மாதவிடாய் வலி: பெண்களுக்கு கட்டாயம் விடுப்பு வழங்கப்பட வேண்டுமா?

மாதவிடாய் வலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் கருத்தில் கொண்டு ஸ்பெயினில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கூடவே பெண்களுக்கு அளிக்கப்படும் மூன்று நாட்கள் விடுமுறையை ஐந்து நாட்களாக மாற்றும் விருப்பத்தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான பல உரிமைகள் ஸ்பெயினில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இது ஒரு முக்கியமான முடிவு.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் ஐரோப்பாவின் முதல் நாடு ஸ்பெயின்.

இந்த உரிமைகள் இல்லாமல் பெண்கள் முழு குடிமக்கள் அல்ல என்றும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெறும் விடுமுறைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் ஸ்பெயின் அமைச்சர் ஐரீன் மோன்டெரோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாதவிலக்கு ஏற்படும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வலியை அனுபவிக்கிறார்கள். தங்களின் தினசரி செயல்பாடுகளைச் செய்வதே கடினமாக இருக்கும் அளவிற்கு சிலருக்கு வலி கடுமையாக இருக்கிறது என்று அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துக்கல்லூரியின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயினின் இந்த முடிவு மிகவும் முக்கியமானதாகவும், முற்போக்கானதாகவும் கருதப்படுகிறது.

அதே சமயம் இந்தியாவில் அப்படியொரு வசதியை வழங்க முடியுமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பு சுமார் 18% என்றும் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கும் வசதி கொண்டுவரப்பட்டால் அதன் மீது தாக்கம் ஏற்படும் என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இதை ஒரு கொள்கை விவகாரம் என்று கூறியது.

இதுபோன்ற முடிவுகள் பெண் ஊழியர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்ய மித்ரா தெரிவித்தார்.

"தனியார் நிறுவனத்தில் பெண்கள் விடுப்பு கேட்டால், நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை கொடுக்கத் தயங்கும். அது பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று சத்ய மித்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி இந்த வாதத்தை ஏற்க மறுத்தார். மகப்பேறு காலத்தில் பெண்களை கவனித்துக் கொள்ள சட்டத்தில் எல்லா விதிகள் இருந்தும், மகப்பேறுக்கு முந்தைய கட்டமான மாதவிடாய், தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தால் கவனிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

”பல நாடுகளில் பெண்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் நான் கூறினேன். மறுபுறம், பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கும் ஏற்பாடு 1992 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகுமாறு நீதிமன்றம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான வெவ்வேறு கருத்துக்கள்

ஜமிலா நிஷாத்

பட மூலாதாரம், SHAHEENCOLLECTIVE.ORG

படக்குறிப்பு, தனியார் துறை நிறுவனங்கள் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு தரவேண்டும் என்பதற்காக வேலை கொடுக்கத்தயங்குவதாக ஜமிலா நிஷாத் கூறுகிறார்.

" மகப்பேறு விடுப்பு கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை கொடுக்கத்தயங்குகின்றன. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலான வேலைகளை செய்யவே பெண்கள் விரும்புகின்றனர் என்ற தவறான எண்ணமும் உள்ளது,” என்று ஹைதராபாத்தில் உள்ள ஷாஹீன் மகளிர் வளம் மற்றும் நலச் சங்கத்தின் செயல்பாட்டாளர் ஜமீலா நிஷாத் கூறினார்.

"ஆனால் அது தவறு. ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஷிப்டிலும் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் சமத்துவ விஷயத்தில் அவர்கள் ஆண்களைவிட இப்போதும் பின்தங்கியே இருக்கிறார்கள் என்று சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவருமான ரஞ்சனா குமாரி சுட்டிக்காட்டினார்.

பாலின சமத்துவம் பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் அது சமூகத்தில் உண்மையிலேயே உள்ளதா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

"முதலில் பெண்களுக்கு வேலை கொடுங்கள், நாடாளுமன்றத்தில் சமத்துவம் கொடுங்கள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சம பங்கு வகிக்க வேண்டும். சமூகத்தில் சமத்துவம் இருந்தால் மகளிர் உரிமைகள் பற்றி யாரும் பேசக்கூட மாட்டார்கள். ஆனால் முதலில் பெண்களும் ஆண்களும் ஒரு நிலைக்கு கொண்டு வரப்படவேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

மறுபுறம் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத் துறையின் தலைவர் மான்வேந்திர கெளர் வேறொரு வாதத்தை முன்வைக்கிறார்.

"கிட்டத்தட்ட 90 சதவிகித பெண்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். இதன் பலன் அவர்களுக்குக்கிடைக்குமா? இந்த பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளோ, சம ஊதியமோ அல்லது வேறு எந்த பலனோ கிடைப்பதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த மாநிலங்கள் முன்முயற்சி எடுத்துள்ளன?

லாலு பிரசாத் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்கும் வசதியை அமல் செய்த முதல் மாநிலம் பிகார்.

1992 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தார். பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்க அவர் அனுமதி வழங்கினார்.

கேரள மாநிலத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள எல்லா பல்கலைக் கழகங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையில், பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறும் வகையில், தனியார் உறுப்பினர் மசோதா கொண்டு வர உள்ளதாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஹிபி ஈதன் கூறினார்.

முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நினாங் எரிங், 2017ஆம் ஆண்டு மக்களவையில் மாதவிடாய்ப் பலன் என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த மசோதா ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றாலும் மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் மாநிலத்தில் இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"பெண்களுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் குறைமதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்று சில மகளிர் அமைப்புகள், என்னிடம் தெரிவித்தன. ஆனால் உண்மை அதுவல்ல. மாதவிடாய் காலத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டாலும்கூட பெண்கள் வேலைக்கு திரும்பும்போது அதிக உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள்,” என்றார் அவர்.

”காரணமே இல்லாமல் பெண்கள் விடுப்பு எடுப்பதாகத் தோன்றினால், ஸ்பெயினில் செய்யப்பட்டுள்ளபடி, அதிகப் பிரச்சனை உள்ள பெண்கள் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து விடுப்பு எடுக்கலாம்,” என்று ரஞ்சனா குமாரி கூறினார்.

எந்த நாடுகளில் பெண்களுக்கு இந்த வசதி உள்ளது?

ஜப்பான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானில் மாதவிடாய் காலத்தில் வழங்கப்படும் விடுப்பு தொழிலாளர் நலச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவைப் பற்றிப்பேசினால், மாதவிடாய் காலத்தில் வழங்கப்படும் விடுப்பு, தொழிலாளர் நலச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே நாடு ஜப்பான்.

1947ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்குவதற்கான விதிமுறை அந்த நாட்டில் உள்ளது. இந்தோனேஷியா 1948 ஆம் ஆண்டு பெண்களுக்காக இத்தகைய கொள்கையை கொண்டு வந்தது.

மாதவிடாயின் போது ஒரு பெண்ணுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அவரை வேலை செய்ய வைக்க முடியாது என்றும், இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த நாடுகளில் கூறப்படுகிறது.

இது தவிர பிலிப்பைன்ஸ், ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பெண்களும் மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், தென் கொரிய அரசு 1953 இல் அத்தகைய விதிகளை கொண்டு வந்தது.

இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.

பெண்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். எனவே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வருமாறு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக மகளிர் உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: