ஆன்லைன் விளையாட்டுகளை நிரந்தரமாக தடை செய்ய சாத்தியமே இல்லையா? உண்மை நிலவரம் என்ன?

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழக அமைச்சரவை ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஆன்லைன் செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிப்பது சாத்தியமே இல்லை என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கும் முன்பாகவே, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் ஒன்று 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து ஜங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக இணையவழி விளையாட்டுகள் அனைத்துக்கும் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, இது மூளையைப் பயன்படுத்தி விளையாடும் திறன் சார்ந்த விளையாட்டா அல்லது அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடும் விளையாட்டா என்ற கேள்வி வந்தது என்கிறார் இணைய பாதுகாப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

"25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கிண்டியில் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்களுக்கும் இதே பிரச்னை வந்தது. அப்போது, அது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே அல்ல, குதிரை மற்றும் குதிரையை ஓட்டுபவருக்கு எப்படி பயிற்சியளிக்கப்படுகிறது, குதிரையின் உடல்வாகு, பந்தய வியூகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு நடத்தப்படுவது என்று சாமர்த்தியமாக வாதாடி, அதைத் தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றார்கள்," என்று கூறியவர், அதே மாதிரி ஆன்லைன் விளையாட்டு குறித்த வழக்கிலும் மூளையைப் பயன்படுத்தும் திறன் சார்ந்த விளையாட்டு என்று கேமிங் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது என்றார்.

மூளையைப் பயன்படுத்துவது என்று வந்துவிட்டாலே, அது வணிகம் சார்ந்ததாக மாறிவிடுகிறது. ஆகவே, "அது இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் வருகிறது. அதன்படி, சட்டத்திற்குப் புறம்பானதாக இல்லாத எந்தவொரு வணிகத்தையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதை செய்யக்கூடாது என்று அரசு தடுக்க முடியாது."

"அதை வைத்து, இதுவொரு வணிகம் சார்ந்தது தான். அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருப்பது அல்ல என்று கூறி அந்தச் சட்டத்தின் மீது தற்காலிக தடையை கேமிங் நிறுவனங்கள் பெற்றன," என்று கூறினார் ராஜேந்திரன்.

"இந்திய அரசின் சட்டம் சூதாட்டத்தைத் தான் தடை செய்கிறது. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை திறன் சார்ந்த விளையாட்டு என்ற அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளதால் அதற்கு தேசிய அளவில் தடை விதிக்கப்படவில்லை," என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

தமிழ்நாட்டைப் போலவே, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் இத்தகைய விளையாட்டுகளைத் தடை செய்ய முயன்றன. இருப்பினும், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவின் உயர்நீதிமன்றங்கள், திறன் சார்ந்த இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை என்று கூறி அந்தச் சட்டங்களை ரத்து செய்துள்ளன.

"ஆன்லைன் விளையாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை"

இந்த விளையாட்டுகள் தமிழ்நாட்டில், குறிப்பாக இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசுத் தரப்பு வாதங்களை முன்வைத்தால் இந்த வழக்கு உறுதியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் ராஜேந்திரன்.

அதேநேரம் வெளிப்படைத்தன்மை இல்லாததையும் ஒரு வாதமாக முன்வைக்க வேண்டும் என்கிறார். "அதாவது கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது. அது முழுவதும் அதிர்ஷ்டத்தைச் சார்ந்தே இருந்தாலும், அது வெளிப்படையாகச் செயல்படுகிறது.

ஆனால், ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அவர்களே குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விளையாட ஊக்குவிப்பார்கள். அதில் நல்ல வெற்றியும் கிடைத்து அந்தத் தொகை இரண்டு மடங்காகும். ஆனால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தா தொகையாகக் கழித்துவிடுவார்கள்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது முறை, மூன்றாவது, நான்காவது என்று அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடுபவருக்கு மீண்டும் நல்ல தொகை கிடைக்கும். ஆனால், அதற்கடுத்து செல்லச் செல்ல, அதில் முழுவதுமாகப் பணம் கிடைக்காது. சான்றாக, 22,000 ரூபாய் பணம் போட்டால் அதில் 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த நேரத்தில், 'மீண்டுமொரு 20,000 ரூபாயைப் போட்டு, கைவிட்ட பணத்தோடு சேர்த்து கூடுதலாகவும் சம்பாதிக்கலாம்' என்று பரிந்துரைகளை வழங்குவார்கள்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் அந்தச் சூழலில் விட்டதைப் பிடித்தாக வேண்டும் என்று வெற்றி மீதான வெறி ஏற்படும். இதுபோல், வெற்றியடைந்தாக வேண்டுமென்ற எண்ணத்தால் தொடர்ச்சியாகச் செய்வது மனித இயல்பு. மனோவியல்ரீதியாக அதைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் சம்பாதிக்கின்றன," என்கிறார் ராஜேந்திரன்.

இந்த விளையாட்டு முறை வெளிப்படையாக இருப்பதில்லை. நிஜ வாழ்வில் விளையாடும் ரம்மியில் எதிரில் விளையாடுபவர்களில் யாருக்கு லாபம் கிடைக்கும், யார் நஷ்டமடைவார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால், இதில் முன்பின் தெரியாத முன்பே எழுதப்பட்ட ப்ரோகிராமிங் மூலமாக விளையாட்டு நடத்தப்படுகிறது.

இந்த வெளிப்படைத்தன்மையைக் குறிப்பிட்டு, இது மூளை சார்ந்த விளையாட்டு என்பதைவிட அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டாக இருப்பது, நம்பிக்கையை உடைக்கும் வகையில் எழுதப்பட்ட ப்ரோக்ரோம், நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய முற்றிலும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்ககூடிய ஒரு வியாபாரம் என்பன போன்ற வாதங்களைப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் வாதாடினால் வழக்கு வலுவடையும்," என்று கூறினார்.

மத்திய அரசின் தடைக்கும் மாநில அரசின் தடைக்கும் என்ன வேறுபாடு?

இந்திய அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் மிகப்பெரிய அளவில் வரி வருவாய் கிடைக்கிறது. இதனால் இந்திய அரசு இவற்றைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வரவில்லை. ஆனால், மாநில அரசுகள் இவற்றை தடை செய்ய முயல்கின்றன என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

ஆனால், "மாநில அரசு தடை செய்தாலும் கூட, கேமிங் நிறுவனங்கள் எதிர்த்து வழக்கு தொடுக்கமுடியும். அதிமுக அரசு தடை கொண்டு வந்தபோதும் அதுதானே நடந்தது?

இந்திய அரசு ஒரு செயலியைத் தடை செய்வதைப் போல் மாநில அரசால் செய்ய முடியாது. தடை செய்யப்படும் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் தடை செய்யப்படும் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில்தான் அந்தத் தடை இருக்கும்," என்று கூறினார் ஹரிஹரசுதன்.

ஆனால், "இது எந்த அளவுக்குத் திறன்மிக்கதாக இருக்கும் என்பதில் கேள்விகள் உள்ளன" என்றும் கூறுகிறார்.

மாநில அரசின் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்து என்ன?

உச்சநீதிமன்ற வழக்கு, ஆளுநர் ஒப்புதல் என்று அனைத்தையும் கடந்து இந்தத் தடை அமலுக்கு வந்துவிட்டது என்றால் அடுத்து என்ன? இந்தத் தடையை நடைமுறையில் சாத்தியப்படுத்துவது எப்படி?

இதை விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால் யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம் என்கிறார் வழக்கறிஞர் ராஜேந்திரன்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

"யாராவது புகார் கொடுத்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், புகார் எதுவும் வராமல், இந்த ஆன்லைன் விளையாட்டுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது சிரமம்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, கணினி அவசர செயல்பாட்டுக் குழு என்ற சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அமைப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.

அந்த அமைப்புக்கு, இணையத்தைக் கண்காணிக்க, எந்த இணையதளத்தையும் இடைமறிக்க, அதைப் பயன்படுத்த விடாமல் தடுப்பதற்கான அதிகாரம் உள்ளது. இந்த அமைப்பு விதிமுறைக்குட்பட்டு வராத இணையதளங்களை தினசரி கணாணித்து ரத்து செய்துகொண்டே இருக்கும்.

இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பதற்கு குறிப்பிட்ட இணையதளத்தின் மீது தடை இருக்க வேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், ஆன்லைன் விளையாட்டு தளங்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது," என்று கூறினார்.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

நிரந்தரத் தடை சாத்தியமில்லை

"இந்தியா முழுக்க ஒரு செயலி தடை செய்யப்பட்டால், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் கருவிகளில் அவற்றை இந்திய நிலப்பரப்புக்குள் பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்திய நிலப்பரப்புக்குள் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்," என்று ஹரிஹரசுதன் கூறுகிறார்.

ஆனால், இந்தியாவில் ஒருவேளை ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டாலும்கூட, அவற்றைத் தயாரித்த கேமிங் நிறுவனங்கள் வேறு பெயரில், வேறு வடிவில் அதைத் தயாரித்து புதிதாக அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

பப்ஜியை தடை செய்தபோது, அதைத் தயாரித்த டென்சென்ட் கேமிங் நிறுவனம் வேறு வடிவில் மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. "அதைப் போலவே தடை செய்யப்படும் மற்ற செயலிகளையும் கேமிங் நிறுவனங்கள் வேறு வடிவில் மீண்டும் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன," என்று கூறுகிறார் ஹரிஹரசுதன்.

அவருடைய கூற்றுப்படி, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமே தடை செய்ய முடியும். ஒரு கேமிங் நிறுவனம் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளைத் தயாரிக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பிரச்னையாக இருப்பற்காக முழு நிறுவனத்தையும் தடை செய்ய முடியாது. தொழில்நுட்பத்தில் நிரந்தரத் தடை என்பது எதிலுமே சாத்தியமில்லை.

ஆன்லைன் விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

அதேநேரம், டிக்டாக், பப்ஜி போன்றவற்றை தடை செய்ததைப் போல் ஆன்லைன் ரம்மி போன்றவற்றைத் தடை செய்ய முடியாது என்றும் அவர் கூறுகிறார். "ஏனென்றால், ஜங்க்லி கேம்ஸ் நிறுவனம் போன்றவற்றின் செயலி பிரச்னைக்குரியதாக உள்ளது என்றாலும், அது இந்திய தயாரிப்பு. இந்திய தொழில்முறை வர்த்தகத்தில் பெரியளவில் பங்கு வகிக்கிறது."

"அதன்மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆகையால் இந்திய அளவில் அதற்குத் தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஒருவேளை அதையும் தாண்டி தடையே செய்தாலும், பப்ஜியை போல் வேறு வடிவில் வருவதற்கான சாத்தியங்களும் உள்ளன," கூறுகிறார்.

ஆனால், இந்தப் பிரச்னையைச் சமாளிக்க இத்தகைய செயலிகளை முறைப்படுத்தலாம் என்கிறார் ஹரிஹரசுதன். அதாவது, "ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அதில் விளையாடச் செலவழிப்பது, எவ்வளவு தொகையை அதில் பயன்படுத்துவது போன்ற ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, இதன்மீது மக்களிடையே ஏற்படும் மோகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள், அதைப் பயன்படுத்துவோரின் நலனுக்காகவும் என்ன செய்துள்ளார்கள்? இதற்கு அடிமையாகி பலியானோர் குடும்பத்தினரின் இழப்பை ஈடுசெய்ய நடவடிக்கை எடுத்தார்களா என்பன போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்," என்று கூறினார்.

Banner
காணொளிக் குறிப்பு, மலைவாழ் கர்ப்பிணிகளுக்காக உருவாக்கப்பட்ட "சேவ் மாம்" செயலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: