மெஸ்ஸியின் 'நூற்றாண்டின் திருமணம்' - அர்ஜெண்டினாவில் பிரம்மாண்டம்

பட மூலாதாரம், Reuters
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, தனது குழந்தை பருவ அன்புத்தோழியை திருமணம் செய்துகொண்டார். அவரது சொந்த ஊரில் நடந்த இத்திருமணம் ''நூற்றாண்டின் திருமணம்'' என வர்ணிக்கப்படுகிறது.
30 வயதான லயோனல் மெஸ்ஸிக்கும் அவரது பால்யத் தோழி , 29 வயதான ஆண்டோனெல்லா ரோக்குசோவுக்கும் இடையிலான திருமண விழா ரொசாரியோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடந்தது.
கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என 260 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்காக, நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அர்ஜெண்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் மெஸ்லி, தனது 13வது வயதில் ஸ்பெயினுக்கு குடியேறுவதற்கு முன்பாக ஆண்டோனெல்லா ரோக்குசோவை முதன் முதலாகச் சந்தித்தார்.

பட மூலாதாரம், AFP
வெள்ளிக்கிழமை நடந்த திருமண நிகழ்வில், மெஸ்ஸியின் பார்சிலோனா அணியின் சகவீரர்களான லூயிஸ் சுராஸ், நெய்மர், ஜெரார்டு பிக் மற்றும் அவரது மனைவியும் பிரபல பாப் பாடகியுமான ஷகிரா ஆகியோர் கலந்துகொண்டனர். பல விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள தனி விமானங்களில் சென்றனர்.
''இந்த ஆண்டின் திருமணம்'' மற்றும் ''இந்த நூற்றாண்டின் திருமணம்'' என்று அர்ஜெண்டினாவிலிருந்து வெளிவரும் கிளரின் பத்திரிகை இத்திருமணத்தை வர்ணித்துள்ளனது.

பட மூலாதாரம், AFP
முன்னதாக, பிரபலமான விருந்தினர்களை பார்க்க உள்ளூர் மக்கள் விமான நிலையத்தில் கூடினர்.
அழைப்பு இல்லாத விருந்தாளிகளை ஹோட்டலுக்கு வெளியிலே தடுத்து நிறுத்தும் பணியினை ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் செய்துகொண்டிருந்தது.

பட மூலாதாரம், Reuters
பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியினை 150 பத்திரிக்கையாளர்கள் பெற்றிருந்தனர். ஆனால், திருமண நிகழ்வின் அனைத்து இடங்களுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி தரவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மணமகனும், மணமகளும் எங்கே சந்தித்தனர்?
தன்னுடைய நண்பரும், தொழில்முறை கால்பந்தாட்ட வீரருமான லூகாஸ் ஸ்காக்லியாவின் தங்கையான ரோக்குசோவை, தனது ஐந்தாவது வயதிலே மெஸ்லி சந்தித்துவிட்டார்.

பட மூலாதாரம், AFP / GETTY IMAGES
வளர்ச்சி தொடர்பான ஹார்மோன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த மெஸ்ஸியின் சிகிச்சைக்கு பார்சிலோனா அணி பணம் செலுத்த முன்வந்ததால், தனது 13வது வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாட அவர் ஒப்புக் கொண்டார்.
தனது அன்பிற்குரியவர்கள் மற்றும் முன்னாள் கால்பந்து குழுவினரை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு தான் சந்தித்த கஷ்டங்களை பற்றி அவர் பேசி பேசினார்.
தற்போது பார்சிலோனாவில் வாழும் இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
கடந்த மே மாதம், ஸ்பெயினில் வரி ஏய்ப்புக்காக விதிக்கப்பட்ட 21 மாத சிறை தண்டனையை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. தண்டனை அனுபவிக்க அவர் சிறைக்குச் செல்லுவதற்கான சாத்தியங்கள் இல்லை. அவர் சில காலம் கண்காணிப்பில் வைத்திருக்கப்படலாம் அல்லது அபராதம் செலுத்துவதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.
பெரிய நாள் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன?
ரொசாரியோவின் சிட்டி சென்டர் ஹோட்டல் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் அருகில் ஒரு காசினோவும் உள்ளது.

பட மூலாதாரம், CITYCENTER ROSARIO
ஸ்பெயின் ராணி லெடிஜியா மற்றும் நடிகை இவா லாங்கோரியாவின் ஆடை வடிவமைப்பாளரான பார்சிலோனாவை சேர்ந்த ரோச க்ளாரா வடிவமைத்த ஆடையை, ரோக்குசோ அணிவார் என பலாவாக எதிர்பார்க்கப்பட்டது.
அர்ஜெண்டினாவிற்கு நெருக்கமான `` சுஷி ஸ்டேஷன்`` உணவு வகைகளுடன், எம்பனடஸ் என்ற பாரம்பரிய பாஸ்தி மற்றும் மாட்டின் அனைத்துப் பாகங்களும் உணவில் இடம்பெற்றிருந்தன.
ரொசாரியோ எங்கிருக்கிறது?
ரொசாரியோ துறைமுக நகரம் பரானாவின் கரையில் அமைந்துள்ளது, நாட்டின் மையத்தில் ப்யூனோஸ் ஏர்ரிஸ் இருந்து 300 கிலோ மீட்டர் வடகிழக்கு பகுதியில் உள்ளது. சேகுவேரா தனது இளமை நாட்களை இங்கு தான் செலவிட்டார்.
உள்ளூரில் `லியே` என்று மெஸ்ஸி அழைக்கப்படுகிறார். நிவேல்ஸ் ஒல்டு பாய்ஸ் அணியில் நட்சத்திர வீரராக இருந்ததில் இருந்தே அவர் உள்ளூரில் கதாநாயகனாக திகழ்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












