நாதன் லயன் சுழலில் சரிந்த இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 76 ரன்கள் நிர்ணயம்

ஸ்டம்ப்

பட மூலாதாரம், Getty Images

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இன்றைய நாளின் முதல் பாதியிலேயே ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை, தொடக்கம் முதலே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் நாதன் லயன் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர் இந்திய வீரர்கள்.

முதல் 32 ரன்களிலேயே ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை லயனிடம் பறிகொடுத்தனர். அதன்பிறகு களத்திற்கு வந்த புஜாரா நிலைத்துநின்று ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை போராடிய புஜாரா 59 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் சுழலில் சிக்கி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 163 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளில் நாதன் லயன் மட்டுமே 64 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாம் நாளில் கலக்கிய பந்துவீச்சாளர்கள்

போட்டியின் தொடக்க நாளான நேற்று, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது இந்திய அணி. அதன்பிறகு பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலியா, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 47 ரன்கள் அதிகம்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் இழப்பின்றி மேலும் 30 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி. இந்தியப் பந்துவீச்சாளர்களின் எந்தவித உத்திகளுக்கும் ஆடுகளம் பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், அதன் பிறகு வந்த தேநீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது.

ஒருபுறம், ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, நாதன் லயன் என அஸ்வின் சூழலுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, மறுபுறம் உமேஷ் யாதவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் கேமரூன் க்ரீன், ஸ்டார்க், டாட் மர்ஃபி ஆகியோர். இதனால், தேநீர் இடைவேளைக்கு பிறகான அடுத்த 34 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

இந்த திடீர் சரிவினால் 88 ரன்கள் முன்னிலையுடன் 197 ரன்களுக்கு அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

முதல் நாளில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

கே.எல். ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த சுப்மான் கில்லும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, ஒரு எல்.பி.டபிள்யூ மற்றும் எட்ஜ் ஆகியவற்றிற்கு ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ எடுக்கத் தவறியதால் இரண்டுமுறை காப்பாற்றப்பட்டார் ரோஹித் சர்மா. ஆனாலும், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியாமல் ஆறாவது ஓவரிலேயே ஸ்டம்ப்பிங் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித் சர்மா.

அதன்பிறகு கோலி மட்டுமே இந்திய அணியில் அதிகபட்சமாக 22 ரன்கள் அடிக்க, மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ குஹ்னேமன் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜாவின் சுழல் மேஜிக்

அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான டிராவிஸ் ஹெட் ஜடேஜாவின் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவுடன் இணைந்தார் நட்சத்திர ஆட்டக்காரர் லபூஷனே. இவர்களது இணை அந்த அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் எடுத்திருந்த போது லபூஷனே விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா.

அடுத்த சில ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவும் 26 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தும் ஜடேஜாவிடம் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: