ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுமா? முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆப்கானிஸ்தான் அணி, உலகக்கோப்பை லீக் போட்டியில் 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் ஏறக்குறைய அரையிறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. ஆனால் நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்புதான் கிரிக்கெட் விளையாடப் பழகி, 2015ஆம் ஆண்டிலிருந்து உலகக்கோப்பையில் பங்கேற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணிகளுக்கு அதிர்ச்சிகரமான முடிவுகளையும் அளித்து வருகிறது.
கடந்த 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றாலும், பெரிதாக ரசிகர்களின் மனதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சர்வதேச அணிகளுக்கு எதிராக அச்சுறுத்தலான பேட்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், 2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் வரை ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் ஏராளமான சர்வதேச அனுபவத்தைப் பெற்றுள்ளனர். பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி, பல்வேறு பாடங்களைப் படித்துள்ளனர்.
விஸ்வரூபம்

பட மூலாதாரம், Getty Images
தாங்கள் கற்ற வித்தை அனைத்தையும், 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இறக்கி பெரிய அணிகளுக்குக்கூட அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள்.
குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அற்புதமான வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்திருக்கிறது. அது மட்டுமின்றி உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டுக்கு வளர்ப்புத் தாயாக இருந்தது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் கிரிக்கெட் ஆடப் பழகியது பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்துதான். தங்கள் திறமையை மெருகேற்றியதும், செதுக்கியதும் பாகிஸ்தான் மண்ணில்தான்.
அப்படியிருக்கும்போது, உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியையே சேஸிங் மூலம் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். அதிலும் 284 ரன்களை சேஸிங் செய்வது என்பது, மிகவும் கடினமானது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் பெரிய அணிகளே சறுக்கும் வாய்ப்பு இருக்கும்போது, ஆப்கானிஸ்தான் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேம்பட்ட பந்துவீச்சு, பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என 3 பிரிவுகளிலும் மேம்பட்ட அணியாகவே இருந்து வருகிறது. ஜாம்பவான் அணிகள் ஆப்கானிஸ்தான் தானே என்று எளிதாக எடுத்துவிடக்கூடாது என்னும் அளவுக்கு பந்துவீச்சும், பேட்டிங்கும் இருப்பது அந்த அணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.
குறிப்பாக குட்டி அணிகள்(மினோஸ்) என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் இதுநாள் வரை தங்களின் திறமையான சுழற்பந்துவீச்சுக்கு மட்டும்தான் பெயரெடுத்திருந்தது.
ஆனால் இந்த உலகக்கோப்பைத் தொடரில் தங்களால் பேட்டிங்கிலும் சோபிக்க முடியும், எந்த ஸ்கோரையும் சேஸிங் செய்ய முடியும் என்று போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக சவாலான ஸ்கோரை சேஸிங் செய்து தங்களின் பேட்டிங் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் அணியில் பந்துவீச்சு மட்டும்தான் பலம், பேட்டிங் எதிர்பார்த்த அளவு வலுவில்லை என்று எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் நினைத்துவிட முடியாது.
நிகர ரன்ரேட்டால் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகள், 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
இருப்பினும் அதன் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதுதான் பெரிய பின்னடைவு. ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் அடைந்த தோல்விகளும், வேகமாக எட்டாத வெற்றியும் நிகர ரன்ரேட்டை உயரவிடாமல் தடை செய்தன.
சவாலான ஆட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணி அடுத்து வரும் 10ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல முக்கியமானது.
தென் ஆப்ரிக்காவும் சாதாரணமானது அல்ல, வெல்வதும் எளிதானது அல்ல. பந்துவீச்சும், பேட்டிங்கும் அதீத வலிமையானது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தத் தொடர் முழுவதுமே ராட்சதத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் வெல்வது கடினம் என்றாலும், திட்டமிட்ட அணுகுமுறையால் நெருக்கடி கொடுத்து வெற்றியை வசப்படுத்த முடியும். நெதர்லாந்து அணி எப்படி தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததோ அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியாலும் அளிக்க முடியும்.
அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்க ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன. மூன்று அணிகளுமே தலா ஒரு ஆட்டம் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது.
- பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அடுத்து வரும் ஆட்டங்களில் தோற்கும் அதேநேரத்தில், தென் ஆப்ரிக்காவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் எந்த சிரமமும் இன்றி நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழையலாம்.
- ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய மூன்றுமே அல்லது ஏதேனும் இரு அணிகள் அடுத்து வரும் ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும். அவ்வாறான பட்சத்தில் ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவுதான். ஏனெனில், அந்த அணியின் ரன்ரேட் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பந்துவீச்சுதான் பலம்

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணியின் வலிமையே அதன் சுழற்பந்துவீச்சுதான். முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், ரஷித் கான், நூர் அகமது ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சர்வதேச பேட்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
குறிப்பாக ரஷித் கான் பல்வேறு அணிகளின் வீரர்களுக்கு எதிராக பந்துவீசிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். உலக நாடுகளில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ரஷித் கானுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ரஷித் கான் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர் என்பது கூடுதல் பலம். இந்தியாவில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரஷித் கான் 23 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார் என்பதே இந்திய ஆடுகளங்களின் தன்மையை அவர் அறிந்துள்ளதற்கு சாட்சி.
முகமது நபி 167 போட்டிகளில் பங்கேற்ற அனுபவ சாலி, இளம் பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான், சினாமேன் நூர் அகமது ஆகியோர் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப சிறப்பாகப் பந்துவீசி வருவது மிகப்பெரிய பலம்.
ஆனால், வேகப்பந்துவீச்சில் பரூக்கி தவிர பெரிதாக எந்தப் பந்துவீச்சாளரும் பந்துவீசவில்லை என்பது பலவீனம். ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் இன்னும் லைன் லென்த்தில் வீசினால் ஓரளவுக்கு அணிக்கு பக்கபலமாக இருக்கும்.
பலவீனங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு எந்த அளவுக்கு வலு சேர்க்கிறதோ, நிலைத்தன்மையுடன் இருக்கிறதோ அதற்கு நேர்மாறாக பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி மட்டுமே தொடர்ந்து நிலைத்தன்மையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ், ஜாத்ரன் இருவருமே கடந்த 5 போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து வருவது பெரிய பின்னடைவு. 10 ஓவர்களில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் வீழ்ந்தாலே நடுவரிசை வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு ரன் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதலால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடுவது அவசியம்.
ரஷித் கான், முகமது நபி, நஜ்புல்லா ஜாத்ரன் ஆகிய 3 பேருமே ஓரளவுக்கு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களும் உலகக்கோப்பையில் பெரிதாக இதுவரை ரன் சேர்க்கவில்லை. இதனால் கடைசி வரிசையில் எந்த பேட்டர்களும் இல்லாத நிலை இருப்பது ஆப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு.
ஐபிஎல் தொடரில் பிஞ்ச் ஹிட்டராக ரஷித் கான் செயல்பட்டதைப் போன்று அடுத்து வரும் இரு போட்டிகளில் செயல்பட்டால், நம்பிக்கையாக இருக்கும். நெருக்கடியான நேரங்களில் பேட்டர்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் விரைவாக ஆட்டமிழந்து வருவது மிகப்பெரிய பலவீனம்.

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்த போட்டிகளில் முழுமையாக 50 ஓவர்கள் பேட்ட செய்யவில்லை என்பதே சாட்சி.
ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். ஏறக்குறைய 50 போட்டிகளுக்கும் குறைவாகவே சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்றவர்கள். இதனால் நெருக்கடியான நேரங்களில் எவ்வாறு விளையாடுவது, தேவையான நேரத்தில் எவ்வாறு ரன் சேர்ப்பது, எந்தப் பந்துவீச்சாளரை குறிவைப்பது, நுணுக்கத்துடன் எவ்வாறு பந்துவீசுவது போன்றவற்றில் பின்னடைவைச் சந்திக்கிறார்கள்.
இது தவிர ஃபீல்டிங்கில் ஆப்கானிஸ்தான் அணி சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கில் மோசமாகவே செயல்படுகிறது, ஃபீல்டிங் விஷயத்தில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆதலால் ஃபீல்டிங்கை மேம்படுத்துவது முக்கியம்.
அடுத்து வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லவும், புதிய பரிமாணத்தை எட்டவும் முக்கியமானது. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் நிச்சயம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வெற்றி கிட்டுவது கடினம் என்றாலும், ஆப்கானிஸ்தான் தனது போராட்டக் குணத்தை கடைசிவரை விடாது என்பதை ரசிகர்கள் ரசிக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












