ஜி.எஸ்.டி. கூட்டம்: தமிழ்நாடு முன்வைத்த பரிந்துரைகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
டெல்லியில் நடைபெற்ற 50வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு என்ன பரிந்துரைகளை முன்வைத்தது? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இங்கே பார்ப்போம்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் எதற்காக நடக்கின்றன?
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரிக்கான சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வரி விதிப்பதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய - மாநில அரசுகள் விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இதில் மத்திய அரசின் நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் இடம்பெற்றிருப்பார்கள். ஜிஎஸ்டி சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இந்த கவுன்சிலே முடிவெடுக்கும். 2016 செப்டம்பரில் முதல் முறையாக கூடிய இந்த கவுன்சில் இதுவரை 50 முறை கூடியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் என்ன?
பல்வேறு பொருட்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. செயற்கைக் கோள்களுக்கு விதிக்கப்படும் வரியை நீக்க முடிவுசெய்யப்பட்டது. சினிமா திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் மீதான வரி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. கேசினோ, குதிரைப் பந்தையம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்க முடிவுசெய்யப்பட்டது. பந்தையத் தொகை முழுவதுக்கும் இந்த வரி விதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் சார்பில் சொல்லப்பட்டதென்ன?

பட மூலாதாரம், Twitter/@TThenarasu
தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிதிப்பதென்பது, தமிழக அரசின் சட்டத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமென சொல்லப்பட்டிருக்கிறது.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரிகளை கொண்டுவருவதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்வது வர்த்தகர்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் நாடு முழுவதும் உள்ள சிறிய வர்த்தகர்களை இது கடுமையாக பாதிக்கும் என்றும் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரியது.
உள்ளூராட்சி அமைப்புகளும் மாநில அரசும் வாங்கும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் சில பொருட்களை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவர ஜிஎஸ்டி வரியைத் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மாநில அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் கூடுதல் பளுவை அளிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்துள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாநிலத் தீர்ப்பாயங்களில் சட்டம் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை நியமிக்க மாநிலத்தின் தேர்வுக்குழுவுக்கே அதிகாரம் அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் கோரப்பட்டது.
புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருத்துகளை இறக்குமதி செய்யும்போது, அவற்றின் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியை விலக்கிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டால், அதை ஆதரிப்பதாக தமிழ்நாடு கூறியுள்ளது.
வரிவிதிப்பில் வணிகர்கள் கோரும் மாற்றமென்ன?
வணிகர்களைப் பொறுத்தவரை, வரிவிதிப்பை எளிமைப்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோரிவருகின்றனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா, தற்போதுள்ள நான்கு பிரிவு வரிகளுக்குப் பதிலாக 2 வரி விகிதம்தான் இருக்க வேண்டும் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"தற்போது 5, 12, 18, 28 என நான்கு வகைகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒரு சிறு வியாபாரியைப் பொறுத்தவரை, எல்லா விகிதங்களில் வரும் பொருட்களையும் விற்பார். ஆனால், அவரால் நான்கு விதமான கணக்கை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. ஆகவே, சில பொருட்களுக்கு 7 சதவீதமும் சில பொருட்களுக்கு 12 சதவீதமும் விதிக்கலாம். மொத்தமே இரண்டு விகிதங்கள்தான் இருக்க வேண்டும். வரி விதிப்பு எளிமைப்படுத்தப்பட்டு, வரி விகிதமும் குறைந்தால் எல்லோரும் வரி செலுத்த முன்வருவார்கள்.
பல முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடி, பல திருத்தங்களைக் கொண்டுவந்த பிறகும் பிரச்னைகள் நீடிப்பதற்குக் காரணம், வரிவிதிப்பு எளிமையில்லாமல் இருப்பதுதான். அடுத்ததாக, ஜிஎஸ்டி கணக்குகளின் விவரங்களை அமலாக்கத் துறைக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. அதைச் செய்யவே கூடாது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்'' என்கிறார் விக்ரமராஜா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












