குழந்தைகளுக்கு எந்த வயதில் ஸ்மார்ட்ஃபோன் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு எந்த வயதில் ஸ்மார்ட்ஃபோன் கொடுக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

ஸ்மார்ட்ஃபோன்கள் குழந்தைகள் மத்தியில் உலகளாவிய ஒன்றாகிவிட்ட நிலையில், ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் இழப்பார்களா அல்லது ஆச்சர்யத்தக்க பலன்களைப் பெறுவார்களா?

குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் கொடுக்கலாமா வேண்டாமா என்பது இன்றைக்கு இருக்கும் நவீன குழப்பம்.

ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கையில் அனைத்து விதமான தீமைகளையும் கட்டவிழ்த்துவிடக்கூடிய திறன் கொண்ட பொருளாக ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் பார்த்தால் அதற்காக மன்னிக்கப்படுவீர்கள். குழந்தைகளின் ஃபோன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான திகைப்பூட்டும் தலைப்புச் செய்திகள், அந்த எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரபலங்களும் இந்த நவீன பெற்றோருக்குரிய பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. தன்னுடைய மகளின் கையில் 13 வயதில் மொபைல்ஃபோன் கொடுத்ததற்கு வருந்துவதாகவும், அதை மீண்டும் செய்யமாட்டேன் என்றும் அமெரிக்க பாடகர் மடோனா கூறியுள்ளார்.

உங்களிடம் மின்னஞ்சல்கள், ஆன்லைன் ஷாப்பிங், வீடியோ அழைப்புகள் உட்பட அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய கருவியாக நீங்கள் கருதக்கூடிய ஸ்மார்ட்ஃபோன் இருக்கலாம். உங்கள் குழந்தையின் வகுப்பு தோழர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது கைகளிலும் மொபைல்ஃபோன் இருக்கும்போது, உங்கள் குழந்தைகளிடம் இல்லையென்றால் அவர்கள் எதையும் இழக்கமாட்டார்களா?

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் மீது ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் நீண்டகால தாக்கம் குறித்து இன்னும் பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன. தற்போதுள்ள ஆராய்ச்சி முடிவுகள், அதன் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் பற்றிய சில ஆதாரங்களை வழங்குகின்றன.

மொபைல் ஃபோன் வைத்திருப்பது மற்றும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது குழந்தைகளின் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் இல்லை. தற்போதுவரை பெரும்பாலானா ஆராய்ச்சிகள் இளம் பருவத்தினர் மீதே செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை எதிர்கால ஆராய்ச்சி முடிவுகள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை வெளிப்படுத்தலாம்.

குழந்தைகள் மீது ஸ்மார்ட்ஃபோன் ஏற்படுத்தும் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

உங்கள் குழந்தை ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்த தயார் என்று முடிவெடுத்த பிறகும், அவர்கள் சொந்தமாக ஸ்மோர்ட்ஃபோன் பயன்படுத்த ஆரம்பித்த பிறகும் நீங்கள் பல முக்கிய காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல்தொடர்பு கட்டுப்பாட்டாளரான Ofcom-இன் தரவுகள், இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் 11 வயதிற்குள் தனி ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பதாகக் காட்டுகிறது. ஒன்பது வயது குழந்தைகள் மத்தியில் 44 சதவிகிதமாக இருந்த ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டு விகிதம் 11 வயது குழந்தைகள் மத்தியில் 91 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், 37 சதவிகித ஒன்பது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு சொந்தமாக ஸ்மார்ட்ஃபோன் இருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும் 19 நாடுகளில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஆய்வில், ஒன்பது முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் தினமும் ஸ்மார்ட்ஃபோனை ஆன்லைன் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

15 முதல் 17 வயதுடைய 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பதின்ம பருவத்தினரிடம் ஸ்மார்ட்ஃபோன் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் அறிவியல் பேராசிரியர் கேண்டிஸ் ஓட்ஜெர்ஸ் தெரிவிக்கிறார்.

பிறப்பு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த ஐரோப்பிய அறிக்கை, இந்த வயதினருக்கு ஆன்லைன் அபாயங்கள் குறித்த தெளிவான உணர்தல் இல்லை என்கிறது. அதேநேரத்தில், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகள் வயது மூத்த குழந்தைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து உறுதியான சான்றுகள் இல்லை.

டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும், குழந்தை மற்றும் இளம்பருவத்தினரின் மனநலத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்த ஆறு பகுப்பாய்வுகளை கேண்டிஸ் ஓட்ஜெர்ஸ் ஆய்வு செய்தார். அதில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மனநலத்திற்கிடையேயான எந்தத் தொடர்பையும் அவர் கண்டறியவில்லை.

பல ஆய்வுகளில் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மனநலத்திற்கிடையே எந்தத் தொடர்பும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறும் ஓட்ஜெர்ஸ், அதன் சாதகம் மற்றும் பாதகம் சிறிய அளவிலேயே இருப்பதாகக் கூறுகிறார்.

மக்களின் நம்பிக்கைக்கும், ஆய்வு முடிவுகளுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கண்டுபிடித்ததை அவர் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்.

இவை இரண்டிற்கும் இடையே சிறிய எதிர்மறை தொடர்பு இருந்தபோதும், இந்த ஆதாரங்கள் உறுதியற்றது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பரிசோதனை உளவியலாளரான ஆமி ஓர்பென். இது தொடர்பான பெரும்பாலான ஆய்வுகள், தெளிவான முடிவை அறிவிக்க போதுமான தரத்தில் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

அறிவியல் தரவுகளில் உள்ளார்ந்த மாறுபாடுகள் இருப்பதாகக் கூறும் ஆமி ஓர்பென், குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கூற முடியும் என்கிறார்.

நடைமுறையில் இதன் பொருள் என்னவென்றால், பல ஆய்வு முடிவுகள் என்னவாக இருந்தாலும், சமூக ஊடகங்கள் அல்லது சில செயலிகளைப் பயன்படுத்தியதன் காரணமாக சில குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு பெற்றோர் ஆதரவு வழங்குவது மிக முக்கியம்.

அதேநேரத்தில், சில இளம்பருவத்தினருக்கு ஸ்மார்ட்ஃபோன் உயிர்நாடியாகவும் உள்ளது. இயலாமை கொண்ட நபராக புதிய அணுகல் மற்றும் சமூக உறவை ஏற்படுத்திக்கொள்ளவும், உடல்நலம் குறித்த அழுத்தமான கேள்விகளுக்கு விடை தேடுவதற்கான கருவியாகவும் ஸ்மார்ட்ஃபோன் உள்ளது.

பெரும்பாலும் குழந்தைகள் மொபைல்ஃபோனை தொடர்பு கொள்ள பயன்படுத்தும்போது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். "மொபைல் ஃபோனில் குழந்தைகள் முழ்கியிருப்பது சிலருக்கு வேண்டுமானால் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைகிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள், இணைந்து ஒன்றைப் பார்க்கிறார்கள்" என்கிறார் ஓட்ஜெர்ஸ்.

குழந்தைகள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் வெளியில் செலவிடும் நேரத்தை ஸ்மார்ட்ஃபோன்கள் குறைப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டாலும், 11 முதல் 15 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட டேனிஷ் ஆய்வில், பெற்றோரின் பாதுகாப்பு உணர்வை அதிகரிப்பதன் மூலமும், அறிமுகமில்லாத சுற்றுப்புறங்களுக்குச் செல்ல உதவுவதன் மூலமும் ஃபோன்கள் குழந்தைகளுக்கு சுதந்திரமான இயக்கத்தை அளிப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இசை கேட்பது, பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் மொபைல் ஃபோன்கள் தங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதாகக் குழந்தைகள் கூறுகின்றனர்.

சக நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும் திறனில் நிச்சயம் ஆபத்து இல்லாமல் இருக்காது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இளமைப் பருவத்தின் குறிப்பிட்ட வயதுடையோரிடம் செய்யப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையில், வளர்ச்சி உணர்திறன் சாளரங்களை ஆர்பென் மற்றும் அவரது சகாக்கள் கண்டறிந்தனர். அதில் சமூக ஊடகப் பயன்பாடு குறைந்த வாழ்க்கை திருப்தியின் பிற்காலத்துடன் தொடர்புடையது.

10 முதல் 21 வயதுக்குட்பட்ட 17,000 பங்கேற்பாளர்களின் தரவைப் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், 11 முதல் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கும், 14 முதல் 15 வயது வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கும் அதிக சமூக ஊடகப் பயன்பாடு ஒரு வருடத்திற்குப் பிறகு குறைந்த வாழ்க்கைத் திருப்தி அளித்ததைக் கண்டறிந்துள்ளனர். மேலும், குறைந்த சமூக ஊடகப் பயன்பாடு கொண்டவர்களிடம் அடுத்த ஆண்டு அதிக வாழ்க்கைத் திருப்தி இருந்ததையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆண்களைவிட பெண்கள் முன்னதாகவே பருவமடைகிறார்கள் என்ற உண்மையுடன் இது ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் இந்த நேர வித்தியாசத்திற்கு இதுவே காரணம் எனக்கூற போதுமான ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களுக்கான முடிவுகளை எடுக்கும்போது இந்த வயதுடையவர்களைக் கூடுதல் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சி மாற்றங்கள் சமூக ஊடகங்களின் எதிர்மறையான பக்கத்திற்கு குழந்தைகளை அதிக உணர்ச்சியவயப்படக் கூடியவர்களாக மாற்றும் என்பதை அறிந்திருப்பது மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, பதின்ம வயதில் மூளையில் பெருமளவில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் நடத்தை மற்றும் உணர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பதின்ம வயது காலம் வளர்ச்சியின் மிக முக்கிய நேரம் என்கிறார் ஆர்பன். "அந்தச் சமயத்தில் நண்பர்கள் உங்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சில நேரங்களில் அதிக அழுத்தத்தைத் தரலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

வயதைப் போல, வேறு சில காரணிகளும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது சமூக ஊடக தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது குறித்து தற்போதுதான் ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. இதை தற்போதைய ஆராய்ச்சியின் முக்கிய பகுதி என்கிறார் ஆர்பன்.

தங்கள் குழந்தைக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கலாமா என்ற பெற்றோரின் கேள்விக்கு வேண்டுமானால் ஆராய்ச்சிகள் பதிலளிக்கலாமே ஒழிய, எப்போது வாங்கலாம் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.

இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது கடினம் எனக் கூறும் ஆர்பன், இது பெற்றோர்களின் தனிப்பட்ட முடிவு சார்ந்தது என்கிறார்.

குழந்தைக்கும் குடும்பத்திற்கும் ஸ்மார்ட்ஃபோன் எப்படி பொருந்தும் என்பது பெற்றோர் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி என்கிறார் ஓட்ஜெர்ஸ்.

குழந்தைகளுக்கு சுதந்திரம் தரும் ஸ்மார்ட்ஃபோன்கள்

பட மூலாதாரம், Getty Images

குழந்தைக்கு மொபைல்ஃபோன் வாங்குவது பல பெற்றோருக்கு நடைமுறை தேவையாக உள்ளது. "நிறைய சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல்ஃபோன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அதன் மூலம், அவர்கள் நாள் முழுவதும் அவர்களோடு தொடர்பில் இருக்க முடியும்" என்கிறார் ஓட்ஜர்ஸ்.

மொபைல்ஃபோன்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வைத் தருவதாகக் கூறும் ஆஸ்திரிய வியன்னா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை ஆராய்ச்சியாளர் அஞ்சா ஸ்டீவிக், தனி மொபைல்ஃபோன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நம் குழந்தைகள் பொறுப்பானவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்கிறார்.

தங்களுடைய குழந்தை மொபைல்ஃபோன் பயன்படுத்துவது, பெற்றோராக உங்களை எவ்வளவு சௌகரிகயமாக உணர வைக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் மீது தங்களுடைய கட்டுப்பாடு இல்லை என்பதை பெற்றோர்கள் உணரும்போது, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரிப்பது ஸ்டீவிக் மற்றும் அவரது சகாக்கள் செய்த ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கையில் ஸ்மார்ட்ஃபோன் இருப்பதால் எல்லா செயலிகளையும், மொபைல் கேம்ஸ்களையும் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை என்பதை அறிந்திருப்பது மிகவும் நல்லது. "நான் குழந்தைகளை நேர்காணல் எடுக்கும்போது பெற்றோர்கள் அவர்கள் கைகளில் மொபைல்போன் கொடுத்து எந்தெந்த செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதன் தேவைகளையும் கூறுகிறார்கள். அது மிகவும் புத்திசாலித்தனமானது" என்கிறார் லிவிங்ஸ்டோன்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் கேம் விளையாடி நேரத்தைச் செலவிடலாம் அல்லது மொபைலில் உள்ளதை ஒன்றாகப் பார்க்க நேரம் ஒதுக்கலாம்.

"ஆஃப்லைனில் உள்ளதைப் போலவே ஆன்லைனிலும் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் மற்றும் அனுபவிக்கிறார்கள் என்பதில் குறிப்பிட்ட அளவு கண்கானிப்பு இருக்கலாம். அதே நேரத்தில் மேலே கூறியதுபோன்ற தொடர்பும், திறந்த மனப்பான்மையும் இருக்க வேண்டும்" என்கிறார் ஓட்ஜர்ஸ்.

குழந்தைகள் படுக்கையறையில் இரவில் மொபைல்ஃபோன் வைத்திருக்கக்கூடாது என்பது மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, பெற்றோர்களும் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாப்பிடும்போது மொபைல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது, படுக்கைக்கு மொபைல்ஃபோனுடன் செல்லக்கூடாது எனக் கூறிக்கொண்டு, அதே செயலை பெற்றோர்கள் செய்யும்போது அத்தகைய போலித்தனத்தை குழந்தைகள் வெறுப்பதாக லிவிங்ஸ்டோன் கூறுகிறார்.

பெற்றோரின் தொழில்நுட்ப பயன்பாட்டை பிரதிபலிக்கும் குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மொபைல் பயன்பாடு வழியாக கற்றுக்கொள்கிறார்கள். பிறப்பு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளிடையே டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த ஐரோப்பிய அறிக்கை, இந்த வயது குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரின் தொழில்நுட்ப பயன்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறிகிறது. சில பெற்றோர்கள் தங்கள் சாதனத்தின் கடவுச்சொற்களை குழந்தைகள் அறிந்திருப்பதையும், அதை அவர்களால் சுயாதீனமாக அணுக முடியும் என்பதையும் அந்த ஆய்வின்போது கண்டுபிடித்தனர்.

ஸ்மார்ட்ஃபோன் தொடர்பான வேலையின்போது இளம் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலமும், அவர்களுக்கு நல்ல பயிற்சி வழங்குவதன் மூலமும் இதை தங்கள் நன்மைக்காகப் பெற்றோர்கள் பயன்படுத்தலாம். "இந்த ஈடுபாடு மற்றும் இணை பயன்பாடு, அந்தச் சாதனத்தில் என்ன நடக்கிறது, அது எதற்காகப் பயன்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்கான சிறந்த வழி" என்கிறார் ஸ்டீவிக்.

ஒரு குழந்தைக்கு எப்போது ஸ்மார்ட்ஃபோன் வாங்குவது என்பது பெற்றோரின் தனிப்பட்ட முடிவாகும். சிலருக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டாம் என்பது சரியான முடிவாக இருக்கும். கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத குழந்தைகள் எதையும் இழக்கமாட்டார்கள்.

"நம்பிக்கை மற்றும் கூடிப்பழகும் இயல்பு கொண்ட குழந்தைகள், சூழலுக்கு ஏற்ப குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள்" என்கிறார் லிவிங்ஸ்டோன். எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலும் அவர்களின் சமூக வாழ்க்கை பள்ளியில் உள்ளதாகவும் தினசரி அவர்கள் சந்தித்துக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

மொபைல்ஃபோன் இல்லாமல் ஏதாவது இழந்துவிடுவோமோ என்ற பயத்தை சமாளிக்க கற்றுக்கொள்வது, மூத்த பதின்ம வயதில் தவிர்க்க இயலாமல் தங்களுக்கு ஒரு மொபைல்ஃபோன் வாங்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அதன் பயன்பாட்டிற்கு எப்படி வரம்பு விதிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எதையாவது தவறவிடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்கும், எனவே அனைவரும் மொபைல் பயன்பாட்டை ஒரு வரம்பிற்குள் கொண்டுவர கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறும் லிவிங்ஸ்டோன், இல்லாவிட்டால் 24 மணி நேரமும் வெறுமனே நீங்கள் மொபைல் பயன்படுத்திக்கொண்டே இருப்பீர்கள் என்கிறார்.

காணொளிக் குறிப்பு, பெண்கள் மட்டுமே அரங்கேற்றும் ராம்லீலா நாடகம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: