மனிதர்களுக்கு ஐம்புலன்கள் அல்ல, ஏழு புலன்கள் உள்ளன என்பது தெரியுமா?

நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ்

பட மூலாதாரம், KINDNESS NAZARETH CASTELLANOS

படக்குறிப்பு, நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ்
    • எழுதியவர், அலெக்சாண்ட்ரா மார்ட்டின்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை

நம்முடைய உடல் தோரணையும் முக பாவனைகளும் மூளைக்கு முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அவற்றுக்கு ஏற்ப மூளை செயலாற்றுகிறது என, ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள கம்ப்லுடென்சே பல்கலைக்கழகத்தைச் (Complutense University of Madrid) சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கூறுகிறார்.

"நமது முகம் கோபமாக தோன்றினால், நாம் வழக்கமாக கோபமாகவே இருப்போம் எனக்கருதி கோபம் தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை தூண்டிவிடும்," என அவர் கூறுகிறார். அதேபோன்று தான், நம் உடல் தோரணை மற்றும் முக பாவனைகள் கவலையாக தோன்றினால் கவலை தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை ஊக்குவிக்கும்.

நாம் முன்பு அறிந்திருந்ததைவிட தற்போது நம்முடைய உடலின் மற்ற பாகங்களுடன் மூளை தொடர்பில் இருக்கிறது என்பது ஆராய்ச்சிகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

"நமக்கு ஐந்து உணர்புலன்கள் அல்ல, ஏழு உணர்புலன்கள் இருக்கின்றன" என நாசரேத் கூறுகிறார். நுகர்தல், சுவைத்தல் உள்ளிட்ட ஐம்புலன் உணர்வுகள் "மூளைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல," என்கிறார் அவர்.

இதுகுறித்து அவர் மேலும் பிபிசி முண்டோ சேவைக்கு பதில் அளித்தார்.

நமது உடல் தோரணைகள் எப்படி மூளையை பாதிக்கின்றன?

நமக்கு பள்ளிகளில் நுகர்தல், பார்த்தல், கேட்கும் திறன், தொடுதல், சுவைத்தல், உள்ளிட்ட ஐந்து உணர்புலன்கள் குறித்தே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும் உடலின் புறப்பகுதியில் நிகழ்பவை.

ஆனால், இப்போது ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு ஏழு உணர்புலன்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் முதலாவது, நம் உள்ளுணர்வுகளை அறியும் இன்ட்ராசெப்ஷன் (interoception) திறனாகும்.

மூளை

பட மூலாதாரம், Getty Images

இன்ட்ராசெப்ஷன் என்றால் என்ன?

நம் உடலின் உள்ளுறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்ற தகவல் மூளைக்கு சென்றடைகிறது. அதாவது, இதயம், வயிறு, குடல் உட்பட உள்ளுறுப்புகளுக்குள் நடக்கும் அனைத்தும் மூளைக்கு சென்றடையும். இவற்றுக்குத்தான் மூளை அதிக முக்கியத்துவம் தரும்.

இரண்டாவது, புரோபிரியோசெப்சன் உணர்வு (proprioception). இது, நம் உடல் புறப்பகுதியில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்ததாகும். நம் உடல் தோரணை, சைகைகள் மற்றும் உடல் முழுவதும் நாம் கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றி மூளையை அடையும் தகவல்கள்தான் புரோபிரியோசெப்சன்.

அதாவது, நாம் பதற்றமடையும் போது குடலில் ஏற்படும் உணர்வுகள் அல்லது நாம் சோர்வாக இருக்கும்போது கண்களில் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.

இன்ட்ராசெப்சன், புரோபிரியோசெப்சன் - இரண்டும் மூளையின் முதல் மற்றும் இரண்டாம் உணர்புலன்கள் என்பதற்கு என்ன பொருள்?

நமது முழு உடலும் எப்படி இருக்கிறது என்பதை மூளை அறிந்திருக்கும் என்பது நமக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், மூளை அவ்வாறு அறிந்திருப்பவை வெறும் தகவல்கள் என்றே இதுவரை அறியப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அவை ஓர் உணர்புலன் என தெரியவந்துள்ளது. அதாவது அந்த தகவல்களின் அடிப்படையில் மூளை செயலாற்றுகிறது.

மூளையின் எந்தப் பகுதியில் நமது தோரணை அல்லது சைகைகளை உணர்கிறோம்?

நமது மூளையில் தலைமுடிக்கு நாம் பயன்படுத்தும் 'ஹேர்பேண்ட்' போன்ற ஒரு பகுதி உள்ளது. இது சோமாடோசென்சரி கார்டெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது (somatosensory cortex). இங்குதான் நாம் சைகைகளை உணர்கிறோம்.

உடலின் நீளமான பகுதியில்தான் அதிக அளவு நியூரான்கள் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், நம்முடைய சுண்டுவிரலைவிட நம் முதுகுப்புறத்தில் அதிக நியூரான்கள் இருக்கும்.

ஆனால், நமது உடலின் சில பகுதிகளுக்கு மூளை அதிக முக்கியத்துவம் அளிக்கும். குறிப்பாக முகத்துக்கும் கைகளுக்கும் மூளை அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கும்.

இதனால், நமது சுண்டுவிரல்களில் முதுகுப்புறத்திலும், கால்களிலும் இருக்கும் நியூரான்களைவிட நூறு மடங்கு அதிக நியூரான்கள் இருக்கும். இதனால்தான் நாம் பேசும்போதுகூட கைகளை பயன்படுத்துகிறோம்.

மூளை

பட மூலாதாரம், Getty Images

முக பாவனைகள் எப்படி மூளையை பாதிக்கின்றன?

நம் முகத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு மூளை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

உதாரணமாக, நாம் முகம் சுளிக்கிறோம் என்றால், மூளையின் ஆழமான மண்டலங்களில் இருக்கும் அமிக்டாலா (amygdala) எனும் பகுதியை மூளை முடுக்கிவிடுகிறது. இதனால், நாம் இன்னும் அந்த உணர்வை அதிகமாக வெளிப்படுத்துவோம். நம்மை மனரீதியாக அழுத்தும் சூழல் ஏற்படும்போது இந்த அமிக்டாலா பகுதி முடுக்கிவிடப்படும்.

நாம் சிரிக்கும்போதோ அல்லது முகம் சுளிக்கும்போதோ மூளை எப்படி செயலாற்றுகிறது?

மூளை

பட மூலாதாரம், Getty Images

ஏற்கனவே புரோபிரியோசெப்சன் குறித்துப் பேசினோம். நாம் வருத்தமாகவோ அல்லது கோபமாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறோம் என்றால், அது நம் முகத்தில் வெளிப்படும். அதற்கு மாறாக நாம் கோபம் கொள்கிறோம் என்றால், "இந்த முகத்திற்கு கோபத்திற்குண்டான குணங்கள் இருக்கின்றன" என கருதி, கோபம் தொடர்பான நரம்பியல் அமைப்புகளை மூளை முடுக்கிவிடும். அமைதியாக இருந்தால் அதுதொடர்பான நரம்பியல் அமைப்புகளை முடுக்கிவிடும்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாம் மன அழுத்தம், கோபம் அல்லது வருத்தமாக இருந்தாலும் முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டால், மூளை 'மனநிலை இடம்பெயர்வு' என்ற ஒன்றை செயல்படுத்துகிறது. அதாவது, நம் மூளை இந்த சமயத்தில் முகத்திற்கு ஏற்ப மனநிலையை பொறுத்த முயற்சிக்கும்.

நமது உடல் குறித்து புரிந்துகொள்வது எப்படி?

நமது உடல் குறித்து புரிந்துகொள்வதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது அதனை நன்றாக கவனிக்க வேண்டும். நமது உடல் குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமக்கு ஒரு உணர்வு ஏற்படும்போது ஒரு நொடி நின்று அந்த உணர்வை நாம் உடலில் எங்கு உணர்கிறோம் என்பதை அறிய வேண்டும்? அந்த சமயத்தில் உங்களது உடலை எப்படி உணர்வது என்பதை அறிய வேண்டும். இது உங்கள் உடலை கவனிப்பதன் மூலமே வரும்.

மூளை

பட மூலாதாரம், Getty Images

கடினமான தருணங்களில் இந்த விழிப்புணர்வு உதவுமா?

உதாரணமாக, பதற்றமாக இருக்கும்போது, ​​​​நமது வயிற்றிலோ அல்லது தொண்டையிலோ ஏதோ ஒரு உருளை உருள்வதை போன்று உணர்ந்திருப்போம். இவை அனைத்தும் மூளையால் உணரப்படுகிறது. அந்த உணர்வுகளை நாம் அறிந்தால், மூளைக்கு வந்த தகவல் தெளிவாகிறது. இதனால், ஒரு உணர்ச்சியை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்தி அறியும் திறன் மூளைக்கு அதிகரிக்கும்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: