ஆன்லைன் ரம்மி உங்களை அடிமைப்படுத்துவது எப்படி? உண்மையிலேயே பணம் சம்பாதிக்க முடியுமா? - நிபுணரின் விளக்கம்

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடந்த 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஓர் இளம்பெண் கூட தற்கொலை செய்து கொண்டதாக நாம் செய்திகளில் பார்த்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கும் வகையில் அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக் குழு ஒன்றையும் தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி எப்படி இயங்குகிறது? விளம்பரங்களில் காண்பிப்பது போல நிஜமாகவே ஆன்லைன் ரம்மி மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணத்தை இழந்தாலும் எது மக்களை மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டுகிறது? இதற்கு என்ன தீர்வு என்பது பற்றி சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன் மற்றும் தேசிய குற்றப்புலனாய்வுத்துறை இணை இயக்குநரும் மனநல மருத்துவருமான டாக்டர் ஹேமாகார்த்திக் ஆகியோர் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்

ஆன்லைன் ரம்மி எப்படி வடிவமைக்கப்படுகிறது?

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கேமிங் துறையில் (Gaming Industry) சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 360 மில்லியன் சந்தை மதிப்பு கொண்டிருந்த இந்தத் துறை இந்த வருட முடிவுக்குள் 510 மில்லியனை தொடும் என்கிறது KMPG ஆய்வு முடிவுகள்.

எந்த ஒரு ஆன்லைன் விளையாட்டு என்றாலும் அந்த நிறுவனங்கள் முதலில் வேலைக்கு தேர்வு செய்யும் நபர் கேமிங் சைக்காலஜிஸ்ட்.

மனித மனம் எந்த நிறங்களை விரும்புகிறது, விளையாட்டின் ஒவ்வொரு நகர்வும் மனித மனங்களில் என்ன தாக்கத்தை உருவாக்கும், எவ்வளவு மணி நேரங்கள் மளிதர்களால் விளையாட்டில் செலவு செய்ய முடியும் என்பதை கேமிங் மனநல நிபுணர்கள் ஒரு அறிக்கையைக் கொடுப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு ஆன்லைன் விளையாட்டை வடிவமைக்கும் போதே முடிந்தவரை நாம் அதிக நேரம் செலவழிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.

ஆன்லைன்

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் ரம்மியும் இது போலத்தான். சீட்டின் வடிவம், நிறம், இணையதளங்களில் காண்பிக்கப்படும் வாசகங்கள் என அனைத்தும் மக்களை வசீகரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும்.

மக்களை எப்படி ஈர்க்கிறது ஆன்லைன் ரம்மி விளையாட்டு?

ஆன்லைன் ரம்மியின் டார்கெட் நடுத்தர குடும்பங்கள் தான். 2 வகையான விளம்பரங்களை வைத்து மக்களை ஈர்ப்பார்கள். ஒன்று நடிகர்களை வைத்து ஆன்லைன் ரம்மி மூலம் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்று விளம்பரம் செய்யப்படும். மக்களும் நடிகர்கள் மேல் உள்ள நம்பிக்கையால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குள் வரத் தொடங்குவார்கள்.

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது நடுத்தர மக்கள் போன்றவர்களை நடிக்க வைத்து இயல்பாகப் பேச வைத்து விளம்பரம் செய்யப்படும். குறிப்பாக அந்த விளம்பரங்களில் பேசுபவர்கள், "நான் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் ஆன்லைன் ரம்மி விளையாடினேன். அதனால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறேன். உங்களாலும் முடியும்" என்று விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் ஃபீரியாக இருக்கும் நேரங்களில் விளையாடிப் பார்ப்போம் என்ற ஆர்வத்தைத் தூண்டி உள்ளே வர வைக்கும் யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்லைன் ரம்மியின் அல்காரிதம் எப்படி செயல்படுகிறது?

ஆன்லைன் ரம்மி RNG ( Random Number Generator ) என்ற அல்காரிதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது எதிரில் இருப்பவர் என்ன சீட்டு எடுக்கிறார், என்ன எண்கள் வரும் என்பதை விளையாடுபவர்களால் கணிக்க முடியாது. நமக்கு எதிராளியாக மனிதர்கள் விளையாடுகிளார்கள் என்று பல நிறுவனங்கள் சொன்னாலும் பெரும்பாலான நேரங்களில் ப்ரோக்ராம் செய்யப்பட்ட மிஷின்களே விளையாடுகிறது. இதனால் ஆரம்பத்தில் மக்களை அவர்களின் திறமை அடிப்படையில் தான் விளையாடுகிறார்கள் என்பதை நம்ப வைக்க சில ஆட்டங்கள் வரை ஜெயிக்க வைத்து பணம் வழங்கப்படும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை இழக்க நேரிடும்.

ஆன்லைன் ரம்மியில் நீங்கள் பதிவு செய்தவுடன் என்ன நடக்கும்?

நீங்கள் ஆன்லைன் ரம்மியில் பதிவு செய்தவுடன் உங்களுக்கு போனஸ் கேஷ் விளையாடுவதற்கு வழங்கப்படும். அதில் சிறிய வெற்றிகள் மூலம் பணம் ஜெயிப்பீர்கள். மக்களின் மனம் தன்னுடைய திறமையால் மட்டுமே இந்த பணம் வருகிறது என்று நம்பத் தொடங்கும்.

காணொளிக் குறிப்பு, ஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?

நீங்கள் 5000 ரூபாய் வைத்து விளையாடும் போது 10000 கிடைக்கும். சில நேரங்களில் 10,000 வைத்து விளையாடும் போது 20,000 கிடைக்கும். உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படுவீர்கள். அதேபோல அதில் ஜெயிக்கும்போது உடனடியாக பணம் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வருமாறு தொழில்நுட்ப வசதிகள் செய்திருப்பதால், "அட பரவாயில்லையே 1 மணி நேரத்துல 5000 ரூபாய் சம்பாதித்து விட்டோமே" என்று நினைக்க தொடங்குவார்கள். இது தான் தொடக்கம்.

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

இருபது முதல் இருபத்தைந்து விளையாட்டு வரை மக்களை ஜெயிக்க வைக்கும் அதே தருணத்தில், மறுபக்கம் மிஷின் லெர்னிங் (Machine Learning) மூலம் பிண்ணனியில் (Back End) உங்கள் மனம் மற்றும் உங்கள் விளையாட்டு முறையை வைத்து உங்களைப் பற்றிய சைக்கலாஜிக்கல் விவரங்களை மிஷின்கள் (User profile) உருவாக்கத் தொடங்கும்.

இதை Sophisticated Predictive Analytics Algorithm என்று சொல்வார்கள். நீங்கள் இப்படித் தான் விளையாடுவீர்கள் என்று மிஷின்கள் கணிக்கத் தொடங்கியவுடன் ஆட்டம் கடுமையானதாக இருக்கும். இந்தத் தருணத்தில் மக்கள் வெளியே வந்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் பலரும் இந்தக் கட்டத்தில் அதைவிட்டு வருவதில்லை.

இழப்பு என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் விளையாட எண்ணம் வருகிறது?

கொஞ்சம் பணத்தை இழந்ததும் சிலர் வெளியே வருகிறார்கள். ஆனால் Sophisticated Predictive Analytics Algorithm மூலம் பயனர்களின் மனதைப் படித்த மெஷின்கள் லாயல்டி ரிவார்ட் (Loyalty Reward) என்று வழங்குவார்கள். அதாவது இவ்வளவு நாள் நன்றாக விளையாடினீர்கள், அதனால் உங்களுக்கு மீண்டும் 20,000 ரூபாய் போனஸ் தருகிறோம், விளையாட வாருங்கள் என்று அழைக்கும். சரி ஒரு முறை விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றும். ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் வரும். ஆசையால் மீண்டும் விளையாடத் தொடங்க, அதிக பணத்தைப் போடுவார்கள். உதாரணமாக 50,000 இழந்திருப்பார்கள். 20,000 ரூபாய் போனஸ் கொடுக்கப்பட்டு, அதில் 5,000 ரூபாய் ஜெயித்திருப்பார்கள். மீண்டும் விளையாடியால் விட்டதைப் பிடித்து விட முடியும் என்று நினைத்துத் தொடர்ந்து விளையாடுவார்கள்.

இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

சமூகத்திற்கு, குடும்பத்திற்குப் பயந்து இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று மீண்டும் விளையாடத் தொடங்குவார்கள். ஆனால் கடைசி வரை அவர்களால் நினைத்த மாதிரி பணம் ஜெயிக்க முடியாது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் திறமையாகத் தான் விளையாடுகிறீர்கள் என்று நம்ப வைக்க நீங்கள் வெற்றி பெறும் கடைசி தருணங்களில் மனித உணர்வுகளோடு விளையாடுவார்கள்.

இன்னும் ஒரு கார்டு சரியாக வந்துவிட்டால் 50,000 பணம் கிடைக்கும் என்ற நிலை வரும்போது, நெட்வொர்க் பிரச்னை என்று கடைசி நேரத்தில் காண்பிக்கும். அப்போது நான் சரியாகத் தான் விளையாடினேன். ஆனால் நெட்வொர்க் சரியில்லாததால் பணத்தை இழந்து விட்டேன் என்று மக்களை நினைக்க வைப்பார்கள். இதுவும் மக்கள் தொடர்ந்து விளையாட ஒரு காரணம்.

இது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மியால் மனநலமும் பாதிக்கப்பட்டு அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு நம் வாழ்வையே சிதைக்க கூடிய ஆபத்துக்கள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் தேசிய குற்றப்புலனாய்வுத்துறை இணை இயக்குனரும் மனநல மருத்துவருமான டாக்டர் ஹேமாகார்த்திக்,

ஆன்லைன் கேமிங் நிறுவனத்தில் 7 நாட்கள் இவர் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்களை கண்டறிந்திருக்கிறார். ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை அதில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் மற்றும் கோடிங் விவரங்கள் அனைத்தும் AI என்று சொல்லக்கூடிய Artificial Intelligence ஐ மையமாக வைத்து இயங்குகிறது. இந்த இணையதளங்கள் வடிவமைக்கும் போது Data Scientist கள் பல்வேறு நாடூகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை வைத்து தான் வடிவமைப்பார்கள். மனித உணர்வுகளை மையமாக வைத்து வடிவமைக்கப்படுவதால் இது நாமே சென்று பொறியில் சிக்கிக் கொள்வது போன்றது.

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

மேலும் ஆன்லைன் ரம்மியை தொடர்ந்து விளையாடும் உங்கள் மனம் எப்போதும் ஒரு வித பதட்டத்திலேயே இருப்பதால் அன்றாட செயல்களில் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். கூடுதலாக நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை நொடிகளில் இழக்கும் போது ஒரு அதிலிருந்து மீள முடியாமல் வெறுப்படைந்து தற்கொலைக்கு தூண்டப்படுவீர்கள்.

ஆனால் அப்படி ஒரு உணர்வு வரும் போது சரியான நேரத்தில் மனநல மருத்துவர்களை அணுகினால் 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் பொருளாதார மற்றும் குடும்ப சூழல்களை பொறுத்து தெரபிக் சிகிச்சை முறைகள் வழங்கப்படும். பின்னர் முழுமையாக ஆன்லைன் ரம்மி போதையில் இருந்து வெளிவந்துவிடலாம் என்று கூறுகிறார் டாக்டர் ஹேமாகார்த்திக்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தியாவில் ஆன்லைன் ரம்மியை வரைமுறை படுத்துவதற்கு நிலையான சட்டங்கள் இல்லை. சில மாநிலங்களில் மட்டும் சில இணையதளத்தை ப்ளாக் செய்தாலும் விபிஎன் மூலம் இயக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆகையால் மக்கள் தான் முதலில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு வகை எலக்ட்ரானிக் போதை தான். அதற்குள் போய்விட்டால் மீண்டு வருவது கடினமாக இருக்கும். எல்லா பொழுதுபோக்கிற்கும் குறிப்பிட்ட நேரத்தை வைத்துக்கொண்டால் எதற்கும் நாம் அடிமையாக மாட்டோம்.

காணொளிக் குறிப்பு, 80 வயதிலும் ஓயாமல் உழைக்கும் தன்னம்பிக்கை தாத்தா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: