தமிழ்நாட்டில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. திட்டம் - மாநில அரசு ஏற்குமா?

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் இப்போது ஏன் சர்ச்சையாகியிருக்கிறது?

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம், Getty Images

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு

ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்துஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திடத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வட்டத்திலும் சோதனைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN

படக்குறிப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்

‘விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய சோதனை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி அளிக்க கூடாது, என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் காவிரி படுகை முழுவதும் அறிவிக்கப்படவில்லை. கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விளையும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதியில் தலா 5 புதிய கிணறுகள் என மொத்தம் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதி தர மறுத்து விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே முடிவை ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்,” என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும், என்றார் பேராசிரியர் ஜெயராமன். “ஆனால் அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பல முன்னுதாரணங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார்.

மேலும் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்த இடங்களில் குழாய் மற்றும் சிமெண்ட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறதாகவும், அதனால் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே அரசுக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள்" எனவும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 30க்கும் மேற்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாகக் கிணறுகள் தோண்டப்படுவதால் என்ன பிரச்னை ஏற்படப் போகிறது?

இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறுகளில் ஆழம் குறைவாக இருப்பதால் தளர்வான பகுதியில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது என்றும், இதனால் பூமிக்கு அடியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறினார்.

“ஆனால், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஒரு ரசாயனக் கலவை பூமிக்குள் செலுத்தப்பட்டு நிலத்தடியில் இருக்கக் கூடிய வண்டல் பாறை, களிப்பாறை ஆகியவை செயற்கையாக நொறுக்கப்பட்டு எண்ணெய் மற்றும் மீத்தேன் எரிவாயு வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூமிக்குள் செலுத்தப்படும் இந்த ரசாயனங்கள் அபாயகரமானவையாக உள்ளன,” என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த நொறுக்குதல் முறையைச் செயல்படுத்த, மண்ணுக்கு அடியில் செலுத்துவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றார். “இதனை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் விவசாயம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்றார்.

ஹைட்ரோகார்பன்
படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள்

அதேபோல், மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் போது, அது முழுமையாக வெளியே வராமல் மண்ணுக்கு அடியில் தங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார். மேலும், வெளியே வரும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலந்து அதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

“டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்ந்ததால் மக்கள் போராடி இந்த திட்டங்களை கைவிட முயற்சி செய்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகள் பாதிப்பு ஏற்படாததால் மக்கள் அதனுடைய ஆபத்துகளை இன்னும் உணராமல் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது செழிப்படைந்து வருவதால் இங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது,” என்றார் பேராசிரியர் ஜெயராமன்.

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம், FACEBOOK/SUNDARRAJAN

படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்

‘புதிய கிணறுகளுக்கான கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’

தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் தெரிந்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும், என்றார்.

“மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளைத் தளர்த்தி மாநில அரசின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை புதிதாக அமைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் எங்கும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என்றார்.

மேலும், “தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரியுள்ளதை பார்க்கும் போது மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் புதிய கிணறுகளை தமிழகத்தில் அமைத்திட அனுமதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அனுமதி கோரி இருப்பதாக தோன்றுகிறது,” என்றார் சுந்தர்ராஜன்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் நிபுணர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, என்று கூறிய அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம், NAVASKANI

படக்குறிப்பு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி

‘ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’

இது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு நிச்சயமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு அனுமதி நிராகரித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நீதிமன்றத்தின் வாயிலாக புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று கிணறுகள் அமைத்தால் மக்களை ஒன்று திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம். ராமநாதபுரம் மாவட்டம் மண்ணில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விடமாட்டோம்,” என நவாஸ்கனி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஹைட்ரோகார்பன் கிணறு

பட மூலாதாரம், MEYYANATHAN

படக்குறிப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்

‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’

இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதிப்பதில்லை, என்றார்.

“தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்டத்தை தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்,” என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி இருந்தததாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினார். தற்போது அதே 20 கிணறுகளை புதிதாக அமைத்திட அனுமதி கோரியுள்ளனரா, அல்லது வேறு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)