கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கி 'சாதனை நாயகன்' ஆனது எப்படி?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

விராட், விராட், விராட்!

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை சீசனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அணியும் ஒவ்வொரு ஜெர்சியிலும் ஒரே ஒரு பெயரை மட்டுமே நீங்கள் கவனிப்பீர்கள். உலகக்கோப்பை 2023 போட்டிக்காக மைதானத்தில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்களின் நீல நிற ஜெர்சியில் எண்.18ஐ பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் உலகில் விராட் கோலிக்கு எந்த அளவுக்கு மதிப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒன்றே போதுமானது.

இவ்வளவு அன்பைப் பெற அனைவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை. சச்சின் டெண்டுல்கர் பலரது ஆரவாரத்தையும் கை தட்டலையும் பெறுவார். மக்கள் டெண்டுல்கர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தனர். இப்போது சச்சினின் பாரம்பரியத்தை விராட் முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கரே மார்ச் 2012இல் விராட் அந்த பாரம்பரியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வார் என்று கணித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் 100வது சதத்தைக் கௌரவிக்கும் வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி அது. பிரபல நடிகர் சல்மான் கான் சச்சினிடம், "உங்கள் சதத்தை யார் முறியடிப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பிறந்த தினம்

பட மூலாதாரம், Getty Images

அதற்கு பதிலளித்த சச்சின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்களை எடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இருப்பினும், கடந்த தசாப்தத்தில், விராட் உண்மையில் இந்த சாதனையை அடைந்துள்ளார். அதோடு, சச்சினின் சதத்தை முறியடிக்கும் புள்ளியை நெருங்கியுள்ளார்.

ஒரு காலத்தில், அவரது ஆக்ரோஷமான அணுகுமுறைக்காக அவர் "பிக்தா ஹுவா பீட்டா" (வழிதவறிய மகன்) என்று அழைக்கப்பட்டார். ஆனால் விராட் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் மட்டுமல்ல, உலகளவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தையும் அடைந்துள்ளார். விராட் கோலி கிரிக்கெட்டின் உலகளாவிய முகமாகவும் மாறிவிட்டார்.

கிரிக்கெட் தூதர்

மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வரலாற்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அந்த முடிவை ஆதரிக்க கோலி முன்னுதாரணமாக காட்டப்பட்டார்.

முன்னாள் ஒலிம்பியனும், 2028 ஒலிம்பிக்-பாராலிம்பிக்ஸின் விளையாட்டு இயக்குநருமான நிக்கோலோ காம்ப்ரியானி, கிரிக்கெட்டை பற்றிப் பேசும்போது இவ்வாறு கூறினார்.

"இன்று, விராட் கோலி சமூக ஊடகங்களில் மூன்றாவது பிரபலமான விளையாட்டு வீரர். அவருக்குக் கிட்டத்தட்ட 34 கோடி ஃபாலோயர்ஸ் உள்ளனர். மூன்று அமெரிக்க சூப்பர் ஸ்டார்களான லெப்ரான் ஜேம்ஸ், டைகர் வுட்ஸ் மற்றும் டாம் பிராடி ஆகியோரைவிட சமூக ஊடகங்களில் அவருக்கு அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

இப்படித்தான் 'பிராண்ட் கோலி' கிரிக்கெட் உலகிற்கும் நன்மை செய்து வருகிறார். ஆனால் இந்த வெற்றியை அடைவது அவ்வளவு எளிதல்ல. அவர் பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடின உழைப்பு, அதிக எதிர்பார்ப்புகளின் அழுத்தம், சீரான செயல்திறனுக்கான அழுத்தம் மற்றும் மன வலிமை ஆகியவை இதன் பின்னால் உள்ளன.

தந்தையின் மறைவுக்குப் பிறகும் விளையாடிய விராட்

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலியின் மன வலிமை 2006ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.

விராட்டின் தந்தை பிரேம் கோலிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் படுத்த படுக்கையாக இருந்தார். விராட்டுக்கு 17 வயதுதான். அப்போது டெல்லி அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், இரண்டாவது நாள் முடிவில் விராட் ஆட்டமிழக்காமல் இருந்தார். நள்ளிரவில், பிரேம் கோலிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, திடீரென அவர் அதிகாலையில் காலமானார். அதிகாலை 2 மணியளவில் விராட் தனது தந்தையை இழந்தார்.

அவரது கிரிக்கெட் பயணத்தில் அவரது தந்தையும் கணிசமான பங்களிப்பைச் செய்ததால் விராட்டுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று, அவர் சென்றுவிட்டார், விடைபெற விராட் உடன் இல்லை. ஆனால் விராட் வலுவாகவே இருந்தார். உறவினர்கள் வர ஆரம்பித்தனர். ஆனால் அவர் அழவில்லை.

காலையில், அவர் டெல்லியின் பயிற்சியாளர் சேத்தன் ஷர்மாவை அழைத்து, நடந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் இன்னிங்ஸை முடிக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தைக் கூறினார்.

மைதானத்திற்குச் சென்றார். அங்கு சக வீரர்களை சந்தித்த விராட் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மீண்டும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மைதானத்திற்குச் சென்றார். அவர் 90 ரன்கள் எடுத்தார். அந்தக் கடினமான நேரத்தில் விராட்டின் நம்ப முடியாத அமைதி மற்றும் அர்ப்பணிப்பு அவரது போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அவர் தனது இன்னிங்ஸை முடித்துவிட்டு தனது தந்தையின் இறுதி சடங்குகளுக்குச் சென்றார். அம்மா சரோஜ் ஒரு பேட்டியில் கூறியது போல் அன்று இரவு திடீரென அதிக பொறுப்புகளைச் சுமப்பவரானார் விராட். வீட்டில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் அவர் மூத்த சகோதரர் விகாஸுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

விராட்டுக்கு 'சிக்கு' என்ற பெயர் வந்தது எப்படி?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

ஒருமுறை, இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது, விக்கெட் கீப்பிங் செய்யும் மகேந்திர சிங் தோனி, மைதானத்தில் விராட் கோலியை "சிக்கு" என்று அன்புடன் உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு 'சிக்கு' உலகப் புகழ் பெற்றது. கிரிக்கெட் உலகின் 'ஆங்கிரி யங் மேன்' என்று பெயர் பெற்றவர்.

ஆனால் விராட்டுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது, எப்போது?

கெவின் பீட்டர்சனுடனான இன்ஸ்டாகிராம் நேரலை அமர்வின்போது விராட்டே அதைப் பற்றிய சில தகவல்களை வெளிப்படுத்தினார்.

விராட் மிக இளம் வயதில் டெல்லிக்காக ரஞ்சி கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, அவர் தனது சிகை அலங்காரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் தனது தலைமுடியை மிகவும் குட்டையாக டிரிம் செய்து கொள்வார். அந்த நேரத்தில், அவரது கன்னங்கள் இன்னும் ஒரு குழந்தையைப் போல சற்றே குண்டாக இருந்தன. இது அவரை அபிமானமாகவும் மற்றவர்களிடையே தனித்து நிற்கவும் செய்தது.

அவரைக் கவனிக்கும்போது, டெல்லி அணியின் பயிற்சியாளர் ஒருவர், 'சம்பக்' என்று அழைக்கப்படும் குழந்தைகளின் புகழ்பெற்ற நகைச்சுவையில் சிக்கு என்ற முயல் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தினார். அவர் விராட்டை அதே பெயரில் அழைத்தார் - சிக்கு.

விராட் கோலி தனது 31வது பிறந்தநாளில், இந்த 15 வயது 'சிக்கு'வுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

தனது 31வது பிறந்தநாளில், விராட் கோலி இந்த 15 வயது 'சிக்கு'வுக்கு ஒரு கடிதம் எழுதினார். குண்டான கன்னங்கள் கொண்ட சிறுவனாக இருந்தவரின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் பயணத்தைக் கொண்டாடினார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று இந்திய அணியில் இடம்

பிப்ரவரி 2008இல், மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வென்றது, விராட் கோலி அந்த அணியை வழிநடத்தினார்.

U-19 கிரிக்கெட் வீரராக இருந்தாலும், விராட் விளையாட்டில் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் காயம் காரணமாக விளையாடாததால் இந்திய அணியில் விராட் இடம் பெற்றார். அவர் ஒருநாள் சர்வதேச தொடரில் அறிமுகமானார், அங்கு அவர் அரை சதம் அடித்தார்.

ஹராரேயில் 2010ஆம் ஆண்டு நடந்த, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியுடன், விராட் டி20 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011இல், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் தனது இடத்தைப் பெற்றார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) லீக்கின் தொடக்க சீசனில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் விராட் இணைந்தார்.

அவரது இடைவிடாத உந்துதல் மற்றும் ரன்களை அடிப்பதில் ஆர்வம் ஆகியவை அவரை நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வைத்தது. விராட் பெரும்பாலும் உலக கிரிக்கெட்டில் அடுத்த "சச்சின்" என்று பார்க்கப்படுகிறார்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இந்த அதிக எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சச்சின் டெண்டுல்கரிடம் வழிகாட்டுதலைப் பெற்றார். 2011 உலகக்கோப்பை போட்டியில் இறுதி வெற்றிக்குப் பிறகு சச்சினை தோளில் தூக்கி வலம் வந்தவர். பழம்பெரும் வீரருக்கு வணக்கம் செலுத்தும் சைகையை அணியினர் பின்பற்றினர்.

விராட்டின் தளராத மனமும் உறுதியும் அவரைச் சிறந்து விளங்கச் செய்தது. ஆஸ்திரேலியாவில் 2011-12 தொடரில், இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடினாலும், விராட் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடைந்ததால், அவரது வாழ்க்கையில் ஒரு நல்ல தருணத்தைக் குறிக்கும் வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

சக பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்த போது, விராட் நிலைத்து நின்று சிறப்பான ஷாட்களை ஆடி சதம் அடித்தார்.

டெண்டுல்கர், டிராவிட், கம்பீர் போன்ற பெரிய வீரர்களால்கூட அந்த பிட்சில் அத்தகைய சாதனையை எட்ட முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டில் 'விராட் சகாப்தம்' இந்த சதத்தின் மூலம் ஆரம்பமானது.

புதிய தலைமுறை ஆக்ரோஷ வீரர்

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா 2011-12இல் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, விராட் கோலியின் ஆக்ரோஷமான, வெளிப்படையாகப் பேசும் தன்மை விவாதப் பொருளாக இருந்தது. அவர் ஆஸ்திரேலிய அணியினரின் ஸ்லெட்ஜிங்கில் இருந்து வெட்கப்படவில்லை.

மேலும் அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஸ்லெட்ஜிங்கையும் ஆக்ரோஷமாகக் கையாண்டார். ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான புகழ்பெற்ற வீரர்களை எதிர்கொண்டபோதும், விராட் தயங்காமல் இருந்தார்.

அதே புதிய தலைமுறை அச்சமற்ற இந்திய வீரர் ஆஸ்திரேலியாவின் அடுத்த கிரிக்கெட் தொடரிலும் காணப்பட்டார். 2014-15 சுற்றுப்பயணத்தின் போது, மைதானத்தில் மிட்செல் ஜான்சனுடன் விராட் மோதிய சம்பவம், நடுவரை தலையிடத் தூண்டியது.

பலருக்கு இது இந்திய கிரிக்கெட்டின் புதிய முகமாக இருந்தது. புதிய தலைமுறை இந்திய கிரிக்கெட் வீரர்களால் ஏற்பட்ட புத்துணர்ச்சியூட்டும் மாற்றம். உண்மையில் சர்வதேச கிரிக்கெட்டின் மாற்றம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் டி20 கிரிக்கெட் வடிவத்தின் தொடக்கத்தில் தெளிவாகத் தெரிந்தது. இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கிரிக்கெட்டின் நுழைவுடன் ஒத்துப்போனது.

விராட் இந்திய கிரிக்கெட்டின் பிரதிநிதியாக மட்டும் இருந்துவிடாமல், தன்னைப் போன்ற உயர்ந்த கனவைக் கொண்டிருந்த நாட்டில் புதிய தலைமுறையினரையும் அவர்களின் தன்னம்பிக்கையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது ஆக்ரோஷமான மற்றும் சில நேரங்களில் துணிச்சலான இயல்பு அவரை பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

அந்த நேரத்தில் அவரது துணிச்சலான மற்றும் திமிர் பிடித்த நடத்தை பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் "கடினமாக விளையாட" அவரது கடுமையான அர்ப்பணிப்பு இளம் இந்திய ரசிகர்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே எதிரொலித்தது.

அதே நேரத்தில், விராட் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அப்போதைய கேப்டன் தோனி உட்பட அவரது சக வீரர்களால் அடிக்கடி பாராட்டப்பட்டார்.

விராட் கோலியின் பணி நெறிமுறை மற்றும் பணிவு ஆகியவை மகேந்திர சிங் தோனி மற்றும் சக வீரர்களால் அடிக்கடி பாராட்டப்பட்டது. கடின உழைப்புக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் "கடினமாக விளையாடும்" மனப்பான்மை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியர்களிடையே அவரது புகழ் அதிகரித்தது.

அவரது செல்வாக்கு இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பாலும் நீண்டது. சில பாகிஸ்தானிய ரசிகர்கள்கூட விராட்டை அவரது உறுதிப்பாடு மற்றும் விளையாடும் பாணியைப் போலவே தங்கள் குழந்தைகள் பின்பற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

சேஸ் மாஸ்டர்

விராட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது, குறிப்பாக அவரது கவர் டிரைவ்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, குறிப்பாக அவர் தனது கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளை அடிக்கும்போது. அவுட்ஸ்விங் அல்லது ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை, அவர் அடிக்கடி விட்டு விடுகிறார். ரன்களை துரத்துவதற்காக களத்தில் இறங்கும்போது விராட் தடுக்க முடியாதவராகிப் போகிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில், 'ரன் சேஸ்' என்பது இலக்குகளைத் துரத்தும் கலையில் தேர்ச்சி பெறுவதாகும். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டுவதில் விராட்டின் பேட் அரிதாகவே தோல்வியடைகிறது. இந்திய அணி வெற்றி இலக்கைத் துரத்தும்போது ரன் ரேட்டை பராமரிக்க பவுண்டரி அடிக்கும் சவாலை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அதனால்தான் விராட் 'சேஸ் மாஸ்டர்' என்ற பட்டத்தைப் பெற்றார்.

உலகில் எங்கு விளையாடினாலும், எந்தெந்த ஷாட்களை எப்போது விளையாட வேண்டும் என்பதை அறிவது, சிறந்த பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவது, ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது, ஆடுகளம் மற்றும் நிலைமைகளை மதிப்பிடுவது மற்றும் தேவைக்கேற்ப தந்திரங்களை மாற்றுவது ஆகியவை அவரது உத்திகளில் அடங்கும். இவைதான் விராட் ஆட்டத்தின் தனித்துவமான குணங்கள்.

அவர் தனது உடற்தகுதி பற்றி நன்கு அறிந்தவர். 2018ஆம் ஆண்டில், உடல்நலப் பிரச்னைகள் காரணமாக, விராட் சைவ உணவு உண்பதற்கு முடிவு செய்தார். அதாவது அவர் தனது உணவில் இருந்து இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றை நீக்கினார். அவர் தனது உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளில் கண்டிப்பானவர்.

அவரது தன்னம்பிக்கை, விளையாட்டில் அர்ப்பணிப்பு, கவனம், ஒழுக்கம், செறிவு மற்றும் அமைதி ஆகியவை அவரது வெற்றிக்கு கணிசமாகப் பங்களிக்கின்றன.

இந்த குணங்கள் இந்திய கிரிக்கெட்டில் விராட்டுக்கு ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுத் தந்தன. தோனியின் ஓய்வுக்குப் பிறகு கேப்டன் பதவியையும் அவர் பெற்றார்.

கேப்டன் பதவி - முள் கிரீடம்

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டு, சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, விராட் கோலிக்கு திடீரென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விரலில் ஏற்பட்ட காயம் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு முன் முழுமையாகக் குணமடையவில்லை. டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் வாய்ப்பு கோலிக்கு கிடைத்தது, அதை அவர் சிறப்பாக நிரூபித்தார்.

கோலி கேப்டனாக தனது முதல் டெஸ்டிலேயே தலைமைத்துவ திறமையை விரைவாக வெளிப்படுத்தினார். அவர் 2022 வரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். இதில், இந்தியா 40 போட்டிகளில் வென்றது, அதே நேரத்தில் 17 முறை தோல்வி கண்டது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அவரது வெற்றி விகிதம் 58.82%.

அவரது தலைமையில், இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 95 போட்டிகளில் விளையாடியது, அதில் 65 வெற்றிகள் கிடைத்தன. இது இந்தியாவில் 24 மற்றும் வெளிநாட்டில் 41 மொத்தம் 65 வெற்றிகளைக் கொண்டது. கேப்டனாக கோலியின் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் 68.42%.

கோலி அணியை வழிநடத்திய டி20 கிரிக்கெட்டில், இந்தியா 66 போட்டிகளில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றது, 16 தோல்விகளை மட்டுமே பெற்றது, மேலும் அவரது வெற்றி விகிதம் 64.58 ஆகும்.

விராட் ஐசிசி விளையாட்டுகளில் கேப்டனாக வெற்றியை அடைய முடியவில்லை என்றாலும், அவரது புள்ளிவிவரங்கள் அவரது நம்ப முடியாத சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன. அவர் இந்திய கிரிக்கெட்டின் புகழ்பெற்ற கேப்டன்களில் நிச்சயமாக ஒரு இடத்தைப் பெறுகிறார்.

ஆனால் கேப்டன் பதவி முள் கிரீடம் என்று கூறப்படுவதற்கு, விராட்டின் அனுபவமும் வேறுபட்டதல்ல.

ஒரு பேட்ஸ்மேனாக அவரது செயல்திறன் 2019இல் குறையத் தொடங்கியது. கோலி ஒரு பேட்ஸ்மேனாக ஃபார்ம் சரிவை எதிர்கொள்ளத் தொடங்கினார். அந்த நேரத்தில், அவர் டி20, ஒருநாள் சர்வதேச போட்டிகள், பின்னர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான முடிவை எடுத்தார். கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்த முடிவு கடும் விவாதத்தைத் தூண்டியது, பல உரையாடல்களைத் தூண்டியது. ஒரே உறையில் இரண்டு வாள்கள் அல்லது இரண்டு சிங்கங்கள் ஒரு காட்டில் ஒருபோதும் வாழ முடியாது.

தங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை என்பதை விராட், ரோஹித் இருவருமே தெளிவுபடுத்தி இருந்தாலும்; இந்த விவாதம் அடிக்கடி நிகழும்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

விராட்டின் இரண்டாவது இன்னிங்ஸ்

விராட் கோலிக்கு சவாலான காலகட்டத்தை 2021-22 ஆண்டு கொண்டு வந்தது. எளிதாக ரன்களை குவிப்பதாக அறியப்பட்ட அவரது பேட், அந்த மாயத்தை இழந்தது போல் தோன்றியது. அவர் டி20 வடிவத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

தொடர்ச்சியான உழைப்பு அவரை சோர்வடையச் செய்தது. அவரது பேட்டிங் செயல்பாடுகளில் அவரது போராட்டங்கள் தெளிவாகத் தெரிந்தன. 2022ஆம் ஆண்டில், விராட் ஒரு மாத இடைவெளி எடுத்தார், 2008ஆம் ஆண்டு முதல் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடி வரும் ஒருவருக்கு இதுவோர் அரிய நிகழ்வு.

இருப்பினும், ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் விராட் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்தார். 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில், அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பிரமாதமான இன்னிங்ஸ் விளையாடினார், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பிறகு, விராட் தனது ஃபார்மை மீண்டும் பெற்று, புதிய வீரியத்துடன் விளையாடி வருகிறார். அவர் இப்போது அணியில் ஒரு மூத்த வீரரின் பாத்திரத்தில் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் இந்த மறுபிரவேசம் எளிதாக வரவில்லை. 2022ஆம் ஆண்டில், ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் விராட் அதுகுறித்து தெரிவித்தார்.

“அப்போது கிட்டத்தட்ட ஒரு மாதமாக நான் பேட்டை எடுக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. இதெல்லாம் வெறும் மேலோட்டமானது என்று நான் உணர ஆரம்பித்தேன். உனக்குத் திறமை வந்துவிட்டதாக நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தத் தீவிரம், என் மனம் என்னை முன்னோக்கி செல்லச் சொன்னது. அதே நேரத்தில் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று என் உடல் பரிந்துரைத்தது. அதற்கு ஓய்வு தேவை. எனக்கு ஓய்வு தேவை."

தனது மனநலம் குறித்து வெளிப்படையாக விவாதித்த விராட்டின் செயல் பலராலும் பரவலாகப் பாராட்டப்பட்டது. அவரது வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் அவரைப் போன்ற மன வலிமை வாய்ந்த ஒருவர்கூட கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

மன நலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மற்றவர்களை ஊக்குவித்தார். விராட் கோலியாக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டுமின்றி, எவ்வளவு பெரிய நபருமே கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள இது உதவியது.

"நான் மனதளவில் வலிமையானவன், அதைத்தான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் வரம்புகள் உண்டு. அந்த வரம்புகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் விஷயங்கள் ஆரோக்கியமற்றதாகிவிடும்.

நான் மனதளவில் போராடிக் கொண்டிருந்தேன். இப்போது அதை ஒப்புக்கொள்வதற்கு எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்குத் தெரியவில்லை. இனி அப்படித்தான். நீங்கள் வலுவாக இருக்க முடியும், ஆனால் எந்தவொரு போராட்டத்தையும் மறைத்து உங்கள் வலுவான பக்கத்தை நீங்கள் எப்போதும் காட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை."

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

அனுஷ்காவுடன் வாழ்க்கை பார்ட்னர்ஷிப்

விராட் மற்றும் அனுஷ்கா முதன்முதலில் 2013இல் ஒரு ஷாம்பு விளம்பர படப்பிடிப்பின் போது சந்தித்துக் கொண்டனர். ஆரம்பத்தில், அவர்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர். பின்னர் அது காதல் உறவாக மாறியது.

கடந்த 2014ஆம் ஆண்டில், இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, அனுஷ்காவை தனது காதலி என்று பகிரங்கமாக விராட் ஒப்புக்கொண்டபோது, அனுஷ்காவை உத்தியோகபூர்வமாக சுற்றுப்பயணத்தில் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றார்.

ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரரும் நடிகையும் அடங்கிய ஒரு நட்சத்திர ஜோடி குறித்து கிசுகிசு செய்திகள் வெளியாவதில் ஆச்சரியமில்லை. அவர்களின் தனித்துவமான பிணைப்புக்காக அவர்களின் உறவு விவாதத்திற்கு உட்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் அனுஷ்கா உடன் இருந்தபோது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது விராட் தனது ஃபார்மை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டனர். ரசிகர்களும் சமூக ஊடக ஃபாலோயர்சும் வேறு எதற்கும் பதிலாக விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தினர்.

விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் அந்தக் கருத்துகளை புறக்கணித்தனர். ஆனால் 2016இல் மீண்டும் அதே விமர்சனத்தை சந்திக்க நேரிட்டது, அப்போது விராட் வெளிப்படையாக அனுஷ்காவின் பக்கம் நின்றார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

கடந்த 2017ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர்கள் இத்தாலியில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஊடகங்கள் மற்றும் பொது கவனத்திலிருந்து விலகினர்.

இந்தத் தம்பதியின் மகளான வாமிகா பிறந்ததும், விராட்டும் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொண்டார்.

பிரபலமான நட்சத்திர ஜோடியாக விராட் மற்றும் அனுஷ்கா இருந்த போதிலும், தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் எவ்வாறு சமநிலையைப் பராமரிப்பது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)