிக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆனது.
ஆன்லைன் உள்ளடக்கத்தை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களில் ஒன்று, மோசடி செய்பவர்களை நிறுத்தும் முயற்சி என்று அவர் பிபிசியிடம் கூறினார். "எந்த ஒன்றையும் மீண்டும் பயன்படுத்த அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க நான் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.
ஒரு லைவ் ஷோவின் போது ஒரு நபர் தன்னை அவரது கணவர் என்று சாட்டில் போஸ்ட் செய்தபோது , இந்த மோசடி குறித்து வனேசா முதலில் அறிந்தார். அந்த நபர் தனது கருத்தை வலியுறுத்தி, வெப்கேமராவில் நிகழ்ச்சிகள் செய்வதை நிறுத்துவதாக ஜெனீசா உறுதியளித்ததாக அவரிடம் கூறினார்.
வனேசா முதலில் அதை ஒரு நகைச்சுவை என்று நினைத்தார். இருப்பினும் ஒரு மின்னஞ்சல் அனுப்பும்படி அவரிடம் சொன்னார்.
முன்வந்த பலர்
ஆனால் இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை. இதுபோன்ற கோரிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர் முன் வந்துகொண்டே இருந்தனர். நிகழ்ச்சிகளின் போது கருத்துக்களை இடுகையிடுவது மட்டுமல்லாமல், அவரது அடையாளத்தை நிரூபிக்குமாறு பலமுறை கோரினார்கள்.
அந்த மோசடியாளர்கள் அந்த நேரத்தில் பல விசித்திரமான கோரிக்கைகளையும் முன்வைத்தனர். சிவப்பு தொப்பி அணிவது அல்லது மோசடியில் பயன்படுத்தக்கூடிய புகைப்படங்களைக் கோருவது போன்ற கோரிக்கைகள் அதில் அடங்கும்.
தொடர்ந்து வந்த இதுபோன்ற கருத்துகள் மற்றும் மின்னஞ்சல்கள் அவரது மன அழுத்தத்தை அதிகரித்தன. இது அவரது வேலையை பாதித்தது.
"நான் இதையெல்லாம் ஒரு பயங்கரமான கனவு என்று நினைத்தேன். அவர்கள் அனைவரும் என்னை மிகவும் மோசமானவளாக கருதினார்கள். ஆனால் என்ன செய்வது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை."என்று அவர் தெரிவித்தார்.
முதலில் அவர் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பதிலளிக்க முயன்றார். ஒவ்வொரு நாளும் இதற்கு பல மணிநேரம் செலவானது. பின்னர், இந்த வேலையை அவரது கணவர் எடுத்துக் கொண்டார்.
"அப்போது என் கணவர் என் மேனேஜராக இருந்தார். அவர் செய்திகளைக் கண்காணிக்கத் தொடங்கினார். மோசடியில் இழந்த பணத்திற்கு நான் பொறுப்பல்ல என்று இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் சொல்லத்தொடங்கினார்.” என்று அவர் குறிப்பிட்டார்.
"அந்த நபர்கள் மோசடி செய்பவர்களுக்கு அனுப்பிய பணத்தை நான் பெற்றிருந்தால், நான் இன்று கோடீஸ்வரியாக இருந்திருப்பேன். இந்த சிறிய குடியிருப்பில் உட்கார்ந்திருக்க மாட்டேன்" என்று அவர் மேலும் கூறினார்.
பல ஆண்களுக்கு பெண்களை கவனித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதனால் தான் இதுவரை சந்திக்காத ஒருவருக்குக்கூட அவர்களால் பணம் அனுப்ப முடியும் என்றும் வனேசா கூறுகிறார்.
"அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும், யாரோ ஒருவர் தங்களைக் காதலிக்கிறார்கள் என்று உணர்ந்ததால், அவர்கள் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மோசடியால் பாதிக்கப்பட்டவரின் கதை
இத்தாலியரான ராபர்டோ மரினி, 'போலி' வனேசாவால் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவர்.
முதலில் அவர் ஃபேஸ்புக்கில் ஒரு அழகான இளம் பெண்ணிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், அந்தப்பெண் தன்னை ஹானா என்று அழைத்துக்கொண்டார். சார்டினியா தீவில் வணிகத்தில் வெற்றி பெற்றதற்காக அவரை வாழ்த்தினார்.
மூன்று மாதங்கள் வரை படங்கள் மற்றும் காதல் செய்திகளை பரிமாறிக்கொண்ட பிறகு ஹானா அவரிடம் பணம் கேட்க ஆரம்பித்தார்.
முதலில் இது "போன் வேலை செய்யவில்லை, சரி செய்ய வேண்டும்" போன்ற மிகச் சிறிய விஷயங்களுக்காக இருந்தது. ஆனால் பின்னர் இந்த தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.
தனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட உறவினர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆபாச தொழிலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அந்தப்பெண் ராபர்டோவிடம் கூறினார்.
ராபர்டோ, ஹானாவைக் காப்பாற்ற விரும்பினார். ஆனால் அவரிடம் எப்போதுமே பேச முடியவில்லை என்பதில் ஏமாற்றமடைந்தார். தொலைபேசி அழைப்பை செய்ய முடிவு செய்யும்போதெல்லாம் சில நேரங்களில் ஹானாவின் தொலைபேசி பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது வேறு ஏதாவது நடக்கும்.
ஒரு நாள் ராபர்டோ ஆன்லைனில் ஹானாவின் ஆயிரக்கணக்கான படங்களையும் வீடியோக்களையும் தேடினார். ஆனால் இந்த படங்கள் ஆபாச நட்சத்திரமான ஜெனீசாவின் படங்கள்.
ராபர்டோ ஹானாவின் காதலை உண்மை என்று நினைத்தார். அவர்களுக்கிடையேயான உறவில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக அவள் தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லையோ என்று யோசிக்க ஆரம்பித்தார். ராபர்டோ ஜெனீசாவின் லைவ் ஷோவில் இணைந்து, "அது நீங்கள்தானா" என்று சாட்டில் எழுதினார்.
அவர் விரும்பிய பதில் அவருக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அவர் பணம் செலுத்த வேண்டியிருந்தது, அதனால் அவரால் நீண்ட நேரம் அதில் தொடர முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
'வெற்றிகரமான மோசடியின் அடையாளம்'
உண்மையைக் கண்டறியும் முயற்சியில் ராபர்டோ உண்மையான வனேசா என்று அவர் நம்பிய எல்லா பெயர்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்பினார். வனேசாவுடனான நேர்காணலின் போது, அவரது இன்பாக்ஸில் ராபர்டோவிடமிருந்து வந்த ஒரு மெசேஜையும் பார்த்தோம்.
2016 ஆம் ஆண்டு மெசேஜில், "நான் உண்மையான ஜெனீசா பிரேசிலுடன் பேச விரும்புகிறேன்"என்று ராபர்டோ எழுதினார். பதிலுக்கு வனேசா, "நான் தான் உண்மையான ஜெனீசா பிரேசில்" என்று எழுதினார்.
அவரிடம் முன்பே பேசிருக்கிறோமோ என்று தெரிந்துகொள்ள ராபர்டோ அவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டார். இதுவே அவர்களின் முதல் மற்றும் கடைசி மின்னஞ்சல் தொடர்பு.
ஆனால் கதை இத்துடன் முடிவடையவில்லை. மோசடியாட்கள் ராபர்டோவைப் பின்தொடர்ந்தனர்.
நான்கு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் டாலர்களை அனுப்பியதாக ராபர்டோ கூறுகிறார். இந்தத் தொகையில் பெரும் பகுதியை அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடனாகப் பெற்றுள்ளார்.
சில மோசடி செய்பவர்கள் ஜெனீசாவின் திருடப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு ஏமாற்றுவதாக ராபர்டோ பின்னர் தனது ஆன்லைன் இடுகைகள் மூலம் பொதுமக்களை எச்சரிக்கத் தொடங்கினார்.
இதையெல்லாம் மீறி, உண்மையான ஜெனீசாவுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் கருதுகிறார்.
"இது ஒரு வெற்றிகரமான மோசடியின் அடையாளம்" என்கிறார் பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த குற்றவியல் நீதி நிபுணர் டாக்டர் அனுஷால் ரெஜி.
கிரிமினல் நெட்வொர்க்கிற்கான கையேட்டையும் அவர் கண்டுபிடித்துள்ளார். அவர்களின் ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடிய தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதற்கான வழிமுறைகளை இது வழங்குகிறது.
"இந்த மோசடி ஒரு வழக்கமான பாணியில் செய்யப்படுகிறது. முதலில் காதல் செய்திகள் அனுப்பப்படுகின்றன. பின்னர் உறவை முறித்துக் கொள்ளும் அச்சுறுத்துத்தல் அளிக்கப்படுகிறது. காதல் செய்பவர்கள் சந்திக்கும் பொருட்டு நிதி உதவி கோரப்படுகிறது."
"இந்த அனுபவத்தை கடந்து வந்த அனைவருக்கும் இது ஒரு கெட்ட கனவு. ஆயினும் இந்த தந்திரம் வேலை செய்கிறது,"என்று டாக்டர் அனுஷால் ரெஜி குறிப்பிட்டார்.
மனிதர்களான நாம் ஒருவருக்கு ஒருவர் உதவுவது நமது இயல்பு என்கிறார் டாக்டர் ரெஜி.
மறுபுறம், அந்த மோசமான வழிகளை நான் வெறுக்கிறேன் என்று வனேசா கூறுகிறார். "அவர்கள் அன்பைக் காட்டுகிறார்கள். பின்னர் அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். மக்கள் விரக்தியடைந்து எதையும் செய்யத் தயாராகிறார்கள்."
ராபர்டோவை ஒரு கும்பல் ஏமாற்றியதாக மருத்துவர் ரெஜி நினைக்கிறார். துருக்கி, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் உள்ள பல கும்பல்கள் உலகில் இந்த வேலையைச் செய்கின்றன என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
புதிய வாழ்க்கைக்கான தேடல்
அவர்களில் ஒருவரை பிபிசி கண்டுபிடித்தது. உஃபா என்ற அந்த இளைஞர் எங்களிடம், "இந்த வேலைக்கு நேரம் எடுக்கும்" என்றார். தான் இதுகுறித்து மோசமாக உணரும்போதிலும், இதன்மூலம் இதுவரை 50 ஆயிரம் டாலர்களை சம்பாதித்துள்ளதாக அவர் கூறினார்.
ஜெனீசாவின் புகைப்படங்களை உஃபாவிடம் காட்டியபோது, அவற்றை தான் பயன்படுத்தியதில்லை என்று கூறினார். ஆனால் மோசடிக்கார்கள் ஏன் அந்தப் புகைப்படங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிது என்று கூறினார்.
எந்த ஒரு மோசடியும் வெற்றிபெற வேண்டுமானால், அன்றாடப் பணிகளைச் செய்யும் விதமான பெண்களின் பல்வேறு புகைப்படங்கள் அவர்களுக்குத் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
தனது வாழ்க்கையின் தருணங்களை காட்டும் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதால் தனது படங்கள் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக வனேசா கருதுகிறார்.
மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் முடிவில்லாத பட்டியல் வனேசாவை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கேமரா முன் நடிப்பது அவரது மன ஆரோக்கியத்தையும் திருமண வாழ்க்கையையும் பாதிக்கத் தொடங்கியது.
தான் சோர்வாக இருந்ததாகவும், அதனால் நிகழ்ச்சிக்கு முன்பு குடிக்க ஆரம்பித்ததாகவும் வனேசா கூறினார். அந்தக் கால காணொளிகளில் தன் சோகத்தைக் காணமுடிவதால் அந்த வீடியோக்களை வெறுக்கிறேன் என்கிறார் அவர்.
2016 இல், வனேசா வேலையை நிறுத்த முடிவு செய்தார். வீட்டையும் கணவரையும் விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தேடிக் கிளம்பினேன் என்று கூறுகிறார்
அவர் இப்போது ஒரு சிகிச்சையாளராக பயிற்சி பெறுகிறார். தனது நினைவுக் குறிப்பை எழுதிக்கொண்டிருக்கிறார்.
இன்றுவரை, வனேசா தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை. தனது புகாரை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவர் கருதுகிறார்.
"அவர்கள் என்னைப் பார்த்து, நீங்கள் ஒரு ஆபாச நட்சத்திரம் என்று சொல்லிச் சிரிப்பார்கள்," என்கிறார் அவர்.
இத்தனை ஆண்டுகளில் வனேசா மனதளவில் வலுவாகிவிட்டார்.
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் தன் புகைப்படங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் சிலர் ஏன் வலையில் விழுந்தார்கள் என்பதை இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.
"காதல் விஷயத்தில் நாம் முட்டாள்களாக ஆகிவிடக்கூடும். அது எனக்கு தெரியும். ஏனென்றால் என் விஷயத்திலும் அது நடந்திருக்கிறது,” என்றார் வனேசா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












