ஆண் கருத்தடை மாத்திரை இதுவரை ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? - கலாசாரம் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாரியா கோர்வெட்
- பதவி, பிபிசி ஃபியூச்சர்
ஆண் கருத்தடை மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் பல பக்க விளைவுகள், பல தசாப்தங்களாக பெண்களைப் பாதித்துக் கொண்டுள்ளன. இது நம் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறதா?
1968ஆம் ஆண்டு ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையாக தியோரிடசின் என்ற மருந்தை எடுத்து வந்த ஓர் இளைஞர் உடலுறவின்போது தனக்கு வறண்ட உச்சகட்டம் ஏற்படுவதைக் கவனித்தார். வறண்ட உச்சகட்டம் என்பது பாலுறவில் உச்சநிலையை அடையும்போது ஆண்குறி விந்து திரவத்தை வெளியிடாத அல்லது குறைவாக வெளியிடும் நிலை. இதையடுத்து, அவர், மனநல மருத்துவரைச் சந்திக்கச் சென்றார்.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இதுபோன்ற மருந்தைக் கொண்டு ஆண் கருத்தடை மாத்திரைக்கான அடிப்படையை உருவாக்க முடியுமா என்ற யோசனை பிறந்தது. இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் விந்து வெளியேற்றத்தை அடக்கும் தன்மை கொண்ட ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பினாக்ஸிபென்சமைன் என்ற மற்றொரு மருந்தைக் கண்டுபிடித்தனர்.
இதை ஆரோக்கியமான ஆண்களுக்கு வழங்குவது பாதுகாப்பானதல்ல. ஆனால் இந்த வகை மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அதன் மூலம் வேறு ஒன்றை உருவாக்குவதே இதன் யோசனையாக இருந்தது.
இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
பாதுகாப்பான ஆண் கருத்தடை மாத்திரை, பெண்களின் கருத்தடை சுமையைக் குறைத்தல் மற்றும் லட்சக்கணக்கான தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத உச்சகட்டம் எனப்படும் 'விந்து திரவம் வெளியேறாத உச்சகட்டம்' என்ற யோசனையை சில ஆண்கள் விரும்பவில்லை.
எனவே இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் புதிய யோசனையை உருவாக்கத் தொடங்கினர். எனினும், ஆண் கருத்தடை மாத்திரை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
கருத்தடை மாத்திரை எடுப்பவருக்கு தற்காலிக மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி இரண்டு மணிநேரத்திற்கு விந்தணு வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக இந்த வாரம், எலிகளில் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பாராட்டப்பட்டாலும் மனிதர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக இதுகுறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
ஆண் பிறப்புக் கட்டுப்பாடு தொடர்பாக கடந்த அரை நூற்றாண்டில் பல சாத்தியமான முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றில் சில, மனிதர்களிடம்கூட சோதனை செய்யப்பட்டன. பின்னர், பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடியது என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கப்பட்டன. கருத்தடை மாத்திரை பெண்களுக்கு ஏற்படுத்தும் பொதுவான அறிகுறிகள்கூட ஆண்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்பட்டு பல ஆண் கருத்தடை மாத்திரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆண் கருத்தடை மாத்திரைகளுக்கு அனுமதி பெறுவது ஏன் கடினமாக உள்ளது? இதற்கு அறிவியல் காரணங்களைவிட கலாசார விஷயங்கள் காரணமாக உள்ளனவா?

பட மூலாதாரம், Getty Images
நெறிமுறைகள் தொடர்பான கேள்வி
ஆண் கருத்தடை மாத்திரைகளில் பக்கவிளைவுகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள பெண் கூட்டு கருத்தடை மாத்திரை (female combined pill) முதன்முதலில் உருவாக்கப்பட்ட 1950களின் பிற்பகுதிக்குச் செல்வோம்.
அந்தக் காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனை தொடர்பாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகள் இல்லை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனின் தீவிர தன்மை கொண்ட கலவையான பெண் கூட்டு கருத்தடை மருந்து போர்ட்டோ ரிக்கோ போன்ற பல நாடுகளில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் சோதனை செய்யப்பட்டன. இதில் 1,500 பெண்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதியில் வெளியேறினர், மூவர் உயிரிழந்தனர். எனினும், இந்த மருந்து 1960ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர் 1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நிலை மாறியது. நாஜி ஜெர்மனியில் மருத்துவக் குற்றங்களைச் செய்ததாக சில மருத்துவர்கள் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து நிகழ்ந்த நியூரம்பெர்க் தீர்ப்பாய விசாரணைக்குப் பிறகு மருத்துவ சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பான உலக மருத்துவ சங்கம், புதிய மருத்துவ நெறிமுறைகளின் அவசியத்தை உணர்ந்தது.
மருத்துவ ஆராய்ச்சியில் பங்கேற்பவர்களைப் பாதுகாக்க மருத்துவ நெறிமுறை ஹெல்சின்கி பிரகடனம் உருவாக்கப்பட்டது. ஆராய்ச்சியில் பங்கேற்பவர்களின் உடல் நலத்திற்கு விஞ்ஞானிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இதில் அடங்கும்.
"அதன் பின்னர் ஆபத்து மற்றும் மருந்து ஆராய்ச்சியில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன," என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக கருத்தடை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத் துறையின் இணை பேராசிரியர் சூசன் வாக்கர்.
இந்த விதிகள் உருவாவதற்கு முன்பே கூட்டு கருத்தடை மாத்திரை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்று அது உருவாக்கப்பட்டால் மிகவும் கடுமையான ஆய்வுகளை எதிர்கொள்ளும்.
நவீன கூட்டு கருத்தடை மாத்திரைகள் பெரும்பாலான பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. எனினும், அவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைவுகளுக்கு அரிதாக வழி வகுக்கும். மேலும், மனநிலை மாற்றங்கள், குமட்டல், தலைவலி மற்றும் மார்பகப் பகுதி மென்மையாகுதல் போன்ற பக்க விளைவுகளையும் அவை ஏற்படுத்தலாம். இந்த வகை மாத்திரைகள் உடல் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன.
எனவேதான் பக்க விளைவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு விஷயங்களிலும் ஆண் கருத்தடை மாத்திரைகளுக்குக் கூடுதல் தரநிலைகள் வைக்கப்படுகின்றன.
"சோதனை அடிப்படையில் ஆபத்து மற்றும் நன்மைகளை எவ்வாறு நெறிமுறை குழுக்கள் கணக்கிடுகின்றன என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஆண், பெண் இருவருமே பாலுறவில் ஈடுபட்டாலும், கர்ப்ப அபாயங்களை பெண்தான் தாங்குகிறார்," என்கிறார் வாக்கர்.
''ஆண்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் பக்கவிளைவுகளோடு ஒப்பிடும்போது இத்தகைய சிரமமான பக்க விளைவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளன'' என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான பிரச்னைகளால் உயிரிழக்கின்றனர். மேலும், சுமார் 50,000 பேர் குறிப்பிடத்தக்க வகையிலான குறுகிய அல்லது நீண்ட கால உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். உலகளவில் 295,000 பெண்கள் பிரசவத்தின்போதும் பிரசவத்திற்குப் பிறகும் உயிரிழக்கின்றனர்.
ஆனால், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் இந்த அபாயங்களை எதிர்கொள்வதில்லை. எனவே ஆண்களின் எந்தவொரு கருத்தடை செயல்முறைக்குமான பாதுகாப்புத் தரநிலை கூடுதலாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சான்றாக, ஆண் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைக் கூறலாம். இந்த மாத்திரையில் 1970களில் பல பதிப்புகள் உருவாக்கப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் டெஸ்டோஸ்டிரோனை தன்னார்வலர்களுக்குச் செலுத்தி, அது விந்தணு உற்பத்தியைப் பாதித்ததா என்று சோதித்தனர்.
ஆரம்ப சோதனை ஒன்றில் இது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருந்தது. பின்னர், அதன் பிறகான ஆய்வுகள் அதில் ப்ரோஜெஸ்டின் (பெண் இனப்பெருக்க ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரோனின் செயற்கைப் பதிப்பு) போன்ற ஹார்மோனை சேர்ப்பதன் மூலம் இதை மேலும் அதிகரிக்க முடியுமா என்று சோதித்தன.
இதில் சில பக்க விளைவுகள் ஏற்பட்டதால் இந்த ஆய்வுகள் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டன.
"ஆண் ஹார்மோன் கருத்தடை ஊசிகளில் மிகவும் வெற்றிகரமான சோதனைகள் நடந்துள்ளன. இது விந்தணுக்களின் செறிவுகளை அடக்குவதில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது. அது மிகவும் பயனளித்தது," என்கிறார் வாக்கர்.
"ஆனால், மனநிலை மாற்றம், தோலில் ஏற்படும் மாற்றம் போன்ற பக்க விளைவுகள் காரணமாக இது நிறுத்தப்பட்டது. பெண் கருத்தடை மாத்திரைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்தப் பக்க விளைவுகள் எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.
ஏற்புக்கான பாதை
எனினும், ஆண்களுக்கான பல ஹார்மோன் அல்லாத கருத்தடை செயல்முறைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. அதில் விந்தணு முதிர்ச்சிக்குக் காரணமான புரதத்திற்கு எதிரான தடுப்பூசி மற்றும் ஒரு வகையான தற்காலிக விந்துநாள துண்டிப்பு ஆகியவையும் அடங்கும்.
எனினும், கருத்தடை மாத்திரைகளைப் போலவே, ஹார்மோன் அல்லாத கருத்தடைகளும் சில ஆண்களுக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்.
"இது குறித்து ஆண்களிடம் பேசிய என் அனுபவத்தில், எதிர்கால கருவுறுதல் மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஆண்கள் கவலைப்படுகிறார்கள் என்பது உண்மை. தங்களது பாலியல் உறவின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்," என்கிறார் வாக்கர்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியும் சிக்கலாக இருக்கலாம். கருத்தடை மாத்திரை விஷயத்தில், மருத்துவ ஆராய்ச்சியின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை ஆதரிக்கும் அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கற்ற அறக்கட்டளையான பார்செமஸின் ஒரு கணக்கெடுப்பில், 20 சதவிகித ஆண்கள் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளமாட்டோம் என்றும், அதற்கு சரிசம அளவினர் எடுத்துக்கொள்வோர் என்றும் கூறினர். மீதமுள்ளவர்கள் இது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றனர்.
எனினும், விலங்கு மற்றும் மனித சோதனை நடைபெறுவதற்கு முன்பே இந்த ஆராய்ச்சிக்கான நிதி நிறுத்தப்பட்டது.
ஆண் கருத்தடைகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியளிக்கப் பல தொண்டு நிறுவனங்கள் கடினமாக உழைத்து வருவதாக வாக்கர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் பெண் கருத்தடை முறைகள் சிறப்பாகச் செயல்படும்போது, ஆண் கருத்தடை மாத்திரைகளை உருவாக்க மருந்து நிறுவனங்களுக்கு அதிக ஆர்வம் இல்லாமலும் இருக்கலாம் என்றும் வாக்கர் ஊகிக்கிறார். மாத்திரைகள் அற்ற உலகில் அதே வருவாயை மருந்து நிறுவனங்கள் பெறாது என்றும் அவர் கூறுகிறார்.
"ஆண் கருத்தடையைப் பொறுத்தவரை, இந்த உலகில் உள்ளவர்கள் ஆபத்தை அதிகம் விரும்பாதவர்கள் என நான் நினைக்கிறேன். ஆண்கள் ஆபத்தை அதிகம் விரும்பவில்லை, நெறிமுறை வகுக்கும் குழுக்கள் ஆபத்தை அதிகம் விரும்பவில்லை, மருந்து நிறுவனங்கள் ஆபத்தை அதிகம் விரும்பவில்லை'' என்கிறார் வாக்கர்.
15 ஆண்டுகளாக கருத்தடை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத் துறையில் பணியாற்றி வரும் வாக்கர், விரைவில் ஆண் கருத்தடை மாத்திரை பயன்பாட்டிற்கு வரும் என்ற தன் நம்பிக்கை மங்கிவிட்டதாகக் கூறுகிறார்.
ஒருவேளை இந்தப் பல தசாப்த சவால்களை அண்மையில் எலிகளிடம் நடந்த சோதனை தீர்த்தாலும் தீர்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













