அமெரிக்க தேர்தல் 2020: இந்தியர்களுடன் கைகோர்க்கும் பாகிஸ்தானியர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Dilawar Saed

படக்குறிப்பு, தில்வார் சையத் (வலது வரிசையில் மூன்றாவது நபர்)
    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி

2012 டிசம்பர் 14, சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர், பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சுட்டுக்கொன்றதாக செய்தி வெளியானது. இந்த செய்தி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

இந்திய-அமெரிக்கர் சேகர் நரசிம்மன், அந்த நேரத்தில் அதிபர் மாளிகையில் ஒரு விருந்தில் இருந்தார். ஆனால் இந்த செய்தியைக் கேட்டு அவரது மனம் கலங்கியது.

அந்த சம்பவத்தை சேகர் நினைவு கூர்ந்தார். "அந்த துயர சம்பவம் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை . ஒரு வகையில் அந்த செய்தி கட்டுப்படுத்தப்பட்டது. நாங்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தோம்,"என்று அவர் கூறுகிறார்.

முதல் முறையாக அங்கு அவர் ஒரு பாகிஸ்தானிய அமெரிக்கரான திலாவர் சையதை சந்தித்தார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்பத்துறையில் தொழில்முனைவோரான திலாவர் சையத் இவ்வாறு கூறுகிறார்.

"எங்களுடைய உணர்வுகள் ஒரே மாதிரியாக இருந்தன. அந்த அறையில் இருந்தவர்களில் தெற்காசிய அமெரிக்கர் என்று நான் கருதிய ஒரே ஒருவரின் மனநிலை என்னுடையது போலவே இருப்பதாக நான் உணர்ந்தேன்," என்கிறார் திலாவர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் ஏஏபிஐ (AAPI) விக்டரி நிதியத்தை தொடங்கினர்.

இது அமெரிக்காவின் தேசிய மற்றும் பிராந்திய அரசியலில் ஆசிய அமெரிக்கர்களையும் பசிபிக் பிராந்திய மக்களையும் முனைப்புடன் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும்.

இந்த சமூக மக்களிடையே, வாக்காளராக பதிவு செய்து வாக்களிக்கும் சதவிகிதம், தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது.

ஜோ பைடனுடன் சேகர் நரசிம்மன்

பட மூலாதாரம், David Lienemann

படக்குறிப்பு, ஜோ பைடனுடன் சேகர் நரசிம்மன்

முதலீட்டு வங்கியாளரான சேகர் நரசிம்மன், ஏஏபிஐ விக்டரி நிதிய குழுமத்தில் பன்முகத்தன்மையை ஆதரிக்கிறார்.

"திலாவருடன் நான் பணிபுரிய முக்கிய காரணம், அவர் இந்தியாவின் அண்டை நாட்டில் இருந்து வந்தவர். அவர் நான் அறிந்த பலரின் நல்ல நண்பராகவும் இருந்தார். மேலும் அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுடன் நல்ல தொடர்பும் இருந்தது. அது என்னிடத்தில் இல்லை," என்று சேகர் நரசிம்மன் விளக்குகிறார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடனுக்கு ஆதரவு தருவதாக AAPI விக்டரி நிதியம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

ஒரு மதிப்பீட்டின்படி, 2 கோடிக்கும் அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், ஒரு மிகவும் நடுநிலையான மற்றும் நியாயமான விதத்தில் அமெரிக்காவை வழிநடத்துவார் என்று திலாவரும் சேகரும் நம்புகிறார்கள்.

இருவரும் ஜோ பைடனுக்காக பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்கள் மெய்நிகர் கூட்டங்களை நடத்தி, அவருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

திலாவர் சையத், அதிபர் மாளிகை ஆணையத்தில் பணியாற்றியுள்ளார்.

"நாங்கள் எங்களை இந்திய மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கர்கள் என்று கருதுவதில்லை. எங்கள் மொழியும் உணவும் ஒன்று போலவே உள்ளது. எனவே எங்களிடையே நல்லுறவு ஏற்பட்டது. நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தயாராக இருந்தோம். ஏனென்றால் எங்கள் பண்புகள் ஒரே மாதிரியாக இருந்தன," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பிரிவினை சிக்கல்கள்

இந்தியா 1947 இல் பிரிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் உருவானது. இப்போது இந்த இரு நாடுகளும் அணுவாற்றல் கொண்ட நாடுகளாக திகழ்கின்றன.

இரு நாடுகளும் பல போர்களில் மோதியுள்ளன. இரு நாடுகளுமே முழு ஜம்மு-காஷ்மீர் மீது சொந்த உரிமை கோரல்களைச் செய்கின்றன. கூடவே, பரஸ்பரம் குற்றச்சாட்டு மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளின் அரசியலை இரு நாடுகளுமே செய்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பகை பல தலைமுறைகளை பாதித்துள்ளது.

ஆனால் வரலாற்றின் வெவ்வேறு விளக்கங்களைக் கற்றுக் கொண்டு வளர்ந்த பல இந்திய மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கர்கள், தாங்கள் வேறுபடுகின்ற பிரச்சனைகள் தங்கள் தனிப்பட்ட உறவுகளில் எந்தவிதமான மன உளைச்சலையும் ஏற்படுத்துவதில்லை என்றும் தாங்கள் விரும்பும் எந்தவொரு வேட்பாளரையும் ஒன்றுபட்டு ஆதரிப்பதாகவும் கூறுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரச்சனை அல்லது துணைக் கண்டத்தின் வேறு எந்த சர்ச்சைக்குரிய தாவா பற்றி திலாவரும் சேகரும் பேசுவதில்லை.

"நிச்சயமாக இல்லை, நாங்கள் அவற்றை புறக்கணிக்க முயற்சிக்கிறோம். இந்தத் தேர்தல் உள்நாட்டு பிரச்சினைகள் பற்றியது என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறோம்," என்று சேகர் விளக்குகிறார்.

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் பாகிஸ்தான் அமைதியின்மையை பரப்புவதாக இந்தியா குற்றம்சாட்டுகிறது. அதே நேரத்தில் இந்தியா, தங்கள் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஒரு பகுதி, எரியும் தீயில் நெய்யை ஊற்றும் வேலையை செய்கின்றன.

இதன் விளைவாக பல முதல் தலைமுறை இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கர்களுக்கு அவர்களின் வாக்குகளானது, அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் விஷயமாக மாறியுள்ளது. தாங்கள் வாழும் நாட்டிற்கு ஒரு 'நல்ல' வேட்பாளராக போட்டியிடுபவர் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து அவர்கள் தங்கள் முடிவை எடுக்கிறார்கள்.

"இந்தியா பாகிஸ்தான் இடையிலான உள்பிரச்சனைகள், அமெரிக்காவில் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு சில எண்ணங்கள் இருக்கலாம், எனக்கு சில எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் முடிவுகளில் நான் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நான் ஒவ்வொரு நாளும் மோதியுடன் பேசுவதில்லை. அவர் பாகிஸ்தான் பிரதமருடன் தினமும் பேசுவதில்லை. அவை எங்களுடைய பிரச்சனைகள் அல்ல." என்று சேகர் விளக்குகிறார்.

இந்திய-பாகிஸ்தான் அமெரிக்கர்கள், ஒரே மாதிரியான சமூகம் அல்ல. அவர்களது தனிப்பட்ட அனுபவங்களை பொருத்து அவர்களின் கருத்துக்கள் உள்ளன.

"9/11 சம்பவத்திற்குப் பிறகு பல முதல் தலைமுறை பாக்கிஸ்தானிய அமெரிக்கர்கள், ஒரு அமெரிக்க முஸ்லிமின் அடையாளத்தை அதிகம் ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதன் மூலம் தங்கள் பாரம்பரிய பெருமை வெளிப்படுவதாக அவர்கள் கருதினர்," என்று திலாவர் விளக்குகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

"குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் சகாப்தத்தில், நான் எனது வம்சாவளியை அதிகமாக வெளிப்படுத்தினேன். ஒரு அமெரிக்க முஸ்லிம் எப்படி இருக்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பல இந்திய மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கர்களுக்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சைகள் முக்கியமானதல்ல.

"என் மகன் ஒரு இந்திய அமெரிக்கனாக இருப்பதற்கு முன்பு, தன்னை ஒரு இந்து அமெரிக்கன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறான். ஏனென்றால் இந்தியாவை விட இந்து மதம் இங்கு பரவலாக உள்ளது." என்று சேகர் கூறுகிறார்.

"50-60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதில் எனக்கு என்ன அக்கறை என்று அவன் வினவுகிறான்," என்று சேகர் மேலும் தெரிவிக்கிறார்.

தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்கள்

அமெரிக்காவில், பாகிஸ்தானிய அமெரிக்கர்களின் மக்கள் தொகை குறைந்தது 10 லட்சம் ஆகும். அதே நேரம், இந்திய அமெரிக்கர்களின் மக்கள் தொகை சுமார் 45 லட்சமாகும்.

இரு சமூகங்களிலும், பெரும் என்ணிக்கையிலான மக்கள், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் குடியரசுக் கட்சியினர் இந்த சமூகத்தில் காலூன்ற முயற்சிக்கின்றனர்.

இந்தியாவில் பிறந்த மனை விற்பனையாளர் ராஜ் கத்தூரியாவுக்கு, பாகிஸ்தானிய அமெரிக்கரான ஷாஹாப் கராணியை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக தெரியும்.

அவர்களின் வீடுகள் மேரிலேண்டில் ஒன்றுக்கொன்று 20 நிமிடங்கள் தொலைவில் உள்ளன.

இருவரும் ஆளும் குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் டிரம்பிற்காக ஆன்லைனில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

எனது ஜூம் அழைப்பின் போது, ​​இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நேரத்தில் ராஜின் பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குச் சென்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

"நாங்கள் இந்திய-பாகிஸ்தான் பிரச்சனைகளால் தாக்கத்திற்கு உள்ளாகிறோம். நாங்கள் எப்படி உள்ளோமோ அப்படித்தான் இருப்போம். ஆனால் உண்மையில் அது எங்களை பாதிக்காது. ஏனென்றால் உள்ளூர் அரசியல்தான் அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று ராஜ் கூறுகிறார்.

"இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை தேர்தலின் போது தங்கள் தேர்வை முடிவு செய்வதற்கான அடிப்படை விஷயமாக, இந்திய அமெரிக்கர்கள் கருதவில்லை" என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த சமூகம் எதிர்கொள்ளும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் பொருளாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு.

"வரியை எவ்வாறு சேமிக்க முடியும், அரசாங்க ஒப்பந்தங்களை எவ்வாறு பெறமுடியும் என்பதுதான் என்னுடைய கவலை. நான் பணம் சம்பாதிக்க ஸ்ரீநகருக்கு செல்லப் போவதில்லை," என்று ஷாஹாப் கூறுகிறார்.

தொழிலதிபர், சுகாதாரத்துறை நிபுணர் அல்லது தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நிபுணர் என்று எல்லாத்துறைகளிலும் பணிபுரியும் இந்திய - பாகிஸ்தானிய அமெரிக்கர்கள், குறிப்பாக இந்த கொரோனா நோய் தொற்றின் போது, ​​முன்னோக்கி சென்று சமூகப் பணிகளில் பங்கேற்றுள்ளனர்.

இரு சமூகங்களும் தங்களுக்குள் நிறையப் ஒற்றுமைகளை பகிர்ந்து கொள்கின்றன.

உதாரணமாக, அவர்கள் ஒரே மொழியைப் பேசுகிறார்கள். அவர்களின் உணவு மற்றும் பானம் ஒத்தவை. கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதான அவர்களின் ஆர்வமும் ஒத்திருக்கிறது.

டல்லாஸில் வசிக்கும் இந்திய அமெரிக்கரான மனு மேத்யூ, "நான் அமெரிக்காவில் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் சிலர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்" என்று கூறுகிறார்.

அவரும் அவரது பாகிஸ்தானி அமெரிக்க நண்பர் காம்ரான் ராவ் அலியும், உள்ளூர் ஜனநாயக வேட்பாளர் காண்டேஸ் வலெஸுவேலாவை ஆதரிக்கின்றனர்.

கம்ரான் அலி, பாகிஸ்தான்-அமெரிக்க அரசியல் செயல் குழுவின் தேசிய வாரியத்தின் தலைவராக உள்ளார்.

"நாங்கள் இந்த விஷயத்தில் பேசுவதைத் தவிர்க்கிறோம், ஏனென்றால் ஒருவர் சொல்வதை மற்றவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்."என்று இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து மனு கூறுகிறார்.

"நான் கம்ரானுடன் உட்கார்ந்து நீண்ட நேரம் இந்த பிரச்சனை பற்றிப்பேசினாலும் ஒருமித்த கருத்து ஏற்படாது என்பதும் உண்மை நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதும் எனக்குத்தெரியும்,"என்று அவர் மேலும் சொல்கிறார்.

இது எதிர்பார்த்த பதில் இல்லையென்றாலும், அது மோதலைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் பிறந்த சபா ஷப்னம், அவரது இந்திய-அமெரிக்க நண்பர் முகமது ஒஸ்மானுடன் சேர்ந்து, கேண்டஸ் வலெஸுவேலாவுக்காக பிரசாரம் செய்கிறார்.

"காஷ்மீர் ஒரு தாவாதான். இந்த விஷயத்தில் எங்கள் இதயம் காயமடைந்துள்ளது. ஆனால் அது தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: