ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு

இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில் திறன்களை வளர்க்கிறதா அல்லது இழப்புகளை ஏற்படுத்துகிறதா என்று கண்டறியவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல தற்கொலை சம்பவங்களில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் பணத்தை இழந்தது காரணமாக உள்ளதைத் தொடர்ந்து புதிய சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ளது.

அது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டில் எந்த விதத்தில் பணத்தை மக்கள் ஏமாறுகிறார்கள், என்ன விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என விரிவான ஆய்வை நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கண்டறியவேண்டும் என்றும் அந்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த விளம்பரங்களை எவ்வாறு தடை செய்வது, மக்கள் எவ்வாறு சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள் உள்ளிட்ட காரணங்களை அந்தக் குழு தகவல்களை சேகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏமாந்தவர்கள் குறித்த வழக்குகள், தற்கொலை உள்ளிட்ட விவரங்களை காவல்துறை இந்த குழுவிடம் அளிக்கவேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சி. சந்துரு

இதுவரை தமிழ்நாட்டில் 23 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளதால், காலம் தாழ்த்தாமல் தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில், ''ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்குக் காரணிகள் தேவை,'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ''ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு, நிரந்தர தீர்வுக்காக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களைக் காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்,'' என்றும் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: