ஆன்லைன் ரம்மி: செல்வம் தரும் சுரங்கமா? உயிரைக் கொல்லும் நரகமா?

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி அதில் பணத்தை இழந்து, நாளைடைவில் கடன்‌ சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தை‌ சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார்.

அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு காவலரும், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் புதுச்சேரி சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரியில் ஒருவர் தற்கொலை

புதுச்சேரி யூனியன் பிரதேத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 38) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் சிம் கார்டு நிறுவனத்தில் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுது போக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி தன்னிடமிருந்த சேமிப்பு பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள் நண்பர்களிடம் சுமார் 30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர் அவரது மனைவிக்கு உருக்கமான ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அதில் அவர், "போதைக்கு அடிமையாவது போல இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, விளையாடாக் கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தேன். இந்த விளையாட்டில் இரண்டு நாளில் 50 ஆயிரம் வென்றால், மற்ற மூன்று நாட்களில் 2 லட்சம் ரூபாய் இழக்க நேரிடுகிறது. இந்த தன்மையை நான் புரிந்து கொள்ளாமல், விட்ட பணத்தை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னால் எந்த போட்டியிலும் வெல்ல முடியவில்லை," என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து எப்படியாவது மீண்டு வந்து விடவேண்டும் என்று முயற்சித்ததாக கூறும் விஜயகுமார். வேறு‌ விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், என்னால் மாற்றிக் கொள்ளவே முடியாமல் இதற்கு அடிமையாக இருந்தேன் என்று கூறுகிறார் அவர்.

"எனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது ஆனால் எனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் நம்பிக்கையில் செல்கிறேன். ஆவிகள் இருக்கிறது என்பது உண்மை என்றால் கண்டிப்பாக உங்களுடன் இருந்து, அனைவரையும் பார்த்துக்கொண்டே இருப்பேன்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்

கணவரின் இழப்பு குறித்து அவரது மனைவி மதி கூறுகையில், "கொரோனா காலங்களில் பொழுது போக்கிற்காக மட்டுமே இந்த ஆன்லைன் ரம்மியை‌ விளையாடினார். ஆரம்பத்தில் 100 ரூபாய் போட்டு, 500 ரூபாய் வெல்வது. 500 ரூபாய்‌ போட்டு 5000 ரூபாய் வெல்லும்படி இருந்தது. ஆனால் அப்படியே தொடர்ந்து அந்த விளையாட்டிற்கு அடிமையாகி சுமார் 30 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துவிட்டார்."

"அப்படி விளையாட விளையாட இதில் முழுவதுமாக ஏமார்ந்து விட்டார். இதை போன்று பணம் போட்டு இந்த விளையாட்டில் வென்றுவிடலாம் என்று யாரும் விளையாட வேண்டாம். இல்லையென்றால் என்னைப் போன்ற இழப்புதான் அனைவருக்கும் நேரிடும். இதுபோன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும்," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில்‌ இருந்து மீண்ட நபர்

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி இதிலிருந்து மீண்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன் என்பவரிடம் பிபிசியிடம் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்தேன். பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இதையடுத்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு மீண்டும் வேறொரு ஆன்லைன் ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்து மீண்டும் விளையாட தொடங்கினேன். ஒருமுறை இந்த ஆன்லைன் ரம்மியை விளையாடிவிட்டு பின்னர் நாம் விளையாடாமல் இருந்தால், சரியாக மாதம் சம்பவம் வங்கி கணக்கில் வந்த உடனே, செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சலுகை வழங்குவது போல செய்தி வரும்.

குறிப்பாக, அதில் நம்மை விளையாட்டிற்கு தூண்டும் வகையில் செய்து அனுப்புவார்கள். பின்னர் அதை பார்த்து மீண்டும் விளையாடுவேன், இதே போன்று நம் வங்கி கணக்கில் பணம் சேரும் நேரத்தில் சரியாக இதுபோன்று சலுகை என்ற செய்தி அனுப்பி சாமானிய மனிதர்களின் ஆசையை தூண்டி விடுகின்றனர்.

இந்த விளையாட்டின் மூலமாக நான் அனைத்திலும் கவனம் செலுத்த தவறினேன். வீட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் இதற்கு அடிமையக்கிவிட்டது. வீட்டில் மற்றவர்கள் நம்மை மட்டமாக பார்க்கும் நிலை ஏற்பட்டது. எனது மகளுக்கு உடல்நிலை முடியால் இருந்தபோது அதைக்கூட கவனித்துக் கொள்ளாமல், இந்த விளையாட்டிலே முழ்கிப் போனேன்," என்கிறார்.

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Getty Images

அது ஒரு கட்டத்தில் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் என்னை வெறுக்கும் சூழலுக்கு தள்ளியதாக கூறும் இளங்கோவன். இந்த விளையாட்டில் பண இழப்புடன் சேர்த்து, அந்த பழக்கம் எனது மனைவி, பிள்ளைகளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டதால் இதை முழுவதுமாக விட்டு விலகியதாக கூறுகிறார் அவர்.

"இந்த விளையாட்டில் முதலில் பதிவிறக்கம் செய்து, நம்முடைய விவரங்கள் அனைத்தும் கொடுத்த பிறகு அதன் மூலமாக 100 ரூபாய் வங்கி கணக்கில் கிடைக்கும். இதை பார்த்து ஒவ்வொருவரும் அவர்களது வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு தகவல் கொடுத்து இதை பதிவிறக்கம் செய்தனர். இந்த பதிவிறக்கம் செய்யப்பட்ட தனிப்பட்ட விவரங்கள் நம்முடைய செல்போன் மூலமாக நம்முடைய தகவல் முழுவதும் தெரிந்து கொள்கின்றனர். இதன்பிறகு ஒவ்வொருவருக்கும் சலுகை கொடுப்பது போன்ற செய்தி அனுப்பி அவர்களை விளையாட்டின் வசம் கொண்டு வருகின்றனர்," என இளங்கோவன் கூறுகிறார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாவது ஏன்?

எதனால் இந்த விளையாட்டில் ஈர்க்கபடுகின்றனர். இந்த போதையிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து மருத்துவ உளவியலாளர் சுனில் குமார் கூறுகையில், "இது‌போன்ற விளையாட்டில் தொடர்ந்து அடிமையாக இருப்பதும் ஒரு போதைதான். மூளைப் பகுதியில் reward circuit என்ற பகுதி இருக்கிறது. அந்த இடம் மனிதர்களின் சில நடவடிக்கைகளால் தூண்டப்படும். குறிப்பாக புகை பிடிக்கும் போது, அந்த இடம் தூண்டப் படுவதால் புகைப்பிடிப்பவருக்கு துயர்‌ நீங்கியது போன்று உணருகின்றனர்.

அதே போன்று வீடியோ கேம் விளையாட்டில் ஒரு‌ 1000 பாயிண்டுகள் பெரும்போதும் அந்த இடம் தூண்டப்படுகிறது. இதன் பிறகு மேலும் பாயிண்டுகள் பெறவேண்டும் என்ற உணர்வு தற்செயலாக நமக்குள் உருவாக தொடங்கிவிடும். ஆகவே மேலும் மேலும் இதை விளையாட வேண்டும் என்ற எண்ணம் மூளையின் குறிப்பிட்ட அந்த பகுதி தூண்டப்படுவதால் ஏற்படுகிறது," எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Getty Images

"இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி என்னிடம் வந்து நோயாளி சிகிச்சை பெற்றார். அவர் ‌மாதம் 12 ஆயிரம் வருமானத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் சுமார் 3 லட்சம் கடன் வாங்கி தன்னுடைய திருமணத்தை செய்துகொள்கிறார்.

இதுபோன்ற‌ சூழலில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அவரின் செல்போனுக்கு ஒரு Popup செய்தி ஒன்று வருகிறது. அதில் இவ்வளவு செலுத்தினால், குறிப்பிட்ட பணம் வெல்லலாம் என்று இருக்கிறது. அவர் முதன்முதலாக அந்த விளையாட்டில், சம்பளம் வந்த நாளன்று 3000 ரூபாய் வைத்து விளையாடுகிறார். இதன்மூலமாக வென்று 9000 ஆயிரம் பெறுகிறார். அந்த மாத வருமானம் 12 ஆயிரம், கூடுதலாக 9000 கிடைக்கவும் அவருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இதைவைத்து அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தன்னுடைய கடனை அடைந்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதே போன்று இரண்டாவது மாதம் விளையாடியதில் அவர் போட்ட 3000 ரூபாய் அப்படியே வந்துவிட்டது. இதே போன்று தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்த அவர்,‌ நாளடைவில் மனைவியின்‌ நகையை வைத்தும், நண்பர்களிடம் கடன்‌ வாங்கியும் விளையாடியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரால் நகையை மீட்க முடியாமலும், கடன்‌ திருப்பி செலுத்த முடியாமலும், தன்னுடைய வேலையையும் இழக்கிறார். அவருக்கு புரிகிறது நாம் இழக்கிறோம்‌ என்று‌‌ இருந்தாலும் விளையாட வேண்டும் என்ற வெறி இருக்கிறது.

அவரை முப்பது நாட்கள் தனியாக கண்காணித்தோம். அந்த நேரத்தில் அவரிடம் செல்போன் கொடுக்காமல் இருந்தோம். செல்போன் இருந்தால் எப்படியாவது விளையாட வேண்டும் என்று தூண்டப்படுகிறார். அந்த நேரத்தில் அவருக்கு இருக்கக்கூடிய பதற்றத்தை குறைக்க மருந்து கொடுக்கப்பட்டது. மேலும் உளவியல் சிகிச்சையும் அளித்து, முழு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்," என்று கூறுகிறார்.

நான்கில் ஒருவர் மனநலம் சார்ந்த சிக்கல் இருப்பதாக என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கில் ஒருவர் இதுபோன்று ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறுகிறார் மருத்துவர்.

"பயம் பதற்றம்‌ மற்றும் மனச் சோர்வு பிரச்சனை இருக்க கூடியவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டில் அடிமையாகுவது தான் அவர்களுக்கு தற்காலிக மருந்தாக இருக்கிறது. ஆனால் இதன்மூலம் பிரச்சனைகள் மேலும் அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. குடும்பத்தினர்‌ இதுபோன்ற நபர்களை பொறுப்பு இல்லாதவர்கள், பணத்தை செலவழிக்க கூடியவர், எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என்று பார்க்கின்றனர். ஆனால் இதுவொரு வியாதி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த வியாதிக்கு யார் வேண்டுமானாலும் அடிமையாகலாம். தற்போதுள்ள டிஜிட்டல் சூழலில் இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமையாகும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது.

மீண்டு வருவது எப்படி?

ஆன்லைன் ரம்மி கேம்

பட மூலாதாரம், Fairfax Media/ Getty

குறிப்பாக, நம்முடைய வேலைக்கு அப்பாற்பட்டு டிஜிட்டல் சாதனங்களை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால், இதுபோன்ற‌ பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே இதுபோன்ற சூழலை உணர்ந்து அவர்களாகவே வெளியே வரவேண்டும். ஒருவேளை முடியாதென்றால் உளவியல் ஆலோசனை பெறலாம். அதைமீறி அதிகமாக அடிமையாகி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மறுவாழ்வு மையத்தில் மருத்துவ உளவியலாளர் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்," என்கிறார் மருத்துவர் சுனில் குமார்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

இந்தியாவில் சட்டங்களை கடுமையாக மாற்றபடாத வரை இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கமுடியாது. சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைக்களை வைத்து இதுபோன்ற சூதாட்டத்தை அரங்கேற்றி வருவதாக கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.

"இந்தியாவில் பணம் பறிக்கும் வகையில் இருக்கக் கூடிய நேரடி விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மற்ற நடவடிக்கைகள் மூலமாக விளையாடப்படும் அனைத்துமே சட்டவிரோதமானது. இதற்கென இந்தியாவில் பொது சூதாட்ட சட்டம் 1867 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 உள்ளிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் உள்ள ஓட்டைகளை பயன்படு்ததி இதுபோல பணம் பறிக்கிப்படுகிறது," என்கிறார் வழக்கறிஞர் சுப்பிரமணியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: