அமெரிக்க சாமியார் ஜிம் ஜோன்ஸ் தனது 900 பக்தர்களை விஷம் கொடுத்து கொன்றதன் முழு பின்னணி

ஜிம் ஜோன்ஸ்

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜிம் ஜோன்ஸ்
    • எழுதியவர், அனகா பதக்
    • பதவி, பிபிசி மராத்தி

1978ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி குயானா நாட்டின் ஜோன்ஸ் டவுன் என்னும் ஒரு தொலைதூர புறநகர் பகுதிக்கு காவல்த்துறையினர் விரைந்து வந்தனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகள் நடந்தேறியிருந்தன.

ஆண், பெண், குழந்தைகள் என 900க்கும் மேற்பட்ட மனிதர்கள் அங்கே இறந்து கிடந்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் மிகவும் நேர்த்தியாகச் சரிந்து கிடந்தன. சில உடல்கள் குழுக்களாகவும் சில உடல்கள் தனித்தனியாகவும் இருந்தன.

அதில் சில உடல்களைப் பார்க்கும்போது அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைக்கும் வகையில் காணப்பட்டன. சில குழந்தைகளின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களின் தோள்களில் சாய்ந்து கிடந்தன. சில காதல் ஜோடிகள் கைகளைக் கோர்த்தப்படி இறந்த கிடந்தனர்.

அவர்கள் அனைவரின் உதடுகளும் கருநீல வண்ணத்தில் காணப்பட்டன. சம்பவ இடத்தில் மிகப்பெரிய அளவில் பொட்டாசியம் சைனைடு விஷம் கண்டெடுக்கப்பட்டது. அங்கே இறந்து கிடந்த அனைவைருக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

அந்த இடத்தில் இறந்து கிடந்த அத்தனை பேரின் மரணத்திற்கும் `ஜிம் ஜோன்ஸ்` என்ற ஒரே ஒரு நபர்தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

யார் இந்த ஜிம் ஜோன்ஸ்?

ஒரு தரப்பினர் அவரை ஒரு தேவதூதராகக் கருதினர். மற்றொரு தரப்பினர் அவரிடம் அதிசயமான சக்திகள் நிறைந்திருந்ததாக எண்ணினர். அவர் தொட்டால் புற்றுநோய் கூட குணமாகிவிடும் என நம்பினர். இப்படி தன்னைப் பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை வைத்து தனக்கெனத் தனி வழிபாட்டு முறையை உருவாக்கிக்கொண்டார் ஜிம் ஜோன்ஸ். தனக்கென பிரத்யேக வழிபாட்டு தளத்தை உருவாக்கி அதற்கு `பீப்பிள்ஸ் டெம்பிள்`(people's temple) என்று பெயர் சூட்டினார்.

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர் இந்த ஜிம் ஜோன்ஸ். இவருடைய இளம் வயது காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அப்போது இவருடைய வயதை ஒட்டிய மற்ற சிறுவர்கள் போர் சம்பந்தமான விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தபோது இவர் மட்டும் மதம் தொடர்பான பிராசாரங்களைக் கேட்பதற்கு ஆர்வமாகச் சென்றார். ஐந்து தேவாலயங்களில் உறுப்பினராக இருந்த இவர், அந்த ஐந்து தேவாலயங்களில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்துகொண்டார்.

இதுகுறித்து ஜிம் ஜோன்ஸின் மகன் ஸ்டீஃபன் ஜோன்ஸ் கூறும்போது, "அந்த ஐந்து தேவாலயங்களிலும் இருந்த ஐந்து பாதிரியார்களின் பிரசங்க கீர்த்தனைகளையும் படிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதில் யாருடைய கீர்த்தனைகள் மக்களைக் கவரும் வண்ணம் இருந்தது என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்" என்று தெரிவித்தார்.

"அதேநேரம் சிறு வயதிலிருந்தே தன்னை மட்டும்தான் அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களின் மனங்களை தான் ஆள வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அதனால்தான் வளர்ந்து பிறகு, தானே சொந்தமாக தேவாலயம் கட்டி அதற்குத் தானே பாதிரியாராகவும் மாறினார்" என்றும் ஸ்டீஃபன் ஜோன்ஸ் குறிப்பிடுகிறார்.

ஜிம் ஜோன்ஸை வழிபட்டு வந்த மக்கள் யார்?

வெர்னன் கோஸ்லி வெள்ளையர். அவரது மனைவி கருப்பர்

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, வெர்னன் கோஸ்லி வெள்ளையர். அவரது மனைவி கருப்பர்

தங்களுக்கென சமூகத்தில் சம வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து வாழ்ந்து வந்தவர்கள், இருப்பதைவிட இன்னும் சற்று மேம்பட்ட வாழ்வை வாழ விரும்பிய ஒரு சாதாரண மக்கள் கூட்டம்தான் ஜிம் ஜோனெஸை பின்பற்றி வந்தது.

இந்தப் பெரும் கூட்டத்தின் தற்கொலை முயற்சியில் சிலர் இருந்தனர். அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதற்கான எதிர்வினைகளையும், சட்ட விசாரணைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களை இந்தப் பொதுச்சமூகம் மிகவும் அறுவறுப்பான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தில் உயிருடன் தப்பிப் பிழைத்து வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவே இருந்தது.

இப்படியொரு சம்பவம் நடைபெற்றபோது அமெரிக்காவின் சமூக நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஜிம் ஜோன்ஸுடைய முன்னாள் பக்தரிடமும் அவருடைய இரண்டு மகன்களிடமும் பிபிசி ஃபோர் (BBC Four) பேசியது.

1960 மற்றும் 1970 காலகட்டங்களில் அமெரிக்காவில் கறுப்பு - வெள்ளை மக்களுக்கிடையேயான பாகுபாடு உச்சக்கட்டத்தில் இருந்தது. அங்கே கறுப்பு நிற மக்கள் ஒடுக்கப்பட்டு வந்தனர். வெள்ளைநிற மக்கள் செல்லும் பல இடங்களுக்கு கறுப்பு நிற மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கறுப்பு - வெள்ளை மக்களுக்கிடையே திருமணம் நடப்பதற்கும் பெரியளவில் எதிர்ப்புகள் இருந்தன. எதிர்ப்புகளை மீறி அவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேசமயம் அமெரிக்காவில் அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடிகளும் நிலவி வந்தன. அமெரிக்காவுக்கும், வியாட்நாமுக்கும் இடையே அப்போது போர் நடைபெற்று வந்தது. அமெரிக்காவின் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வந்த காட்சிகளும் காணப்பட்டன. அமெரிக்க சமூகத்தை நோக்கிப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

அப்படியான ஒரு காலத்தில்தான் வெர்னன் கோஸ்லி என்பவர் ஜிம் ஜோன்ஸின் பக்தராக மாறுகிறார். அப்போது அவருடைய வயது 20. அவர் வெள்ளை இனத்தவர், அவருடைய மனைவி கறுப்பு இனத்தவர்.

அதேபோல் லெஸ்லீ வெக்னர் - வில்சன் என்னும் 20 வயது பெண்ணும், அவருடைய தாய் மற்றும் தங்கையுடன் ஜிம் ஜோன்ஸின் வழிபாட்டாளராக மாறுகிறார்கள். லெஸ்லீ வெக்னரின் தங்கை போதைப்பொருளுக்கு அடிமையானவராக இருந்தார்.

வியாட்நாம் போருக்குச் சென்று வந்த ஜிம் கார்டர் என்னும் 19 வயது இளைஞர் தன்னுடைய மன அமைதிக்காக ஜிம் ஜோன்ஸிடம் வந்தார்.

இப்படி எதோவொரு காரணத்தால் வாழ்க்கையில் துவண்டு போயிருந்த நூற்றுக்கணக்கான மக்களை பீப்பிள்ஸ் டெம்பிள் வரவேற்றது. சமூக ஒடுக்குமுறைகளாலும், பாகுபாடுகளாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஜிம் ஜோன்ஸை தங்களைக் காக்க வந்த நாயகராகப் பார்த்தனர். ஏனென்றால் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும் சம வாய்ப்புகள் மற்றும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்து வந்தார். ஜிம் ஜோன்ஸ் தன்னைத் தானே சமூக ஆர்வலர் என்று அழைத்துக்கொண்டார்.

அதேபோல் ஜிம் ஜோன்ஸ் தன்னைத் தானே தேவதூதர் என்று கூறிக்கொண்டார். நோயுற்று வருபவர்களை தான் தொடுவதன் மூலம் அவர்களுடைய நோய்களைத் தன்னால் குணப்படுத்த முடியும் எனக் கூறி வந்தார்.

பீப்பிள்ஸ் டெம்பிளில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது?

ஜிம்மின் பீப்பிள்ஸ் டெம்பிள் சமத்துவத்தை போதித்தது.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜிம்மின் பீப்பிள்ஸ் அமைப்பு சமத்துவத்தை போதித்தது.

ஜோன்ஸ் டவுன் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகத் தன்னுடைய பீப்பிள்ஸ் டெம்பிளை சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு இடம் மாற்றம் செய்தார் ஜோன்ஸ். அதற்குப் பிறகுதான் அவருக்கு மிகப்பெரும் அளாவில் புகழ் வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்தது.

இதுகுறித்து லெஸ்லீ வெக்னர் கூறும்போது, "நான் பீப்பிள்ஸ் டெம்பிளில் இருந்தபோது அங்கே காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் ஒரு பெண் வந்திருந்தார். அவரை ஜிம் ஜோன்ஸ் தன் கைகளால் தொட்டு, இனி உன்னால் நடக்க முடியும் என்று கூறினார். அடுத்த நிமிடமே அந்தப் பெண் எழுந்து நடக்கத் துவங்கினார். இது போன்ற பல ஆச்சரியங்கள் அங்கே நடந்து வந்தன. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் அவரை கண்மூடித்தனமாக பின்பற்றத் துவங்கினர். பலர் ஜிம் ஜோன்ஸுக்கு நன்கொடையாக பணங்களை அளித்தனர். சிலர் பேருந்து வாங்கி பரிசளித்தனர். அதில் பயணம் செய்த ஜிம் ஜோன்ஸ் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பிரசங்கங்களை நிகழ்த்தினார்" என்று தெரிவித்தார்.

தன்னுடைய உடல் மொழிகளின் மூலம் ஜிம் ஜோன்ஸ் மக்களை ஈர்த்து வந்தார். சுமார் 8 அல்லது 9 குழந்தைகளை அவர் தத்தெடுத்து வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் குழந்தைகளில் ஜிம் ஜோன்ஸ் ஜூனியர் என்னும் கறுப்பினத்தவரும் ஒருவர். தான் தத்தெடுக்கப்பட்ட கதையைப் பற்றி அவர் கூறும்போது, "ஆசிரமத்தில் என்னைத் தத்தெடுக்க அவர்கள் வந்தபோது, அங்கே இருந்த அதிகாரிகள் என்னைத் தத்துக்கொடுக்க சம்மதிக்கவில்லை. நான் கறுப்பினத்தவராக இருந்ததால் அதைக் காரணம் காட்டி வெள்ளை இனத்தவரான ஜிம் ஜோன்ஸுக்கு தத்துக்கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் `எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை நான் செய்வேன்' என்று கூறி எனது தந்தை என்னைத் தத்தெடுத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கிறார்.

ஜிம் ஜோன்ஸை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. பலர் தங்களது விவசாய நிலங்களை விற்று ஜிம்ஜோன்ஸின் தேவாலயத்திற்கு நன்கொடை அளித்தனர். அதனால் ஜிம் ஜோன்ஸின் தேவாலயத்திற்குச் சொந்தமான சொத்துமதிப்பு பெருமளவில் உயர்ந்தது.

சில காலங்களுக்குப் பிறகு சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருந்து தனது பக்தர்களுடன் தென் அமெரிக்காவின் குயானா நாட்டிற்குச் சென்றார் ஜிம் ஜோன்ஸ்.

அங்குதான் கூட்டு வாழ்வு முறை குறித்து அதிகமாகப் பிரசாரம் செய்யத் துவங்கினார். அதாவது தனிநபர்கள் யாரும் சொத்துகள் வைத்துகொள்ளக்கூடாது என்று அவர் கூறி வந்தார். இவரது இந்தப் போதனையை பக்தர்கள் பின்பற்றத் துவங்கினர். 20க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதுபோல் பல வீடுகளில் அவரது பக்தர்கள் ஒன்றாக இணைந்து வாழத் தொடங்கினர். அவர்களது லட்சியங்களையும் வேலைகளையும் விட்டுவிட்டு ஜிம் ஜோன்ஸின் வழிபாட்டு மையத்தில் முழுநேர பணியாளர்களாக மாறினர்.

ஜிம்மின் உபதேசக் கூட்டங்களில் கருப்பர்களும், வெள்ளையர்களும் ஒன்றாக மகிழ்ச்சியில் நடனமாடுவார்கள்.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜிம்மின் உபதேசக் கூட்டங்களில் கருப்பர்களும், வெள்ளையர்களும் ஒன்றாக மகிழ்ச்சியில் நடனமாடுவார்கள்.

ஜிம் தன்னைத் தானே ஃபாதெர் (father) என்றும், அவரது மனைவியான மார்செலினை மதர் (mother) என்றும் அழைத்துக்கொண்டார்.

பீப்பிள்ஸ் டெம்பிளில் இரவு நேரங்களில் ஆடல், பாடல்களும், விவாதங்களும் நடைபெற்று வந்தன. தாங்கள் இந்த உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்குச் சான்றாகத் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் ஜிம் ஜோன்ஸின் வழிப்பாட்டாளர்கள் உறுதியாக நம்பினர்.

ஆனால் இந்த பிம்பங்கள் அனைத்தும் வெகு சீக்கிரமே சுக்குநூறாக உடைந்துவிடப் போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பீப்பிள்ஸ் டெம்பிளில் பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அங்கே உள்ள மக்கள் யாரும் அவர்களின் சொந்த குழந்தையை பராமரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. தங்களுடைய குழந்தைகளுக்குப் பதிலாக அவர்கள் மற்றவர்களின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும்.

அங்கே இருந்த இளம்பெண்கள் பலருடன் ஜிம் உறவு வைத்துக்கொண்டார். அவர்களை தான் பாதுகாத்து வருவதாக அதற்கு அவர் காரணம் கூறினார்.

அங்கே நிறைய பணம் வரத் தொடங்கியது. ஆனால் அவை எதற்குமே கணக்குகள் காட்டப்படவில்லை.

அங்கே இருந்த மக்கள் சொந்தமாகப் பேசுவதற்கோ, சிந்திப்பதற்கோ, ஏன் தங்களுடைய இணையர்களிடம் உறவு வைத்து கொள்வதற்கோகூட அனுமதிக்கப்படவில்லை. ஆறு அறிவு கொண்ட மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்படவில்லை என்கிறார் வெர்னன் கோஸ்லி.

பீப்பிள்ஸ் டெம்பிளில் வாழ முடியாது என உணர்ந்தார் கிரேஸ் ஸ்டோன்

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, பீப்பிள்ஸ் டெம்பிளில் வாழ முடியாது என உணர்ந்தார் கிரேஸ் ஸ்டோன்

விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். விதி மீறுபவர்கள் குத்துச்சண்டை வளையத்திற்குள் அழைத்து வரப்பட்டு தொடர்ச்சியாகத் தாக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தங்களைத் தற்காத்து கொள்ள எந்தவொரு முயற்சியும் செய்யக்கூடாது. ஏனெனில் இது ஃபாதரின் விருப்பம் என்று வெர்னன் கூறுகிறார்.

நீங்கள் ஒருமுறை பீப்பிள்ஸ் டெம்பிளுக்குள் வந்துவிட்டால் உங்களால் அதன் பின் எப்போதுமே வெளியே போக முடியாது. அப்படி வெளியே போக முயற்சி செய்பவர்கள் மிரட்டல்களைச் சந்திக்க நேரிடும். இங்கிருந்து நீங்கள் தப்பிக்க முயன்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறும் அளவிற்கு மிரட்டல்கள் விடுக்கப்படும் என்றும் வெர்னன் குறிப்பிடுகிறார்.

அங்கிருந்து தப்பி வந்தவர்கள் சிலர் பின்னாளில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அதில் அங்கு நடந்த மோசடிகள் குறித்து அவர்கள் பேசினர்.

பீப்பிள்ஸ் டெம்பிளில் இருந்து தப்பி வந்த கிரேஸ் என்பவர் கூறும்போது, ஜிம் ஜோன்ஸ் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துவது போன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் போலியானவை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய லெஸ்லீ வெக்னர், "நடக்க முடியாத நிலையில் ஒரு பெண் வந்ததும், ஜிம் தொட்டவுடன் அந்தப் பெண் எழுந்து நடக்க தொடங்கியதும் போலியானவை. உண்மையில் அந்தப் பெண்ணிற்கு அவர்கள் அதிகமான போதை மருந்து அளித்து அவரது காலில் அடிப்பட்டுள்ளதாக அவரை நம்ப வைத்தனர். அதை நம்பிய அந்தப் பெண் அவர்கள் கூறியபடியெல்லாம் நடந்துக்கொண்டார்," என்று தெரிவித்தார்.

ஜிம் ஜோன்ஸின் இந்த அட்டூழியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகிற்குத் தெரிய துவங்கியது. அவரை ஒரு நட்சத்திரமாக சித்தரித்து வந்த சில ஊடகங்கள் உண்மை தெரியத் துவங்கியதும் அமைதியாகிவிட்டன. தன்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி ஜிம் சமாளித்து வந்தார். ஆனால் அடுத்த சில காலங்களில் இனி தனக்கு முன்பு போல் சமூகத்தில் அந்தஸ்து இருக்காது என்பதையும், அரசியல் ஆதரவுகள் கிடைக்காது என்பதையும் அவர் உணரத் தொடங்கினார்.

அமெரிக்காவிலிருந்து தப்பிய ஜிம் ஜோன்ஸ்

ஜிம் நிகழ்த்திய அற்புதங்களால் பிறகு, லெஸ்லி சமாதானம் அடைந்தார்.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜிம் நிகழ்த்திய அற்புதங்களால் பிறகு லெஸ்லி சமாதானம் அடைந்தார்.

தன் கைகளில் இருந்து அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவதை ஜிம்ஜோன்ஸ் உணர்ந்தார். அந்த நேரத்தில் அவர் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி இருந்தார்.

தென் அமெரிக்க பகுதியில் உள்ள ஒரு நாடு குயானா. அந்த அரசாங்கத்துடன் பேரம் பேசிய பின் பெரும் அளவிலான நிலத்தை அபகரித்தார் ஜிம் ஜோன்ஸ். குயானாவில் அவர் வாங்கிய நிலம் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருந்தது. குயானாவின் தலைநகரான ஜார்ஜ் டவுனிலிருந்து 300கிமீ தொலைவில் அந்தப் பகுதி அமைந்திருந்தது.

அங்கே ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி அதற்கு ஜோன்ஸ்டவுன் என்று பெயர் சூட்டினார் ஜிம் ஜோன்ஸ். இங்கிருந்து நீங்கள் ஜார்ஜ்டவுன் செல்வதற்கு இரண்டு வழிதான். ஒன்று நீங்கள் தனி விமானத்தில் செல்ல வேண்டும் அல்லது அங்கிருந்து 10கிமீ தூரத்திற்கு ஓட வேண்டும்.

ஜோன்ஸ்டவுனுக்குள் வருபவர்கள் ஜிம் ஜோன்ஸின் அனுமதியில்லாமல் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது. அங்கிருந்து யாரும் அப்படி தப்பிச் செல்லாமலிருக்க தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியிருந்தார் ஜிம்.

ஆனால் அதேநேரம் ஊடகங்களின் மூலமாக அதிப்படியாக நெருக்கடிகளை ஜிம் ஜோன்ஸ் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவிலிருந்து ஜோன்ஸ்டவுன் பகுதிக்கு 1976-77 காலகட்டத்தில் அவர் இடம்பெயர்ந்தார். 1977ஆம் ஆண்டிற்குள் ஜோன்ஸ்டவுனுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். எப்போதும் போலவே முதல் சில காலங்கள் வரை மகிழ்ச்சியாக இருந்த அந்த மக்கள் அடுத்த சில காலங்களில் இன்னல்களைச் சந்திக்கத் துவங்கினர். அவர்களுக்குப் போதுமான அளவு உணவுகள்கூட வழங்கப்படவில்லை.

மக்களின் பாஸ்போர்ட்களையும், அவர்களிடமிருந்த பணத்தையும் ஜிம் ஜோன்ஸ் பறித்து வைத்துக்கொண்டார் என்கிறார் ஜிம் கார்டர்.

ஜிம் ஜோன்ஸுக்கு எதிராக அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி

ஜிம் ஜோன்ஸிடம் மாட்டிக்கொண்ட மக்களின் உறவினர்கள் அங்கே அமெரிக்காவில் கவலையில் ஆழ்ந்தனர். இதுகுறித்த பேச்சுகள் வெகுவாக அதிகரித்தது. அதேநேரம், கலிபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினர் லியோ ரயான் ஜிம்ஜோன்ஸ் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்தார். ஊடக நபர்களை அழைத்துக்கொண்டு ஜோன்ஸ்டவுனுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

ஜோன்ஸ் டவுனுக்கு வருகிறவர்கள் ஆற்றின் வழியாகவே 19 மணி நேரம் பயணிக்கவேண்டும்.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜோன்ஸ் டவுனுக்கு வருகிறவர்கள் ஆற்றின் வழியாகவே 19 மணி நேரம் பயணிக்கவேண்டும்.

இதுகுறித்து ஜிம் கார்டர் கூறும்போது, "தனக்கெதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உணர்ந்த ஜிம் ஜோன்ஸ், 1978ஆம் ஆண்டு ஆகஸ்டு - செப்டம்பர் போன்ற எதோ ஒரு மாதத்தில் தன்னுடைய நம்பிக்கைக்குரிய நபர்களை மட்டும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் மக்கள் நம்மிடம் மகிழ்ச்சியாக இல்லை, நமக்கெதிராகப் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதேநேரம் நம்முடைய பெயரை நாம் வரலாற்றில் எழுதியே ஆக வேண்டும் என்று ஜிம் ஜோன்ஸ் பேசியதாக' அவர் குறிப்பிடுகிறார்.

'அப்போதுதான் தன்னை நம்பி வந்த ஒட்டுமொத்த கூட்டத்தினரையும் தற்கொலைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அபாயகரமான முடிவை அவர் எடுத்தார். இதற்கு யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது அங்கிருந்த மூன்று பேர் மட்டுமே கைகளை உயர்த்தினர்,' என்று குறிப்பிடுகிறார் ஜிம் கார்டர்.

லியோ ரயான் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஜோன்ஸ்டவுனிற்குள் வருவதற்கு முன்பாகவே அங்கே பதட்டமான சூழல் நிலவத் துவங்கியது.

அப்போதுதான் இனி என்ன ஆனாலும் பரவாயில்லை, நம்முடைய குழந்தைகளைக் காப்பதற்காக இங்கிருந்து நாம் தப்பிச் செல்ல வேண்டும் என்று லெஸ்லீ, ஜிம் கார்டர் மற்றும் வெர்னர் ஆகிய மூவரும் முடிவெடுத்தனர்.

நவம்பர் 18, 1978 அன்று என்ன நடந்தது?

காங்கிரஸ் உறுப்பினர் லியோ, ஜோன்ஸ் டவுனிற்குள் நுழைந்தபோது அங்கே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன.

அங்கே மக்கள் நலமாகத்தான் இருக்கிறார்கள் என்று லியோ அன்றைய தினம் நம்பினார். அப்போதுதான், 'தங்களை இங்கிருந்து மீட்குமாறு' ஒரு தாளில் எழுதி அங்கிருந்த நிருபர் ஒருவரிடம் அளித்தார் வெர்னன்.

ஆனால் அடுத்த நாள் அங்கிருந்த காட்சிகள் மாறின. யாரேனும் இங்கிருந்து வெளிவர விரும்புகிறீர்களா என்று லியோ கேட்டபோது, இருபது நபர்கள் வரை கைகளை உயர்த்தினர். அந்த நேரத்தில்தான் லெஸ்லீ தனது குழந்தையையும் மற்ற இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்.

கிரேஸ் ஸ்டோனின் மகன் ஜான்

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, கிரேஸ் ஸ்டோனின் மகன் ஜான்

அதேநேரத்தில் ஜோன்ஸ்டவுன் பகுதிக்குள் ஜிம் ஜோன்ஸின் ஆட்களால் லியோ கத்தியால் தாக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், ஊடகங்களுக்கு மத்தியில் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினரையே தாக்கும் அளவுக்கு ஜிம் ஜோன்ஸுக்கு அதிகாரம் வந்துவிட்டதா என்று குரல் எழுப்பத் துவங்கினர். இதனால் அங்கே அசாதாரணமான சூழல் நிலவத் தொடங்கியது.

லியோ ரயான் ஜோன்ஸ்டவுனிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வெர்னன் உட்பட மக்கள் சிலர் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினர்.

அப்போது அங்கே திடீரென ஜிம் ஜோன்ஸின் ஆதரவாளர்கள் பலர் ட்ராக்டரில் வந்தனர். அவர்கள் மக்களை நோக்கி கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் துவங்கினர். அதில் லியோ ரயான், அவருடன் இருந்த பத்திரிக்கையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். வெர்னன் கோஸ்லீக்கு காலிலும் வயிற்றிலும் காயம் ஏற்பட்டது.

ஜிம் ஜோன்ஸ் தனது ஆதரவாளர்கள் திரும்பி வந்த பிறகு மர்மமான முறையில் புன்னகை ஒன்றை வெளிப்படுத்தினார்.

ஜோன்ஸ்டவுனில் வசித்து வந்த மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய ஜிம்ஜோன்ஸ், ஒலிப்பெருக்கியில் பேசத் துவங்கினார்.

'என்னுடைய குழந்தைகளே நான் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்க முயன்று வந்தேன். ஆனால் உங்களில் சிலர் என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நாம் ஒன்றாக இணைந்து வாழ அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்களுக்கு முன்னால் ஒன்றாக நாம் மரணித்துக் காட்ட வேண்டும்,'' என்று அறிவித்தார்.

சைனைடு கலந்த பானம் தரப்பட்ட கோப்பைகள்

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, சைனைடு கலந்த பானம் தரப்பட்ட கோப்பைகள்

பின்னர் மக்களை துப்பாக்கி ஏந்தியபடி ஜிம் ஜோன்ஸின் ஆட்கள் சுற்றி வளைத்தனர். ஒரு பெரிய வாளி நிறைய இருந்த பானத்தில் பொட்டாஸியம் சைனைடு கலக்கப்பட்டிருந்தது.

முதலில் அங்கிருந்த குழந்தைகளுக்கு சைனைடு நிரப்பப்பட்ட ஊசிகள் செலுத்தப்பட்டன. அந்தக் குழந்தைகள் இறந்துபோன பின் பெற்றோர்கள் தானாகவே தங்களது வாழ்வை முடித்துக் கொள்வார்கள் என்பது ஜிம் ஜோன்ஸின் எண்ணம்.

ஜிம் ஜோன்ஸின் இந்தப் பேச்சு அவரால் அப்போது பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளுடைய டேப் பின்னால் காவல்துறையினரின் கைகளுக்குக் கிடைத்தது.

"இந்த மக்கள் அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக இந்த உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சம்பவத்தன்று இறந்து கிடந்த பலரது உடல்களில் ஊசி செலுத்தப்பட்டிருந்த அடையாளங்கள் காணப்பட்டன. இவர்கள் தாங்களாக விஷத்தை அருந்தவில்லை. அவர்களுக்கு வலுகட்டாயமாக சைனாடு செலுத்தப்பட்டிருக்கிறது," என்கிறார் ஜிம் கார்டர்.

ஜிம் கார்டரும் அங்குதான் இருந்தார். ஆனால் அவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை. அங்கிருந்த பெண் ஒருவர் ஜிம் கார்டரிடம் 3 பைகள் நிறைய பணத்தை அளித்து இங்கிருந்து தப்பிவிடுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் அங்கிருந்து கிளம்புவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பாக அவரது மனைவியும் மகனும் மரணத்தின் விளிம்பில் இருந்ததாகவும் தன்னால் அவர்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்ய முடியவில்லை என்றும் ஜிம் கார்டர் வருத்தத்துடன் கூறுகிறார்.

மரணத்துக்காக காத்திருந்த ஜிம் கார்ட்டர்.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, மரணத்துக்காக காத்திருந்த ஜிம் கார்ட்டர்.

என்ன செய்வதென்று தெரியாமல் தான் காட்டிற்குள் அழுதுகொண்டே சென்றதாகவும் குயானாவின் ராணுவத்தினர் தன்னை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் ஜிம் கார்டர் கூறுகிறார்.

ஜிம் கார்டரை போலவே, ஜோன்ஸ்டவுனிலிருந்து தப்பிச் சென்ற வெர்னன் மற்றும் லெஸ்லீ ஆகியோரும் காட்டிற்குள் இருந்து ராணுவத்தினரால் மீட்கப்பட்டனர்.

ஆனால் ஜோன்ஸ்டவுனிலிருந்த 918 பேரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இறந்து போனவர்களில் 300 குழந்தைகளும் அடக்கம். தன்னை நம்பி வந்த இத்தனை பேருக்கு விஷம் அளித்துக் கொன்ற ஜிம் ஜோன்ஸ் தான் மட்டும் விஷம் எடுத்துக் கொள்ளவில்லை.

ஜிம் ஜோன்ஸ் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற புதிருக்கு விடை கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், BBC 4

படக்குறிப்பு, ஜிம் ஜோன்ஸ் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற புதிருக்கு விடை கிடைக்கவில்லை.

தலையில் துப்பாக்கிக் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் ஜிம் ஜோன்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அத்தனை பேரை கொன்ற பிறகு தலைகணம் மிகுந்த ஜிம் ஜோன்ஸ் தப்பிக்க முயன்றிருக்கலாம். அப்போது ராணுவத்தினர் யாரோ ஒருவர் அவரை சுட்டிருக்கலாம் அல்லது ஜிம் ஜோன்ஸ் தன்னைத் தானே துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இவரது மரணம் இன்று வரை தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கிறது.

ஜிம் ஜோன்ஸின் மனைவியும் குழந்தைகளும்கூட அங்கே இறந்து கிடந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர், 'இங்கே அனைவரும் இறந்துவிட்டார்கள், அவர்களின் உடல்கள் மட்டுமே இருக்கின்றன. எல்லாம் முடிந்துவிட்டது,'' என்று கவலையுடன் தெரிவித்தனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: