ஜி.எஸ்.டி: “சீர்திருத்தங்கள் தேவை”
- எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, செய்தியாளர்
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஒரே விதமான வரியை விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதும், இந்த வரி விதிப்பிலும் தொடர் சீர்திருத்தங்கள் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீது ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அளவில் விற்பனை வரியை வசூலித்து வந்தது.
தவிர, சேவை வரி, கேளிக்கை வரி, நூலகம், கல்வி, ஸ்வச் பாரத் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு வரிகளும் தனித்தனியாக வசூலிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், எல்லா மாநிலங்களிலும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கும் வகையில் இந்த சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
5%, 12%, 18%, 28% என நான்கு அளவுகளில் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
தங்கத்திற்கு மூன்று சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரியில் 50 சதவீதத்தை மத்திய அரசும் 50 சதவீதத்தை மாநில அரசும் எடுத்துக்கொள்ளும்.
இவையே வாடிக்கையாளருக்கு கடைகளில் வழங்கும் ரசீதுகளில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி என்று குறிக்கப்படுகின்றன.
ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்தின் அரசு புதிதாக ஒரு பொருளின் வரியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.
அதனை இதற்கென உள்ள ஜிஎஸ்டி கவுன்சில்தான் செய்ய முடியும்.
இந்த கவுன்சிலில் எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் மத்திய அரசின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள்.
மாநிலங்களின் நிதி அதிகாரம் இழப்பா ?

பட மூலாதாரம், Getty Images
ஜிஎஸ்டி மூலம் மாநில அரசு வரி வசூலிக்கும் அதிகாரத்தை இழந்து, வெறும் உள்ளாட்சி அமைப்பைப் போல மாறிவிட்டது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
"அப்படிப் பார்க்கத் தேவையில்லை. மதுபானங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை மாநில அரசுகள்தான் வசூலிக்கும். இவை மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிக்கின்றன. தவிர, பத்திரப் பதிவு போன்ற வரி வருவாயும் மாநில அரசுக்கு இருக்கிறது" என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான இராம. ஸ்ரீநிவாசன்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை கலால் வரியை மத்திய அரசும் விற்பனை வரியை மாநில அரசும் வசூலித்துவந்தன.
பல பொருட்களுக்கு கலால் வரியானது 16-24 சதவீதம் வரை இருந்தது. விற்பனை வரி 8-12 சதவீதமாக இருந்தது.
இப்போது இரு வரிகளிலுமே சரி பாதி மாநில அரசுக்குக் கிடைக்கும் என்பதால் மாநில அரசின் வரி வருவாய் உயரக்கூடும் என்கிறார் இராம. ஸ்ரீநிவாசன்.
ஆனால், ஜிஎஸ்டி வரியைக் கணக்கிடுவது சிறு வியாபாரிகளுக்கு மிக சிரமமான ஒன்றாக இருக்கும் என்கிறார் ஸ்ரீநிவாசன்.
கணிணி மூலமே அதைச் செய்ய முடியும். ஆனால், சிறு வியாபாரிகள் அதற்கான முதலீடு செய்ய வேண்டியிருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்கிறார் அவர்.

தவிர, காய்கறிகளில் துவங்கி குளிர்சாதனப் பெட்டிகள் வரை பல பொருட்களை விற்கக்கூடிய கடைகளில் இந்த வரியைக் கணக்கிட்டு வாடிக்கையாளரிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்துவது என்பது மிக மிகக் கடினமான காரியமாக இருக்கும்.
ஒவ்வொரு வர்த்தகரும் 5, 12, 18, 28 சதவீதம் என மாதம் நான்கு விதமான படிவங்களில் இந்தக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் அப்படியானால் வருடத்திற்கு 40க்கும் மேற்பட்ட படிவங்கள். இது பெரும் பணிச் சுமையை ஏற்படுத்தும் என்கிறார் ஸ்ரீநிவாசன்.
தொலைத் தொடர்பு போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வருடத்திற்கு சுமார் 400 படிவங்களைத் தாக்க செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
இந்த செய்திகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம்
இந்த சிரமத்தையும் குழப்பத்தையும் நீக்குவதற்கு, 4 விதமான வரி என இருப்பதை இரண்டு விதமான வரிகளாகக் குறைக்க வேண்டும்; பல நாடுகளில் அப்படித்தான் இருக்கின்றன என்கிறார் ஸ்ரீநிவாசன்.
மேலும் பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால், வர்த்தகர்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டிலிருந்து வேறு சில கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி மிக அதிகமாக இருப்பதாகக் கூறும் உற்பத்தியாளர்கள் அதனைக் குறைக்க வேண்டுமெனக் கோரியிருக்கின்றனர்.
பிற செய்திகள்
- மெஸ்ஸியின் 'நூற்றாண்டின் திருமணம்' - அர்ஜெண்டினாவில் பிரம்மாண்டம்
- வட கொரியாவுக்கு நிதி ஆதரவு: சீன வங்கிக்கு தடை விதித்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
- ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள் - சிறு நகரங்கள், கிராமங்களில் தட்டுப்பாடு அபாயம்
- ''போக்குவரத்து விதிமுறையில் தவறிழைத்ததே காரணம்''; வழக்கை சந்திக்கும் வீனஸ் வில்லியம்ஸ்
அதேபோல, ஜிஎஸ்டி வரிக்கு முன்பாக தமிழக அரசு திரைப்படங்களுக்கு என கேளிக்கை வரியை வசூலித்து, அவற்றில் 90 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கிவந்தது.
தற்போது திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சிலவும் தனியாக வரி விதிக்க முற்படுகின்றன. இதனை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போதைய ஜிஎஸ்டி வரியானது, வருடத்திற்கு ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்களுக்கு விதிக்கப்படாது. 20 முதல் 50 லட்சம்வரை வர்த்தகம் செய்பவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













