சமூக ஊடகங்களில் புகைப்படம் பதிவிடுவதில் இத்தனை ஆபத்துகளா? - தவிர்க்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பூர்ணிமா தம்மிரெட்டி
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
ஒரு காலத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கென தயாராகி ஸ்டூடியோவிற்குச் செல்ல வேண்டும். வீடியோ என்பது திருமணம் போன்ற மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு உரியது.
ஆனால், தற்போதைய மொபைல்போன் உலகில் புகைப்படம் மற்றும் வீடியோ சாதாரணமான ஒன்றாகிவிட்டன.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மொபைல்போன்களில் சேமிக்க இடம் போதவில்லை என்றால் கூகுள் ட்ரைவ், ட்ராப் பாக்ஸ் போன்ற வசதிகள் உள்ளன.
இன்றைய சமூக ஊடகங்கள் சாதாரண குறுஞ்செய்திகளைவிட, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அனைவருமே அதிக லைக்ஸ் மற்றும் ஷேர் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கான ஆசை அதிகரித்து வருவது வினோதமானதல்ல. அதே நேரத்தில் அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே அத்தகைய ஆபத்துகளில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
பதிவிடும் போது எச்சரிக்கை தேவை
ஒரு புகைப்படம் அல்லது காணொளியைப் பதிவிடும்போது அதை ஏன் பதிவிடுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். அதற்கேற்ப செட்டிங்ஸை தேர்வு செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் நடைபெறும் சிறிய நிகழ்வு தொடர்பான புகைப்படமாக இருந்தால் அதை உங்கள் நண்பர்கள் மட்டுமே காணும் வகையில் பதிவிடுங்கள். நீங்கள் பதிவிடும் விஷயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருந்தால் மட்டும், பொதுவான செட்டிங்ஸ் உடன் பகிருங்கள்.
முகப்புப் படம்
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவிடும் போது முகப்புப் படம் என்ற ’டிஸ்ப்ளே பிக்சரை’ யாராலும் பதிவிறக்கம் மற்றும் ஸ்கிரின் ஷாட் செய்ய முடியாத வகையில் பதிவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் என்றால் இந்த செட்டிங்ஸை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துவர்களின் கைகளுக்கு உங்கள் புகைப்படம் செல்ல வாய்ப்பு உள்ளது.
அனைவரும் பார்க்க வழிசெய்யும் செட்டிங்ஸில் பகிரும் புகைப்படங்களில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் முகத்தை எமோஜி கொண்டு மறைத்துவிடுவது நல்லது.
உங்களுடன் தொடர்பில் இல்லாத எவரும், உங்கள் வாட்ஸ்அப் முகப்பு படத்தை பார்க்க முடியாமல் செய்வது நல்லது.
சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் காணொளிகள்

பட மூலாதாரம், Getty Images
உங்கள் வீட்டில் எடுத்த புகைப்படங்களைப் பதிவிடும்போது அதில் நிறைய விவரங்கள் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ளவும். உதாரணமாக, வீட்டின் கதவு அருகே நின்று எடுத்த புகைப்படங்களைப் பதிவிடும் போது, அது உங்கள் கதவு அமைப்பு குறித்த விவரங்களை திருடர்களுக்கு எளிதாக வழங்கலாம்.
சமீபகாலமாக, ஹோம் டூர் மற்றும் மாடித்தோட்டம் குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுகின்றன. அவற்றைப் பகிரும் போது பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாடித்தோட்டம் தொடர்பான காணொளிகள் எடுக்கும் போது நேரடியாக மாடிக்குச் சென்று காணொளிகளைத் தொடங்க வேண்டும். வீட்டின் கீழிருந்து மாடிக்குச் செல்வது அந்தக் காணொளியில் இடம்பெறக்கூடாது.
வீட்டில் வைத்து பதிவிடும் காணொளி அல்லது ரீல்ஸ் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஓர் இடம் அல்லது இரண்டு இடத்தை ஒதுக்கி அங்கிருந்தே உருவாக்க வேண்டும்.
நீங்கள் பகிரும் காணொளிகளில் உங்கள் வீட்டின் பெயர்ப்பலகை, வீட்டு எண், தெருவின் பெயர் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறாததை உறுதிசெய்ய வேண்டும்.
எங்கேனும் சுற்றுலா செல்வதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் அது குறித்துப் பதிவிடாதீர்கள். சுற்றுலாவில் இருக்கும் போது புகைப்படங்களைப் பகிர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். ஆனால், அது நீங்கள் வீட்டிலிருந்து வெகுதொலைவில் உள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்திவிடும். இது திருட்டு போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம். எனவே சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்த பிறகே புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வது சிறந்தது.
அதேபோல, ஒரு புகைப்படம் பதிவிடும்போது அது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.
புகைப்படம் அனுப்புதல்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பகிரும் போது நம்முடன் நட்பில் இருக்கும் அனைவராலும் அவற்றைப் பார்க்க முடியும். ஆனால், வாட்ஸ்அப், மெசேஞ்சர், ஸ்னாப்சேட் போன்ற தளங்களில் நாம் யாருடன் பகிர்கிறோமோ அல்லது எந்தக் குழுவில் பகிர்கிறோமோ அவர்களால் மட்டுமே பார்க்க முடியும். இது பாதுகாப்பாக தெரிந்தாலும், இதிலும் பிரச்னைகள் உள்ளன.
பொதுவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட படங்களை நீக்கிவிட்டால், அதை மற்றவர்களால் பார்க்க முடியாது. ஆனால், தனிச் செய்தியிலோ அல்லது குழுவிலோ அனுப்பிய புகைப்படத்தை நாம் நீக்கினாலும் அது அவர்கள் மொபைல்போனில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பட மூலாதாரம், Getty Images
தற்போது வாட்ஸ்அப் “delete after seeing it” என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பும்போது இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதன் மூலம், உங்கள் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான ஆபத்து தவிர்க்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு குழு போன்ற தெரியாத நபர்கள் அதிகம் இருக்கும் குழுக்களில் ஒரு புகைப்படத்தை அனுப்பும் முன் நன்கு யோசித்து அனுப்புவது நல்லது.
இன்று சமூக ஊடகம் மற்றும் மொபைல்போன் பயன்படுத்துவதில் பல வசதிகள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













