ப்யாஸ் நதியில் வழிந்தோடும் வெள்ளம்; எழில் கொஞ்சும் இமாச்சலில் பேரழிவுகள் ஏற்பட என்ன காரணம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், அர்ச்சனா ஃபுல்
- பதவி, பிபிசி இந்தி, சிம்லா
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ப்யாஸ், சட்லஜ், ரவி, செனாப் (சந்திரா மற்றும் பாகா) மற்றும் யமுனை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெருவெள்ளம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ப்யாஸ் ஆற்றின் அருகே அதிக மக்கள் தொகை கொண்ட குலு மற்றும் மணாலி ஆகிய நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் நாம் இயற்கையோடு இணைந்து செல்ல தவறியதன் விளைவாகவே இது போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன.
மண்டியில் இருந்து மணாலி செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் மூடப்பட்டுள்ளது. சாலையின் பல பகுதிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அதிவேகமாகப் பாய்ந்தோடும் வெள்ளத்தால் பல இடங்களில் பாலங்கள், கட்டடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 60 மணி நேரத்தில் பெய்த கனமழையால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழை காரணமாக 29 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 24 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 825 சாலைகள் சேதமடைந்துள்ளன. 4,597 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பயங்கர மழை பெய்ததாகவும் மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது மட்டுமின்றி 795 குடிநீர் குழாய்களும் உடைந்துள்ளன.
கனமழை காரணமாக, மலைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீருடன் ஏராளமான குப்பைகளும் வருவதால், சிம்லா-கல்கா நெடுஞ்சாலையை மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வெள்ள நீருடன் பெரியகற்களும் அடித்துவரப்படுகின்றன. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது.
கனமழை காரணமாக பல இடங்களில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். பேரிடர் மேலாண்மைக் குழுவினர் பலரை காப்பாற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், ANI
மண்டியில் வசிக்கும் முதியோர் பலர், ப்யாஸ் ஆற்றில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கை இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தனர்.
மூத்த புகைப்பட பத்திரிகையாளர் பீர்பால் ஷர்மா கூறுகையில், "ப்யாஸில் இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து பெருவெள்ளங்களையும் தற்போதைய வெள்ளப்பெருக்கு முறியடித்துள்ளது. பழமையான பஞ்சவக்த்ரா கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது போல் என் வாழ்நாளில் நடந்ததில்லை," என்றார்.
வெள்ள பாதிப்புகள் குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, "முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, இந்த கனமழை காரணமாக 3 முதல் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்," என்றார்.

பட மூலாதாரம், ANI
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இமாச்சல பிரதேசத்தில் தற்போதைய கனமழையால் ஏற்பட்ட பேரழிவு யாரும் எதிர்பாராதது அல்ல.
கடந்த பல தசாப்தங்களில், சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் மலைப்பகுதிகளில், வளர்ச்சி மற்றும் வசதி என்ற பெயரில் சமவெளிகளில் உள்ளதைப் போலவே பல கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவு இதுபோன்ற இயற்கை பேரழிவுகளில் தெளிவாகத் தெரிகிறது.
சிக்கல் நிறைந்த மலைப் பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைப்பது, அல்லது ஹைட்ரோ திட்டங்களுக்கு சுரங்கம் தோண்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வதே இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
கனமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது, அவற்றின் கழிவுகளை பாதுகாப்பாக கையாளாமல் அவை ஆறுகள் மற்றும் துணை ஆறுகளில் கலக்கின்றன. இது போன்ற தவறுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட பேரழிவுகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேசத்தில், அறிவியல் முறைகளுக்குப் புறம்பாக ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டு வருவது, இத்தகைய பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
இம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் குறிப்பாக ப்யாஸ் ஆற்றில் ஏன் இப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்ற கேள்விக்கு சூழலியல் ஆர்வலர்கள் தெளிவான பதில்களை அளித்துள்ளனர்.
தற்போதைய வெள்ளத்தை 2000ஆம் ஆண்டு சட்லஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் ஒப்பிடலாம். அப்போது ராம்பூர் நகரில் மிகப்பெரும் அழிவு ஏற்பட்டது. அங்கு ஆற்றின் அருகே கட்டப்பட்ட கட்டடங்களில் பலர் வசித்து வந்த நிலையில், அவை முழுமையாக சேதமடைந்தன

பட மூலாதாரம், ANI
ப்யாஸ் ஆற்றுக்கு வெகு அருகில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் அதிக சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
தற்போதைய வெள்ளப்பெருக்கின் போது இந்த ஆபத்து நிதர்சனமாகிவிட்டது. ப்யாஸ் ஆற்றில் அதிவேகமாக வரும் தண்ணீர் அதன் போக்கை மாற்றிக்கொண்டு மணாலி மற்றும் மண்டி நகரங்களுக்கு இடையே ஏராளமான வீடுகள், வாகனங்கள், விலங்குகளை அடித்துச் சென்றது. இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
சுற்றுச்சூழல் நிபுணர் சஞ்சய் சேகல் கூறுகையில், "சுற்றுலாத்துறை சார்ந்த இந்த மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி மாதிரியை கடைபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒரு கட்டத்திற்கு மேல் இயற்கையை நம்மால் சேதப்படுத்த முடியாது. வளர்ச்சி பணிகளுக்காக அறிவியல்பூர்வமற்ற வழிகளில் மலைகளை வெடிக்கச் செய்தல், பாறைகளை உடைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகளின் போது கழிவுகளை எந்த வித திட்டமிடலும் இன்றி குவிப்பது போன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.
மேலும், மலைப்பகுதிகளில் காணப்படும் எண்ணற்ற வாகனங்கள் வெளியேற்றும் புகை சுற்றுச் சூழலைப் பாதித்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது," என்றார்.

பட மூலாதாரம், ANI
2017 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆய்வில், ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 118 ஹைட்ரோ திட்டங்கள் உள்ளன என்றும், அவற்றில் 67 திட்டங்கள் நிலச்சரிவு மண்டலத்தில் அமைந்துள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான கின்னவுர், குல்லி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ திட்டங்கள் அமைக்கப்பட்டபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட உள்ளூர் குடிமக்கள் அதை எதிர்த்தனர்.
ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் அவற்றைப் புறக்கணித்ததன் விளைவு, இப்போது இந்த பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், ANI
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் குல்பூஷன் அபிமன்யு இதுகுறித்து பேசுகையில், இமாச்சல பிரதேசம் ஒரு சுற்றுலா மாநிலம் என்றும், இயற்கை அழகைக் காண மக்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
"இயற்கைக்கு எதிராக செயல்பட்டு நமது அழகான மலைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, இயற்கை நமக்கு ஆபத்தைப் பரிசாக அளிக்கிறது. இயற்கையைச் சுரண்டி இது போல் நான்கு வழிச்சாலைகளை அமைப்பது, ஹைட்ரோ திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, கட்டுமானக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவது போன்ற அனைத்துச் செயல்களும் இயற்கைப் பேரழிவுகளுக்கே வழிவகுக்கும் என்பதை நாம் ஏன் உணரவில்லை?" எனக் கேட்கிறார் அபிமன்யு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












