லியோனெல் மெஸ்ஸி மீது வரி ஏய்ப்பு வழக்கு

மெஸ்ஸியும் தந்தையும் சுமார் 5 மில்லியன் டாலர் வரி செலுத்தத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, மெஸ்ஸியும் தந்தையும் சுமார் 5 மில்லியன் டாலர் வரி செலுத்தத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

ஆர்ஜண்டீனா கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெஸ்ஸி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார்.

தனது தந்தை கையாளும் தனது நிதி விவகாரங்கள் தொடர்பான இந்த வழக்கில் தன்னை சேர்க்கக் கூடாது என்று பார்ஸிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை ஸ்பெயினில் உள்ள நீதிபதி ஒருவர் நிராகரித்துள்ளார்.

தனது தந்தையின் ஊழல் நடவடிக்கை தொடர்பில், மெஸ்ஸிக்கு தெரிந்திருந்தமையே, அவரை இந்த வழக்கில் உள்ளடக்கப்போதுமானது என்று நீதிபதி கூறியுள்ளார்.

மெஸ்ஸியும் அவரது தந்தையும் சுமார் 5 மில்லியன் டாலர் வரியை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அதனால் மூன்று வரி ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் அரசதரப்பு வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு இவர்களுக்கு 5 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.