கொரோனா வைரஸ்: காற்று மாசால் புதிய ஆபத்து: தாங்குமா இந்தியா?

n activist with a placard takes part in a protest against climate change outside Ministry of Environment, on September 25, 2020 in New Delhi, India.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடி வரும் இந்தியாவுக்கு அடுத்த அச்சுறுத்தல் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் காற்று மாசு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்ட பின்பு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு காற்று மாசும் ஒரு முக்கியமான காரணம் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இது நிச்சயமாக இந்தியாவுக்கு ஒரு கெட்ட செய்திதான்.

ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் மரண விகிதம் 8% அதிகரிக்கும் என அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், சுத்திகரிக்க முடியாத எரிபொருட்களை பயன்படுத்தும் போது வெளியாகும் புகைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் ஓசோன், நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளுக்கு நீண்டகாலம் ஆளாவதற்கும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமாவதற்கும் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இத்தகைய மாசுகள் மூச்சுக் குழாயை இலக்கு வைத்து பாதிக்கும் வைரஸ் தொற்றுக்களின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் அழற்சியை உண்டாக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான மார்கோ த்ரவாகிலியோ பிபிசியிடம் தெரிவித்தார்.

சமீப வாரங்களில் டெல்லியின் காற்றில் உள்ள பி.எம் 2.5 துகள்களின் அளவு 180 முதல் 300 மைக்ரோகிராம் வரை உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகம்.

Visitors at a mist covered India Gate, on October 18, 2020 in New Delhi, India

பட மூலாதாரம், Getty Images

முடக்க நிலை அமலான காலத்தில் வாகனங்கள் மற்றும் தொழில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் சமீப மாதங்களாக டெல்லியில் குடியிருப்பவர்கள் மிகவும் தூய்மையான காற்றை சுவாசித்து வந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

காற்று மாசு அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளவர்கள் குணமடைவது ஆகியவற்றில் உண்டாகும் பாதிப்புகள் குறித்து இந்தியாவில் இதுவரை எந்தவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குளிர்கால காற்று மாசு - கொரோனா வைரஸ் பரவல்

ஆனால் மருத்துவர்களும் நோய்த்தொற்றியல் நிபுணர்களும் காற்று மாசு அதிகரிப்பது கொரோனா வைரஸ் பரவல் உடனான இந்தியாவின் போராட்டத்திற்கு பெரும் தடையாக அமையும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்தியா தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திலும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

எனினும் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவாக உள்ளது. ஆனாலும் காற்று மாசு அதிகரித்தால் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்புண்டு என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்திய நகரங்களில் டெல்லியும் ஒன்று. இப்பொழுது அங்கு காற்று மாசு அதிகரித்து வருவதால் அச்சுறுத்தல் மேலும் கூடியுள்ளது.

Delhi air quality chart

பட மூலாதாரம், Shadab Nazmi

இந்த குளிர்காலத்தில் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறுகிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் உயிர் புள்ளியியல் துறை பேராசிரியரும் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வின் தலைவருமான மருத்துவர் பிரான்செஸ்கா டொமினிசி.

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் காற்று மாசு மிகவும் தீவிரமாக இருக்கும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, விழாக்கால கொண்டாட்டத்தால் பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை, வட இந்திய விளைநிலங்களில் அறுவடைக்குப் பின்பு காய்ந்த பயிர்கள் எரிக்கப்படுவது, காற்றின் குறைவான வேகம் உள்ளிட்ட பல காரணிகள் காற்று மாசு தீவிர நிலையை அடைய வைக்கின்றன

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்போது அமெரிக்காவிலுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளில் கணக்கு எடுக்கப்பட்டது.

மக்கள் தொகை அடர்த்தி, சமூக பொருளாதார நிலைமை உள்ளிட்டவையும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டன.

எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் காற்று மாசடையாமல் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்பது இந்த ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்தது.

உலகிலேயே மிகவும் மோசமான காற்று மாசு பாதிப்புள்ள நகரங்களில் டெல்லி ஆண்டுதோறும் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த இசோவ் யூ, டெல்லி இந்த குளிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

'உயிரிழப்பு அதிகரிக்கலாம்'

மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் போதாமை காரணமாக தொற்றின் எண்ணிக்கையில் உண்டாகும் அதிகரிப்பு சிக்கலை தீவிரமாக்கும் என்றும் இதன் காரணமாக உயிரிழப்பு விகிதமும் அதிகரிக்கலாம் என்றும் கூறுகிறார் யூ.

A farmer burns straw stubble after harvesting a paddy crop, in a field near Jandiala Guru, on October 17, 2020 in Amritsar, India

பட மூலாதாரம், Getty Images

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் காற்று மாசு மற்றும் சுகாதார ஆய்வுக்கான மையத்தின் இயக்குனர் மேரி ப்ருனிக்கி, காற்று மாசால் அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சமூகத்தினர் பிறரைவிட அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்.

இந்த கூற்று இந்தியாவுக்கும் பொருந்தும். இதற்குக் காரணம் இங்கு வறுமை நிலையில் உள்ளவர்கள் தொழிற்சாலைகள், கட்டுமானம் நடக்கும் இடங்கள், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் ஆகியவற்றுக்கு மிகவும் அருகில் வசிக்கிறார்கள்.

காற்று மாசை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் டெல்லி காற்று மாசால் உண்டாகும் உடல்நலக் கோளாறு, கொரோனா வைரஸ் என இரண்டு மோசமான சுகாதார பிரச்சனைகளுடன் ஒரே சமயத்தில் போரிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

'காற்று மாசு நோய் எதிர்ப்பு திறனைக் குறைத்துவிடும்'

இது ஒரு மிகவும் மோசமான சூழ்நிலை என்கிறார் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவத்துறை மருத்துவர் டி.ஜே. கிறிஸ்டோபர்.

பிஎம் 2.5 துகள்கள் நுரையீரலுக்குள் நுழைந்து அழற்சி மற்றும் பாதிப்பை உண்டாக்கும். அதன் பின்பு ரத்த ஓட்டத்தில் கலந்து மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு காற்று மாசு மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட பாதிப்புகள் எதுவும் இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு திறனைக்கூட காற்றுமாசு கடுமையாக குறைத்துவிடும்.

"நுரையீரல் உடலுக்குள் நுழைவாயில் போன்றது. அதில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். இது கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மோசமான முன்கள வீரர்களுடன் ஒரு போரை நடத்துவதற்கு இது சமமானது," என்று மருத்துவர் கிறிஸ்டோபர் கூறுகிறார்.

தீவிரமாகும் காற்று மாசு கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவவும் உதவி செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்புத் திறனை குறைப்பது மட்டுமல்லாமல் மாசடைந்த காற்றில் இருக்கும் துகள்கள் மற்றும் நைட்ரஜன் டை-ஆக்சைடு ஆகியவை கொரோனா வைரஸ் போன்ற காற்றில் உள்ள கிருமிகளை சுமந்து செல்லும் தன்மை உடையவை என்று மேரி தெரிவிக்கிறார்.

குளிர் காலத்தில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 15,000 பேர் வரை தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று அரசின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

அரசு காற்று மாசைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் நாம் ஒரு இருண்ட காலத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்று பொருள், என்கிறார் மருத்துவர் கிறிஸ்டோபர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: