தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை காலாவதி: ஆளுநர் தாமதத்தால் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது.
நிரந்தர சட்டம் ஒன்றை இயற்ற தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாததால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இருந்துவந்த சட்டபூர்வத் தடை சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு இனி உள்ள வாய்ப்புகள் என்ன? அச்செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வாய்ப்பு இல்லையா? இந்த அவசர சட்டத்தின் பின்னணியை முதலில் தெரிந்துகொள்வோம். தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த அக்டோபர் 19 அன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்.28 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று முன்தினம் (நவ. 26) சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அளித்துள்ளோம். அதனடிப்படையில் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.
மேலும், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு மாநில அளவில் தடை சட்டம் இயற்றினால் போதாது. தேசிய அளவில் தடைச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, மாநில சட்ட அமைச்சர்களின் மாநாட்டில், இந்திய சட்டத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இதுகுறித்து ஆராய்வதாக இந்திய சட்டத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்,” எனவும் தெரிவித்தார். அரசமைப்பு சட்ட அடிப்படையில்தான் சட்ட மசோதா இயற்றப்பட்டதாகவும் 24 மணிநேரத்திற்குள் விளக்கம் அளித்ததாகவும், மசோதா அரசமைப்பு சட்ட கூறுகளுக்கு எதிரானது அல்ல எனவும் அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், RNRavi
சந்துரு தலைமையிலான குழு
இதற்கு முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப். 26 தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம்தான் 60 நாட்கள் முடிந்து நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

பட மூலாதாரம், FANATIC STUDIO VIA GETTY IMAGES
“15 மாதங்களில் 32 பேர் தற்கொலை”
இதனை சுட்டிக்காட்டியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., “ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,” என வலியுறுத்தி ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
நிரந்தர தடை சாத்தியமா?
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை ஏற்படுத்த அடுத்து உள்ள வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் பிபிசி தமிழிடம் பேசினார். “இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்கள் அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல, திறன் சார்ந்த விளையாட்டு என, உச்ச நீதிமன்றம் கருதுகிறது. கேரள உயர் நீதிமன்றமும் இதே கருத்தை கூறியிருக்கிறது. மேலும், இத்தகைய செயலிகள் மூலம் இந்திய அரசுக்கு பெரும் வரி வருவாய் வருகிறது. முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கும் இப்போதைய அவசர சட்டத்திற்கும் ஒரே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கு மேல் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய இந்திய அரசைத்தான் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இந்திய அரசிடம் தான் ஒரு செயலியை நிரந்தரமாக தடை செய்யும் அதிகாரம் உள்ளது. அப்படித்தான் சீன செயலிகள் பலவற்றை இந்திய அரசு தடை செய்தது. டிக் டாக் செயலி தடைக்குப் பின் எவ்வளவோ தொழில்நுட்பத்தைத் தாண்டியும் இந்தியாவில் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில், அந்த தடையை விதித்தது இந்திய அரசு” என கூறினார். அடுத்த நடவடிக்கையாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசே பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் கூறுகிறார் ஹரிஹரசுதன்.

பட மூலாதாரம், Getty Images
“தடை நிலவினாலும் பயன்படுத்த முடியும்”
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அவசர சட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் தடை நிலவினாலும் தொழில்நுட்ப யுகத்தில் செயலிகளுக்கு முழுவதும் தடை என்பது சாத்தியம் இல்லை எனக்கூறும் அவர், “ஐஓஎஸ் ஸ்டோர், பிளே ஸ்டோரில் ஒரு செயலியை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தலை ஒரு மாநில அரசு கொடுக்க முடியாது. ஆனால், இந்திய அரசு நேரடியாக வலியுறுத்த முடியும். அப்படி செய்யும்போதுதான் அந்த செயலியை மேற்கொண்டு தரவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்றும் தெரிவிக்கிறார். ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை நிலவியபோதும் ஒருவர் புதிதாகத்தான் அச்செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாதே தவிர, ஏற்கனவே தரவிறக்கம் செய்தவர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடிந்ததாகவும், மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மற்றும் டார்க் நெட் மூலமாக அதனை பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் கூறுகிறார் ஹரிஹரசுதன். மேலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்கள் மூலமும் அதனை பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார் அவர். இதுதொடர்பாக, இணைய பாதுகாப்பு வழக்குரைஞர் ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "1996ம் ஆண்டில் சென்னை கிண்டியில் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்களுக்கும் இதே பிரச்னை வந்தது. அப்போது, குதிரைப் பந்தயங்கள் அது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே அல்ல. திறமையின் அடிப்படையிலானது என வாதாடி தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றார்கள். அதே நிலைதான் இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினால், மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அப்போது அவரால் ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியாது. சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆளுநருக்கு இந்த மசோதாவின் எந்த பிரிவு திருப்தி அளிக்கவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கேட்டறிய வேண்டும்” என்றார்.

பட மூலாதாரம், AURUMARCUS
எப்படி அடிமைப்படுத்துகிறது ஆன்லைன் சூதாட்டம்?
ஆன்லைன் சூதாட்ட உலகம் குறித்து பேசிய ஹரிஹரசுதன், “ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் (ஆர்.என்.ஜே) எனும் நெறிமுறையின்படியே (Algorithm) இந்த விளையாட்டுகள் செயல்படுகின்றன. இலவச விளையாட்டுகள், போனஸ் ஆகியவற்றை அளித்து முதலில் விளையாட்டுக்கு நம்மை பழக்கப்படுத்தி அடிமைப்படுத்துவார்கள். அந்த காலகட்டத்தில் நம்மை குறித்து குறிப்பிட்ட செயலி புரிந்துகொள்ள ஆரம்பிக்கும், நம்மை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். எவ்வளவு நேரத்தில் ரீசார்ஜ் செய்கிறோம் என்பதையெல்லாம் அச்செயலி கவனிக்கும். பின்னர், வலுவான போட்டியாளர்களுடன் சேர்த்து நம்மை தோற்கடிப்பது போன்றவை நிகழும். தொடர்ந்து 3-4 தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்து தொடர்ந்து விளையாடும் வகையில் அச்செயலிகள் நம்மை அடிமையாக்கும். ஒரு கட்டத்தில் அதனை புரிந்துகொண்டு செயலியை அழித்துவிட்டால், பெரிய போனஸ் அளித்து திரும்பிவர தூண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களும் இதற்கு அடிமையாவதற்கான ஒரு காரணம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களே இச்செயலியின் இலக்கு” என்கிறார் ஹரிஹரசுதன். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகுதல், அதில் பெரும் பணத்தை இழந்து தற்கொலை செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, அச்செயலிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பரவலான கோரிக்கை உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













