ஆணுறுப்பு முறிவு: விறைக்கும் போது நிகழும் இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் என்ன?

விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம், REBECCA HENDIN / BBC THREE

    • எழுதியவர், ரோஹன் நம்ஜோஷி
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

ஆண்களுக்கு பாலுறுப்பு முறிவு என்பது பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்னைதான் என்றாலும் அது பெரியளவில் பேசப்படுவதில்லை.

உடலுறவின்போது, பெண்ணின் பாலுறுப்புக்குள் செல்வதற்குப் பதிலாக கால் அல்லது அவருடைய பாலுறுப்பின் வெளிப்புறத்தில் மோதும்போது, ஆண்களுடைய பாலுறுப்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சையளிக்கத் தவறினால், உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுறவு ஆரோக்கியம் ஆகியவறை நீண்டகால அளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாலுறுப்பில் இதுபோன்ற தாக்கம் ஏற்படும்போது, விறைத்த நிலையில் இருக்கும் பாலுறுப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டு, அதிலுள்ள துனிகா அல்புஜீனியா என்ற திசு அடுக்கைக் கிழித்துவிடும். பாலுறுப்பு முறிவு ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பெரியளவிலான பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, பாலியல் வாழ்விலும் நீண்டகால விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ஓர் ஆய்வில், 57.2 சதவீதம் ஆண்கள் உடலுறவின்போது பாலுறுப்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். குறிப்பாக ஆண்களுடைய உடலின் மீது பெண்கள் அமர்ந்து மேற்கொள்ளும் உடலுறவின்போது, இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

அதேபோல், சுய இன்பத்தில் ஈடுபடும்போதோ அல்லது விறைத்த நிலையில் இருக்கும் பாலுறுப்பின்மீது ஏதேனும் பொருள் விழுந்தாலோ கூட முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்னை பெரும்பாலும் உடலுறவின்போது ஏற்படுகின்றன.

நடுத்தர வயது ஆண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. ஆண்களில், 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது அதிகம் நிகழ்கிறது. எதிர்பாலினத்தவராக இருக்கும் ஆண்களுக்கு அதிகம் நிகழ்கிறது என்றாலும், தன்பாலித்தவராக இருக்கும் ஆண்களுக்கும் இது 1.8 சதவீதம் என்ற அளவில் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

எனவே, யாருக்கு, என்ன மாதிரியான பாலியல் ஈர்ப்பு உள்ளது என்பது இங்கே விஷயமில்லை. ஓர் ஆய்வின்படி,இந்தச் சம்பவங்கள் கோடை நாட்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ அதிகமாக ஏற்படுகிறது.

இது நிகழும்போது, பிறப்புறுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்படுகிறது. அதோடு, சிராய்ப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலுறுப்பின் வடிவம் உடைவதும் நிகழ்கிறது.

விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம், Getty Images

இதைப் பற்றி விரிவாகக் கூறும் பாலியல் மருத்துவத்தில் நிபுணரான டாக்டர் பிரசன்னா காத்ரே, “பாலுறுப்பில் எலும்புகள் இல்லை. அதனால் பாலுறுப்பில் எப்படி முறிவு ஏற்படும் என்ற கேள்வி உள்ளது. ஆனால், அது நிச்சயமாக சாத்தியம் தான். பாலுறுப்பில் ஏற்படும் எந்தவிதமான அதிர்ச்சி அல்லது விபத்தாக இருந்தாலும் அது, நீடித்த பாலுறுப்பு முறிவு என்று அழைக்கப்படுகிறது,” எனக் கூறுகிறார்.

“இத்தகைய விறைப்பு முறிவுகள் பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றன. தூங்கும்போது பாலுறுப்பு விறைத்த நிலையில் இருக்கும் நேரத்தில், தலையணையை மாற்றி வைத்து, திருப்பிப் படுக்கும்போதுகூட முறிவு ஏற்படலாம். அதேபோல், சுய இன்பத்தின்போது ஏதேனும் பொருளில் பாலுறுப்பைச் செருகும்போதுகூட முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலுறவின்போது பிறப்புறுப்பு அடிக்கடி சுருங்குகிறது. அந்த நேரத்தில் பாலுறுப்பு கட்டாயப்படுத்தப்பட்டால், அது முறிந்துவிடும். பின்புறத்தில் உடலுறவு கொள்ளும்போதும்கூட இதுபோன்ற முறிவுகளுக்கு பாலுறுப்பு ஆளாகிறது,” என்கிறார் டாக்டர் காத்ரே.

பாலுறுப்பு முறிவை எப்படிக் கண்டறிவது?

விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம், Getty Images

பாலுறுப்பு முறிவுகளைக் கண்டறிய பொதுவான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதை அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியலாம். ஆனால், அதைச் செய்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை.

ஆகவே, இந்த முறை சரியானது தானா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் உள்ளன. பாலுறுப்பு முறிவு நிகழ்ந்தால், அதற்கு அறுவை சிகிச்சை செய்வது நல்ல தீர்வு. சிடி ஸ்கேன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சரியான இடத்தைக் கண்டறிய முடியும்.

பாலுறுப்பு முறிவு ஏற்பட்டவுடன் உடனடியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிய டாக்டர் காத்ரே, “இதுபோல் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். முறிவு காணப்பட்டவுடன், சிறுநீரக மருத்துவரிடம் செல்வதற்கு முன்பாக, காயமடைந்த பகுதியில் ஐஸ் பயன்படுத்த வேண்டும்.”

மேலும், காயமடைந்த பாலுறுப்பைச் சுற்றி கட்டு போட்டுக் கொள்வதும் சிறந்த முதலுதவி எனக் கூறும் டாக்டர் காத்ரே, “வீட்டில் சானிட்டரி பேட் அல்லது நாப்கின் இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டும். அதோடு, தலைகீழாக நிற்பதும் நல்ல முதலுதவியாக இருக்கும். அதற்குப் பிறகு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதுதான் முழு தீர்வாக இருக்கும்,” என்கிறார்.

அறுவை சிகிச்சையும் அதற்குப் பிறகும்

பாலுறுப்பு முறிவு காரணமாகப் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்தக் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்கள். சிலருக்கு அந்த விளைவுகள் குறுகிய காலத்திற்கே இருப்பதுண்டு.

பாலுறுப்பு முறிவுக்குப் பிறகு உடலுறவின்போது பலர் மனச்சோர்வு மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்தக் காயத்தால் ஏற்படும் பயம் உடலுறவு கொள்ளும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பலருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

சிறு கட்டிகள், பாலுறுப்பின் வடிவத்தில் மாற்றம், விறைப்புத்தன்மையின்மை, வலி, வீக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்படும்.

விறைத்திருக்கும்போது நிகழும் பாலுறுப்பு முறிவு: இதற்கான சிகிச்சைகள் என்ன? எப்படித் தவிர்ப்பது?

பட மூலாதாரம், Getty Images

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலுறுப்பின் வடிவம் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதைப் போலவே, விறைப்பின்போது வலி ஏற்படுவது, பாலுறுப்பின் நீளம் முனைவிடக் குறைவது போன்றவையும் நடக்கலாம்.

ஆகவே, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக, நோயாளிகளோடு மருத்துவர்கள் இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நோயாளிகளிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுநீர் நீக்கக் குழாய் மிகவும் முக்கியமானது என்று நோயாளிகளுக்குச் சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு அதை வைத்திருக்க அறிவுறுத்துவது கட்டாயம். கூடவே, காயமடைந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அதேவேளையில், காயத்தைச் சுற்றியிருக்கும் முடிகளை அகற்றுவதற்கு முயலக்கூடாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: