பெண் கருவுறுதல் பற்றிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சால் சர்ச்சை

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சிது திவாரி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
பிகார் சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பின் போது நடத்தப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கையை சமர்ப்பித்த முதல்வர் நிதிஷ்குமார், ஆண், பெண் உடல் உறவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையில் பெண்களின் கல்வியறிவு பெறும் விகிதம் அதிகரித்து வரும் சூழலில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கல்வியறிவு விகிதம் அதிகரிப்பதால் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக நிதிஷ் குமார் கூறினார், ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் கண்ணியக்குறைவாக இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.
இதனால், நிதிஷ்குமாரின் பேச்சு குறித்து பாரதிய ஜனதா தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரண்டு முறை பாஜக எம்எல்ஏ.வாக இருந்த ரஷ்மி வர்மா பிபிசி ஹிந்தியிடம் பேசகையில், நிதிஷ்குமாரின் பேச்சு மிகவும் மோசமானது எனக் கூறினார்.
“ஆண்-பெண் உறவைப் பற்றி முதல்வர் பேசும் போது, அவரது உடல் மொழியைப் பாருங்கள். சட்டசபை போன்ற மரியாதைக்குரிய மன்றத்தில் இப்படி யாரும் கூறியதாக எனக்கு நினைவில்லை. அவரது பேச்சை சட்டசபை அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், சட்டசபையில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்,” என்றார் ரஷ்மி வர்மா.

பட மூலாதாரம், ANI
என்ன நடந்தது?
செவ்வாய்க்கிழமை அன்று பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் மக்கள் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை தொடர்பாக அனைத்து கட்சியினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ்குமார் அவையில் தனது கருத்தை முன்வைத்தார்.
13 கோடி மக்கள்தொகை கொண்ட பீகார் மாநிலத்தில் மக்கள்தொகை பெரும் பிரச்சினையாக உள்ளது. 2005ல் பதவியேற்ற பிறகு நிதிஷ் அரசு இதற்கான பணிகளை தொடங்கியது. மக்கள் தொகை விகிதத்தை குறைக்க நிதிஷ் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வின்படி, பெண்களின் கல்வியறிவு விகிதம் 51.5 சதவீதத்தில் இருந்து 73.91 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதைப் பற்றி நிதிஷ் குமார் அவையில் குறிப்பிடுகையில், "மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பெண்களின் எண்ணிக்கை 24,81,000 லிருந்து 55,90,000 ஆக அதிகரித்துள்ளது. இடைநிலைத் தேர்ச்சி பெற்ற சிறுமிகளின் எண்ணிக்கை 12,55,000 லிருந்து 42,11,000 ஆகவும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களின் எண்ணிக்கை 35,000லிருந்து 34,61,000 ஆக அதிகரித்துள்ளது,” என்றார்.
தொடர்ந்து இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், "முன்பு, 4.9 சதவீதமாக இருந்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் படிக்கும் போது, கருவுறுதல் விகிதம் குறையும். தற்போது, 2.9 சதவீதமாக குறைந்துள்ளது, இதை மேலும் 2 ஆக குறைக்க வேண்டும்,” என்றார்.
இந்த அறிக்கையின் போது ஆண் பெண் உறவு குறித்தும் முதல்வர் கருத்து தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
இது முதல் முறையல்ல
பீகார் மகிளா சமாஜ் செயல் தலைவரும், பத்திரிக்கையாளருமான நிவேதிதா ஜா கூறுகையில், "இது மிகவும் அநாகரீகமான கருத்து. மக்கள் தொகை பிரச்னை மிகவும் தீவிரமான பிரச்னை. ஆனால், முதல்வரின் இந்த கருத்தும், அவரது உடல் மொழியும் அதை ஆபாசமாக ஆக்குகிறது.
சபைக்குள் கூட ஆணாதிக்கம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.அவரது இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். பெண்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும், சபையில் இருக்கும் பெண்கள் இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்," என்றார்.
இதற்கிடையில், தனது பேச்சுக்கு எழுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, நிதிஷ்குமார் வருத்தம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயரும் இடஒதுக்கீடு
பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரைத்துள்ளார்.
செவ்வாயன்று, பிகார் சட்டசபையில், அவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு இருக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.
"சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை மனதில் கொண்டு, இந்த முடிவுகளை எடுக்கலாம்."
"சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில், வகுப்புவாரி புள்ளி விவரங்கள் கண்டறியப்பட்டன. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 47.12 சதவீதம் பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.01 சதவீதம் பேரும்,, பட்டியல் சாதியினர் 19.65 சதவீதம் பேரும், பழங்குடியினர் 1.68 சதவீதம் பேரும் மற்றும் பொதுப் பிரிவினர் 12.55 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது,” என்றார்.
இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பேசிய பிகார் முதல்வர், முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவுகளை சபையில் கூறினார்.
அப்போது அவர், “பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் சதவிகிதம் அதிகரிப்பால், அவர்களுக்கு 22 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையில், 22 சதவீதத்தை நீக்கினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 28 சதவீத இடஒதுக்கீட மட்டுமே இருக்கும்."
"மொத்த எண்ணிக்கையில், 63 சதவீதமாக பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும், 28 சதவீதமாகவே உள்ளது. அதனால், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்."
"இதற்காக, தற்போது 50 சதவீதமாக உள்ள மொத்த இட ஒதுக்கீட்டை, குறைந்தபட்சம் 65 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். முன்னதாகவே, 10 சதவிகிதம் உயர் சாதியினருக்கு இருக்கிறது. அதையும் சேர்த்தால், மொத்தம் 75% இடஒதுக்கீடு, மிச்சம் 25 சதவீதம் இருக்கும். "
"முன்பு, 40 சதவிகதம் அனைவருக்குமாக இருந்தது. தற்போது அது 25 சதவிகிதமாக இருக்கும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கிட்டை, குறைந்தபட்சம் 65 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சி,”
இவ்வாறு அவர் சபையில் பேசினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












