பெண்கள் பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடியை நீக்க வேண்டுமா?

பெண்கள் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷில்பா சிட்னிஸ்-ஜோஷி
    • பதவி, பிபிசி மராத்திக்காக

கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு பயத்துடன் அவசர அவசரமாக வந்தார். அவர் வலியில் இருப்பது அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்தது. மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண், அவரை உடனடியாக உள்ளே அனுப்பினார்.

“எனக்குத் திருமணமாக உள்ளதால், நான் பிகினி வேக்ஸிங் (பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடிகளை மெழுகு போன்ற உருகும் திரவத்தின் மூலம் அகற்றுதல்) செய்துகொண்டேன். இதனால், எனக்கு அப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என அந்த பெண் கூறினார்.

உடனேயே அப்பெண் அழத்தொடங்கி விட்டார்.

அவரை பரிசோதித்தபோது அவருடைய பிறப்புறுப்பின் மிக மென்மையான பகுதியில் மிகவும் ஆழமாக வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

பின்னர், எளிய சிகிச்சையின் மூலம் ரத்தம் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் தொற்று ஏற்படாமல் இருக்க அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

வேக்ஸிங் செய்யலாமா?

பிறப்புறுப்பை சுற்றி இருக்கும் முடியை அகற்ற பெரும்பாலான பெண்கள் தற்போது வேக்ஸிங் செய்கின்றனர். அதன் நோக்கம் அப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வதா? அல்லது டிரெண்ட் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறதா?

இதற்கு விடை தெரிந்துகொள்வதற்கு முன் முதலில் ‘பிகினி வேக்ஸ்’ என்றால் என்ன என்பது குறித்து அறிய வேண்டும். பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடியை மெழுகு போன்ற உருகிய திரவத்தின் மூலம் அகற்றுவதன் நோக்கம், பெண்கள் நீச்சல் உடை அணியும் போது எந்த முடியும் வெளியே தெரியக்கூடாது என்பதுதான்.

அந்த பகுதி மிகவும் மென்மையானது என்பதால் இதனை செய்யும்போது மிகுந்த வலி ஏற்படும். இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் கூட இதனை செய்துகொள்கின்றனர்.

வேக்ஸிங் செய்வதற்கான காரணம் என்ன?

பிறப்புறுப்பில் முடி இல்லாமல் இருப்பது பெரும்பான்மையான ஆண்களுக்குப் பிடிக்கும் என்பதால் இவ்வாறு பெண்கள் செய்கின்றனர். ஆனால், பிறப்புறுப்பில் முடி இல்லாமல் இருப்பது ஏன் ஆண்களுக்குப் பிடிக்கிறது?

இதனை ஆழமாக யோசித்தால் இளம் தலைமுறையினரிடையே ஆபாசப் படங்கள் செலுத்தியிருக்கும் தாக்கம் தான் இதற்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.

உடல் முழுவதும் முடியே இல்லாமல் அப்படங்களில் வரும் பெண்கள் குறித்த தாக்கம் இளம் ஆண்களிடையே உள்ளது.

இளம் தலைமுறையினர் ஆபாசப் படங்களை பார்ப்பது இந்த காலத்தில் எளிதானதாக இருக்கிறது. ஆனால், அவை அவர்களின் பாலியல் வாழ்க்கையில் செலுத்தும் தாக்கம் குறித்து யாராவது அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

பெண்கள் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

பிறப்புறுப்பை சுற்றி இருக்கும் முடியை முழுவதுமாக நீக்க வேண்டுமா?

பெண்களின் பிறப்புறுப்பை சுற்றி வளரும் முடிதான் அவர்களின் பிறப்புறுப்பை தொற்றிலிருந்து காக்கிறது. இந்த பகுதியிலும் பிறப்புறுப்பு பாதையிலும் பல முக்கிய பாக்டீரியாக்கள் உள்ளன.

இவைதான் பிறப்புறுப்பின் நோயெதிர்ப்பு அமைப்பை காத்து, பல்வேறு தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.

ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலம் இங்குள்ள முடியை அகற்றினால் அந்த முடியின் வேர்கள், எந்தவொரு கவசமும் இல்லாமல் வெளியே தெரியும், இதனால் வலி ஏற்படும்.

இதனால் முடியின் வேர்களில் பலவித தொற்றுகள் ஏற்படும். முடி இல்லாமல் இருந்தால் பிறப்புறுப்பு வறண்டு போகும். இதனால் அப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் பலவித தொற்றுகள் ஏற்படும்.

பிறப்புறுப்பு வறண்டால் அதன் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து அப்பகுதியில் அரிப்பு ஏற்படும்.

மேலும், அப்பகுதியில் காயம் ஏற்பட்டால் இன்னும் ஆபத்துகள் ஏற்படும்.

‘க்ரீம்’ பயன்படுத்தலாமா?

முடிகளை நீக்குவதற்கு அப்பகுதியில் ‘க்ரீம்’ பயன்படுத்துவதும் மிக ஆபத்தானது. அதுகுறித்து அந்த ‘க்ரீம்’களிலேயே எழுதப்பட்டிருக்கும். இதனால் அப்பகுதியில் வேதியியல் வினைகளும் ஏற்படும்.

முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு, அப்பகுதியில் உள்ள முடியை முழுவதுமாக நீக்குமாறு அறிவுறுத்துவோம். ஆனால், அதனால் ஏற்படும் பிரச்னைகளை அறிந்துகொண்ட பின்னர் தேவையான அளவே முடியை அகற்றுகிறோம்.

பெண்கள் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ச்சியாக அப்பகுதியில் ஷேவ் செய்தாலும் கொப்பளங்கள், அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும்.

அப்பகுதியில் உள்ள முடியை கத்திரிக்கோல் மூலம் வெட்டி அதன் அளவை குறைப்பதே சிறந்த வழியாக இருக்கும். இதனால், அப்பகுதி சுத்தமாக இருக்கும்.

அப்பகுதியை சுத்தம் செய்யாமல் இருப்பதும் தவறு. குளிக்கும்போது பிறப்புறுப்பை சுத்தம் செய்யாதது, அப்பகுதியில் உள்ள முடியை தேவையான அளவு வெட்டாமல் இருப்பது, குறித்த நேரத்தில் நாப்கின்களை மாற்றாமல் இருப்பது, ஈரமான உள்ளாடையை அணிவது உள்ளிட்டவையும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், இதனாலும் பல பிரச்னைகள் ஏற்படும்.

பிறப்புறுப்பை சுத்தமாக்க ‘இன்டிமேட் வாஷ்’ பயன்படுத்த வேண்டுமா?

‘இன்டிமேட் வாஷ்’ ((Intimate Wash) மூலம் பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் டிரெண்டும் தற்போது அதிகமாகி வருகிறது.

இதனாலும் பிறப்புறுப்பு வறண்டு போதல், தொற்று ஏற்படுதலும் நிகழும். ஏனெனில், பிறபுறுப்பின் உட்பகுதியின் பி.ஹெச். அமிலத்தன்மை கொண்டது என்பதே இதற்குக் காரணம். ‘இன்டிமேட் வாஷ்’ மூலம் சுத்தம் செய்வதால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும்.

வேக்ஸிங், இன்டிமேட் வாஷ் அல்லாமல் மேலும் பல பொருட்கள் இதற்கென விற்பனையில் உள்ளன. ஆனால், சில வழிமுறைகளை பின்பற்றினாலே பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்க முடியும்.

பெண்கள் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான 10 வழிகள்:

சுத்தமான நீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதே போதுமானது. பிறப்புறுப்பு பி.ஹெச். அமிலத்தன்மை வாய்ந்தது. சோப்பில் ஆல்கலைன் உள்ளது. எனவே, சோப் மூலம் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

‘ஹேண்ட் ஷவர்’ மூலமாக பிறப்புறுப்பை சுத்தம் செய்யக்கூடாது. இதனால் பிறப்புறுப்பில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு, வெள்ளைப்படுதல் அதிகமாகும். கழிவறை காகிதம் மூலமாக அப்பகுதியை தேய்ப்பதாலும் அப்பகுதி வறண்டு போகும்.

பிறப்புறுப்பில் எந்தவொரு பவுடரையும் பயன்படுத்தக்கூடாது. டால்கம் பவுடர்கள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும். தொடைகளில் டால்கம் பவுடரை பயன்படுத்தினாலும் உள்ளாடையை அணிந்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

வெள்ளைப்படுதல் அதிகமானாலோ அல்லது அதனால் அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம் ஏற்பட்டாலோ மகப்பேறு மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

‘க்ரீம்’களில் ஸ்டீராய்டுகள் உள்ளன. இத்தகைய க்ரீம்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தொற்றுகளை மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியாத நிலை கூட உள்ளது.

மாதவிடாய் நெருங்கும்போதே சில பெண்கள் சானிட்டரி நாப்கின்களை அணிகின்றனர். இது மிகவும் தவறானது. நாப்கின்களில் டையாக்சின் எனப்படும் வேதிப்பொருள் இருப்பதால், அப்பகுதியில் சொறி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவை ஏற்படும்போது மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் உள்ள துணிகளை மாதவிடாயின்போது பயன்படுத்துவதும் தொற்றை ஏற்படுத்தும்.

உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பை கழுவ வேண்டும்.

வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது. அதனை நேரடியாக பயன்படுத்தாமல் ஆடை அணிந்த பின்னர் பயன்படுத்தலாம்.

பருத்தியாலான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். புதிதாக வாங்கிய உள்ளாடைகளை ஒருமுறை துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். உள்ளாடைகளை துவைக்கும்போது அதில் சோப்பு, சோப்புத்தூள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: