தண்ணீர் எனும் மேஜிக் பானம் - கோடை காலத்தில் இதை கண்டிப்பா செய்யுங்க!

கோடை அட்வைஸ்
    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

கோடை காலம் நெருங்குகிறது. ஆனால் இப்போதே வெயிலுக்கு பஞ்சமில்லாமல் சுட்டெரிக்கிறது.

1901ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரியில் சராசரியாக அதிகபட்சமாக 29.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை ஏற்படலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே கோடை காலத்தில் நாம் என்ன உணவை உட்கொள்ளலாம்? செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

‘தண்ணீர் என்னும் மேஜிக் பானம்’

ஒரு பொதுவான மற்றும் அடிப்படையான விஷயம் வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது. அதாவது நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ஒருவர் இரண்டு அல்லது மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை. அவரவரின் உடல் எடையைப் பொறுத்து தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் நீர் அருந்த கூடாது. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல. பொதுவாகவே ஒருவருக்கு அவரின் எடையை பொறுத்து நீரின் தேவை இருக்கும். கோடை காலத்தில் தாகம் இருக்கும் ஆனால் குளிர்காலத்தில் அந்த தாகமும் இருக்காது. தாகம் எடுத்தால்தான் தண்ணீர் அருந்த வேண்டும் என்றில்லை.

அதேபோல சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ், டீ, காபி, சூப்,போன்ற பானங்களை அருந்தினால் நீர்ச்சத்தை அதிகப்படுத்தலாம் என நினைப்பார்கள். ஆனால் இதில் உள்ள கெஃபைன் மற்றும் சக்கரை diuretic காக செயல்படும்.

அதாவது நமது உடலில் இருந்த நீரை வெளியேற்றிவிடும். அதிகமாக சிறுநீர் கழிப்போம். அதாவது நீர் உடல் செல்களை சென்றடையாமல் அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் உடலைவிட்டு வெளியே சென்றுவிடும். எனவே நீர்ச்சத்தை சரியாக பேணுவதற்கு நீரை தவிர்த்து வேறொரு அற்புத பானம் இல்லை.

போதுமான தண்ணீர் குடித்துவிட்டு, கூடுதலாக மோர், எலுமிச்சை பழச்சாறு, பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். அதிலேயும் சக்கரை அதிகமாக இருந்தால் அது அதிக பலனைக் கொடுக்காது. எனவே தண்ணீரை கொண்டே நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்து விடலாம்.

கோடை காலத்தில் வரும் நோய்கள்

Spoorthi arun
படக்குறிப்பு, ஸ்பூர்த்தி அருண்

கோடை காலத்திற்கென்று வரக்கூடிய நோய்கள் பல உள்ளன. எனவே எப்போதும் வீட்டில் சமைத்த உணவை எடுத்து கொள்வதே நல்லது. அதிலும் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.

குறிப்பாக செள செள, பூசணிக்காய் போன்ற காய்கறிகள் எளிதாக செரிமானம் ஆவதோடு நீர்ச்சத்து தேவையையும் பூர்த்தி செய்கிறது. பல வைட்டமின்களையும் உடலுக்கு தருகிறது.

பழங்களில் தர்பூசணி, எலுமிச்சை போன்ற பழங்களை எடுத்து கொள்ளாலாம். அதாவது கோடைக் காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் நல்ல பலனை தரும். அதேபோல உள்ளூர் பழ வகையாகவும் அது இருக்க வேண்டும். ஏதோ ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் பல நாட்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல மருந்துக்களை பயன்படுத்தியிருக்கலாம்.

அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை தவிர்க்கலாம். கோழி இறைச்சி போன்றவற்றில் அதிக புரதம் இருக்கும். ஏனென்றால் வெயில் காலத்தில் செரிமாணம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

வெயில்

உணவை தாண்டி

கோடை வெயில் சமயத்தில் மெலிதான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடற்பயிற்சி செய்துவிட்டு வந்தாலோ அல்லது அதிக பயணம் மேற்கொண்டு வந்தாலோ அதிகம் வியர்த்திருக்கும். அந்த சமயத்தில் சோப்பு போட்டு குளிக்கவில்லை என்றாலும் வியர்வை போகும் வரை வெறும் நீரில் நாம் குளிக்கலாம்.

வியர்வை உள்ள ஆடைகளையும் உடனடியாக மாற்றிவிட வேண்டும். வெயிலில் போடுகின்ற துணியே மெலிதாக இருக்க வேண்டும் என்று சொல்லும்போது உள்ளாடைகள் நிச்சயம் மெலிதானதாகதான் இருக்க வேண்டும்.

பொதுவாக மதியம் 12-3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் முடிந்தவரை நாம் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதை கூடுதலாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இந்த சமயங்களில் தீவிர நீர்ச்சத்து குறைபாடு ‘ஹீட் ஸ்ரோக்’ ஆகியவை அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி.

  • அதீத அசதி
  • வாந்தி
  • தலைச்சுற்றல்
  • மயக்கம்
  • சிறுநீர் கழிப்பதில் சிக்கல்

இது எல்லாமே ஹீஸ் ட்ரோக் அல்லது நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள். எனவே இந்த அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே உணர்ந்து நீர்ச்சத்து குறைப்பாட்டை சரி செய்வதற்கு தேவையான உணவை எடுத்து கொள்வது போன்ற விஷயங்களை வீட்டிலேயே செய்து அதை சரி செய்துவிடலாம்.

ஆனால் இது சரியாகவில்லை என்றால் குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் இது சரியாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: