தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. டெட்ரா பாக்கெட் விற்பனையின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. அளவில் புதிய டெட்ரா பேக்குகளில் மது விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது வரை டாஸ்மாக் கடைகளில் குவார்டர் எனப்படும் 180மி.லி அளவு தான் மது விற்பனையின் குறைந்தபட்ச அளவாக இருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள 90 மி.லி. அளவிலான மதுபான பேக்குகள் ரூ.60-70க்கு விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தும் நோக்கில் டாஸ்மாக் கடைகளை மூடும் அரசு, குறைந்த அளவில் எளிதாக வாங்கும் விலையில் மதுபானம் அறிமுகம் செய்வது மது விலக்கு என்ற நோக்கத்துக்கு முரணாக உள்ளது என பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மதுபானத்தை இனி 90 மி.லி. அளவில் விற்பதற்கான முடிவை அறிவித்த அமைச்சர் முத்துசாமி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, "மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில் 40% வாடிக்கையாளர்கள், 180 மி.லி.பாட்டிலை வாங்கி, அதை முழுமையாக அவர் குடிக்க முடியாது என்பதால் மற்றொரு நபர் வரும் வரை காத்திருக்கிறார். அல்லது பாதி குடித்து விட்டு அந்த பாட்டிலில், மீண்டும் முழுமையாக நிரப்ப கலப்படம் செய்ய வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்குகளில் மது விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். "மது அருந்தி விட்டு காலி பாட்டில்கள் வயல்வெளிகளில், விவசாய நிலங்களில், சாலைகளில் வீசப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பிரச்னையாக உள்ளது. எனவே அதிகாரிகள், பணியாளர் சங்கங்கள், பொது மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப டெட்ரா பேக்குகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை கையாள எளிதாக இருக்கும், அதிக இடம் தேவைப்படாது, சேதம் முற்றிலும் தவிர்க்கப்படும்" என்றார்.

பாமக, அதிமுக எதிர்ப்பு
ஆனால் டெட்ரா பேக் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்பதும், 90மி.லி. என அளவை குறைத்து மது விற்பதும் மது அருந்தும் பழக்கத்தை அதிகரிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் எளிதாக வாங்கும் வகையில் குறைந்த விலையிலோ, குறைந்த அளவிலோ விற்கக் கூடாது என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஆகும். சிகரெட்டுகளை சில்லறையில் விற்பனை செய்தால், மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் எளிதாக அதை வாங்கி புகைப்பார்கள் என்பதால் அதை தடை செய்ய வேண்டும்; 90 மி.லி. அளவில் காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதற்கும் இந்த வாதம் பொருந்தும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், "90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது. அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, புதுச்சேரியில் டெட்ரா பேக்குகளில் மது விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கோரிக்கை சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதை பிற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. தமிழகத்தில் மதுவிலக்கு பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்து வருகிறது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், டெட்ரா பேக்குகள் அறிமுகப்படுத்துவது விபரீதமான முடிவு என்றும், மதுவை பழச்சாறு என நினைத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் குடிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு மது விற்பனை லாபம் எவ்வளவு?
டாஸ்மாக் மூலம் தமிழக அரசு 1983ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மதுபான மொத்த விற்பனையை கையில் எடுத்தது. 2003ம் ஆண்டு முதல் மாநிலத்தில் சில்லறை விற்பனை வியாபாரத்தை தனியாரிடமிருந்து டாஸ்மாக் எடுத்துக் கொண்டது. 2003ம் ஆண்டுக்கு முன் ஆண்டுக்கு சுமார் 3000-4000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி வந்த இத்துறை, அரசு சில்லறை வியாபாரத்தை தொடங்கிய பிறகு அதிக விற்பனை செய்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் 2022-23ம் ஆண்டில் 44,098.56 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 9000 கோடி (22.3% ) அதிகமாகும்.
2021-22ம் ஆண்டு ரூ. 36,013.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. அதற்கு முந்தைய ஆண்டான 2020-21ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடிக்கு விற்பனையாகின.
2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் விற்பனை 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என அரசு எதிர்ப்பார்ப்பதாக நிதித்துறை செயலர் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன?
2014ம் ஆண்டு தமிழகத்தில் 6835 டாஸ்மாக் கடைகள் 27 ஆயிரம் பணியாளர்களுடன் இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5329 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி மேலும் 500 கடைகள் சமீபத்தில் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளன.
"கடைகள் மூடப்பட்ட இடங்களில் மது அருந்துபவர்கள், அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்கள் என்றால் அரசுக்கு அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. குடி பழக்கம் உள்ளவர்கள் வேறு எந்த தவறான இடங்களுக்கும் செல்லாமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அருகிலேயே வேறு டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதிகளில் தான் இந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. மது பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் லாபம் ஈட்டுவது நோக்கமல்ல" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மது ஆலைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் சுமார் 250 வகையான மதுபானங்களும் விற்கப்பட்டு வந்தன. தரமில்லாத மதுபானங்களை விற்கக் கூடாது என்ற நோக்கில் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 200 வகையான மதுபானங்கள் விற்கப்படுகின்றன. ஒரு நாளுக்கு சுமார் 70 லட்சம் பேர் டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
குவார்டர் பாட்டில்கள் அதிகம் விற்பது ஏன்?
தமிழ்நாட்டில் மதுபான வகைகளில் அதிகம் விற்பனையாவது பிராந்தி. அதன் பின்னரே ரம், வோட்கா, ஜின், விஸ்கி, வைன் ஆகியவை விற்பனையாகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஹாட் (hot drinks ) வகையைச் சார்ந்தவை. இதன் விற்பனையில் 85% பிராந்தியிலிருந்து கிடைக்கிறது.
இந்த மதுபானங்கள் அனைத்தும் 180 மி.லி, 375 மி.லி, 750 மி.லி அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் குவார்டர் எனப்படும் 180 மி.லி அளவிலான மது பாட்டில்களே அதிகம் விற்கப்படுகின்றன. மொத்த விற்பனையில் சுமார் 60% -180.மி.லி. பாட்டில்கள் ஆகும். 375 மி.லி. பாட்டில்கள் 25% விற்பனையும் 750 மி.லி. பாட்டில்கள் 15% விற்பனையும் நடக்கின்றன.
சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களையே குடி பழக்கம் அதிகம் பாதிக்கிறது என்பதற்கு இந்த தரவுகள் சான்றாகும். தற்போது மேலும் அளவை குறைத்தால் அது குடும்ப வன்முறைகளை அதிகரிக்கக் கூடும் என்கிறார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலண்டினா.
"ரூ.60 என்பது நண்பர்களுடன் சேர்ந்து டீ குடிக்க எடுத்து செல்லும் காசு. இவ்வளவு மலிவாக கிடைத்தால் மது பழக்கம் கண்டிப்பாக அதிகரிக்கும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறைகளுக்கு போதைப் பழக்கம் முக்கிய காரனமாகும்.
பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில், வழிபாட்டு தலங்களுக்கு அருகில், பேருந்து நிறுத்தம், கல்வி நிலையங்கள், சந்தைகளுக்கு அருகில் என 37 டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து அகற்றக் கோரி அரசுக்கு பட்டியல் கொடுத்திருந்தோம். ஆனால் அவற்றில் வியாபாரம் குறைவாக நடக்கும் ஏழு கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
டெட்ரா பேக் என்றால் என்ன?
டெட்ரா பேக் என்பது திரவ உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது ஆகும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜியோ டாமின் இது குறித்து பேசும் போது, "டெட்ரா பேக் என்றால் பல அடுக்குகள் கொண்டதாகும். உணவுப் பொருட்களை சேமிக்க பயன்படுத்தப்படும் டெட்ரா பேக் - காகிதம், பிளாஸ்டிக், அலுமினியம் என மூன்று வகையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை ஒன்றிலிருந்து ஒன்று பிரித்து எடுக்க முடியாது. எனவே இவற்றை மறு சுழற்சி செய்வதும் இயலாது.
மறு சுழற்சி செய்ய முடியாது என்பதால் இவற்றை யாரும் எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் கண்ணாடியை மறு சுழற்சி செய்ய முடியும். கண்ணாடியில் உள்ள மூலப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட, டெட்ரா பேக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கும். பிளாஸ்டிக் என்றாலே மறுசுழற்சி செய்து விடலாம் என பலர் தவறாக நினைக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்-ல் 30% மறுசுழற்சி செய்ய முடியாது" என்கிறார்.

அளவை குறைப்பதை எதிர்க்கும் டாஸ்மாக் ஊழியர் சங்கம்
வருமானம் ஈட்டுவது நோக்கமல்ல என்றாலும், மறைமுகமாக அரசு அதை தான் செய்கிறது என குற்றம் சாட்டுகிறார் என டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன். "அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை அதிகமாகும். 180 மி.லி மதுபானம் குறைந்தபட்சம் ரூ.140 க்கு விற்கப்படுகிறது. இதனை எல்லோராலும் எளிதாக வாங்க முடியாது. ஆனால் 60-70 ரூபாய்க்கு விற்றால் மது பழக்கமும் விற்பனையும் அதிகரிக்கும்.
மாறாக அனைத்து தாலுக்காக்களிலும் போதை பழக்க மீட்பு மையங்களை அரசு திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடி விழிப்புணர்வுக்காக ஒதுக்கப்படுகிறது என அரசு கூறுகிறது. அந்த பணம் எங்கே செல்கிறது?" என்றார்.
டெட்ரா பேக்குகளில் விற்பதற்காக அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
"சென்னையில் ஒன்பது மாதங்களாக பார் நடத்துவதற்கான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை. பார்களை முறையாக அனைத்து இடங்களிலும் இயக்கினால் பெரும்பாலானவர்கள் அங்கேயே குடித்து விட்டு செல்வார்கள். பாட்டில்கள் சாலையில் வீசப்படும் பிரச்னை ஏற்படாது. " என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












