டெல்லி மக்கள் சுவாசிப்பது விஷ வாயுவா? - அதீத காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் காற்று மாசு மிகவும் தீவிரமாக இருப்பதால், பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அவ்வப்போது காற்று மாசு தீவிரமடைவது வாடிக்கையாக உள்ளது. தற்போது இந்த ஆண்டின் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக முண்ட்கா பகுதியில் 498 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 400ஐ கடக்கும்போது அது அபாய கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த அளவுக்கு மாசுபட்டுள்ள காற்றை 'உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் பாதிக்கக்கூடியது' என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி உள்ளது.
இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய தலைநகர் பகுதிக்கு (NCR) உட்பட்ட இடங்களில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசை டெல்லி அரசால் முற்றிலும் ஒழிக்க முடியாது: சுற்றுச்சூழல் அமைச்சர்

பட மூலாதாரம், delhi.gov.in
டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் டெல்லி அரசு காற்று மாசை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும் என நினைப்பது தவறு என்கிறார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியபோது, “காற்று மாசு என்பது டெல்லியின் பிரச்னை மட்டுமல்ல. டெல்லிக்கு உள்ளே இருக்கும் காரணிகளைவிட டெல்லிக்கு வெளியே இருக்கும் காரணிகள் இரண்டு மடங்கு அதிகமான காற்று மாசை ஏற்படுத்துகின்றன.
டெல்லி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கைகளால்தான் இந்த ஆண்டு டெல்லியில் 200க்கும் மேற்பட்ட நாட்களில் காற்றின் தரம் நன்றாக இருந்தது. நவம்பர் முதல் இரண்டு வாரங்களில் வானிலை மாறுகிறது. தொடர்ந்து மாசுபா்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்றார்.

டெல்லி, மிக மோசமாக மாசடைந்த நகரங்களில் ஒன்று. அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசுபாட்டால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது தலைநகரம். குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு தீவிரமடைகிறது. விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது, காற்றின் குறைந்த வேகம், விழாக்களின் போது வெடிக்கப்படும் பட்டாசு என இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
டெல்லியின் காற்று மாசு வழக்கமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதிகரிக்கும். அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் இந்தக் காலத்தில்தான் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிக்கிறார்கள் என்று டெல்லி மாசு கட்டுப்பாடு குழு தெரிவிக்கிறது.
'டெல்லி விஷ வாயு அறை போல் உள்ளது'
நுரையீரல் அடைப்பையும், பல நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடிய PM 2.5 என்ற துகள்களின் அளவு வியாழக்கிழமை மாலை அதிகரித்துள்ளது. காற்றில் ஒரு கன மீட்டரில் 60 மைக்ரோகிராம் மட்டுமே இருக்கவேண்டிய PM2.5, நேற்று நகரத்தின் பல்வேறு இடங்களில் அதைவிட ஏழு முதல் எட்டு மடங்கு அதிகமாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சுவாச பிரச்னைகளுக்கான துறையின் இயக்குநர் மருத்துவர் சந்தீப் நாயர் டெல்லி தற்போது விஷ வாயு அறை (மனிதர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் விஷ வாயுவைக் கொண்ட அறை) போன்று உள்ளதாக எச்சரிக்கிறார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “இது மிகவும் ஆபத்தான அளவை எட்டியுள்ளது. வெளியில் சென்றாலே, கண்களில் எரிச்சல், தொண்டையில் வலி உண்டாகிறது. எங்கள் மருத்துவமனையில் புறநோயாளிகளின் எண்ணிக்கை 20-30% அதிகரித்துள்ளது.
விஷ வாயுக்கள் உடலுக்குள் செல்லும்போது, அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். ஆனால் வேலைக்காக நாம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எனவே வெளியில் செல்பவர்கள், முகக் கவசம் அணிந்து, உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும்,” என்றார்.
மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்கள் கொண்ட நடவடிக்கை திட்டம் உள்ளது. அது Graded Response Action Plan- GRAP எனப்படும். காற்று மாசின் தீவிரத்தைப் பொறுத்து GRAP I, GRAP II ,GRAP III அல்லது GRAP IV அமல்படுத்தப்படும்.
தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிர மாசுபாடு காரணமாக GRAP III அமல்படுத்தப்படுகிறது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, நகரத்தில் அவசியமற்ற கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் கடந்த ஆண்டு காற்று மாசு தொடர்ந்து அதிகமாக உள்ள 14-15 இடங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டு அவை 4-5 ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் டெல்லிக்கு மிகவும் முக்கியமானவை. இதனால்தான் GRAP III அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

கடந்த வாரம் காற்று மாசுப்டு இதை விட சற்று குறைவாக இருந்தபோது GRAP II அமல்படுத்தப்பட்டது. அதன்படி, வாகனப் புகையைக் குறைக்க, டெல்லி மெட்ரோ, மின்சார பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளும் எண்ணிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, நகரத்தின் உள்ளே பட்டாசுகள் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கேஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டுகிறது.
“பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கேஜ்ரிவால் பழி சுமத்துவார். தற்போது பஞ்சாபில் உங்கள் அரசு உள்ளது. ஆனாலும் வேளாண் கழிவுகள் எரிப்பது அதிகமாகியுள்ளது.
தற்போது மத்திய அரசையும், உத்தர பிரதேச, ஹரியானா மாநிலங்களையும் பழி சொல்வார். டெல்லி மக்கள் இந்தக் காற்றை சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது,” என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷே சாத் பூனாவாலா கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












