ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இதைத் தடை செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டுமெனக் கோரி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார் சட்ட அமைச்சர்.
இதற்கிடையில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தாகக் கூறப்படுவோர் எண்ணிக்கை 25ஐ எட்டியுள்ளது.
இந்த விளையாட்டில் பணத்தை இழந்த ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பாக உயிரிழந்தார்.
சென்னை மணலி எம்.ஜி.ஆர். நகர் கால்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பார்த்திபன் என்பவர், ஆன்லைன் ரம்மியை விளையாடும் பழக்கம் உடையவர். இதில் பெரும் பணத்தை இழந்த நிலையில், மனைவி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிடமிருந்து 50,000 ரூபாயைக் கடனாகப் பெற்றார்.
அந்தப் பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கிய நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு சில நாட்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வேலாயுதபுரம் கிராமத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா மாஜி தன் கணவருடன் வசித்து வந்தார்.
இருவரும் ஒரு நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். கணவன் - மனைவி இருவருக்குமே ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்தது. பண இழப்பு ஏற்பட்டதும் கணவர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்ட நிலையில், மனைவி வந்தனா அதைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் அளவுக்குக் கடன் ஏற்பட்ட நிலையில், கணவன் - மனைவிக்கு இடையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், வந்தனா தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மி காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்திருப்பதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் முரண்பாடுகள் நிலவுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ், கடந்த 15 மாதங்களில் ஆன்லைன் ரம்மியால் 32 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடுகிறார்.
உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விளையாட்டைத் தடை செய்ய தமிழக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
2020ஆம் ஆண்டில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு இந்த விளையாட்டைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்திற்கு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துவிட்டாலும், அதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகின. சென்னை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லாது என அறிவித்தது.
இதற்குப் பிறகு தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய சட்டம் இயற்றுவது குறித்து ஆராய ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் இந்த விளையாட்டைத் தடை செய்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கிடையில் சட்டமன்றம் கூடியதால், புதிய சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்றம் கூடியதிலிருந்து ஆறு வாரங்களில் அவசரச் சட்டம் காலாவதியாகும் என்பதால், கடந்த நவம்பர் 17ஆம் தேதி அந்தச் சட்டம் காலாவதியானது.

பட மூலாதாரம், Getty Images
சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அந்தச் சட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில், இந்தச் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கேள்வியெழுப்பியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளித்தது. இருந்தும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று காலையில் ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.
சட்டம் தனது பரிசீலினையில் இருப்பதாகவும் விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக, பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரகுபதி.
மேலும், அவசரச் சட்டம் இயற்றப்பட்டபோது 17ஆக இருந்த உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 25ஆக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யும் சட்டங்களை இயற்றியிருக்கின்றன. சிக்கிம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் அவற்றை முறைப்படுத்தி அனுமதிக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













