உங்கள் போனை யாராவது ஹேக் செய்துள்ளார்களா என்பதை நீங்களே கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை குறிஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பியது.
அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில், “அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள், உங்கள் ஐபோனைத் தாக்கலாம். அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோனை, குறிவைக்கிறார்கள் என்று ஆப்பிள் நம்புகிறது."
"இந்த சைபர் தாக்குதல் நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துக் தாக்குகிறார்கள். அவர்கள் உங்கள் ஐபோன் பாதுகாப்பு அமைப்பைத் தாக்கினால், உங்களின் தகவல்கள், உரையாடல்கள், கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவையை அணுகி உங்களைக் கண்காணிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, இது தவறான அலாரமாக இருக்கலாம். இருப்பினும், தயவுசெய்து இந்த எச்சரிக்கையை மிருந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்,” என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இந்தத் தாக்குதல் முயற்சி குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி இந்தியாவில் உள்ள ஐபோன் பயன்படுத்தும் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே வந்துள்ளதால், இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை உண்மையா பொய்யா என்ற வாதம் போய்கொண்டிருக்கும் அதேவேளையில், இதுபோன்ற சைபர் தாக்குதல்கள், ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்டால், அதனை எப்படி கண்டுபிடிப்பது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதும் பேசு பொருளாகியுள்ளது.

பட மூலாதாரம், ANI
ஆண்ட்ராய்டு போனில் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து சைபர் கிரைம் வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரையிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், “எந்தப் போனையும் ஹேக் செய்ய முடியாது என்று கூறவே முடியாது. ஆனால், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன் என ஒப்பிட்டால், ஐபோனை ஹேக் செய்வது நிச்சயம் கடினமே. ஆனால், ஆண்ட்ராய்டு போனை சற்று எளிமையாக இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது,” என்றார் முரளி.
ஒரு ஆண்ட்ராய்டு போன் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதை கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறினார்.
“ஆண்ட்ராய்டு போனை முழுமையாக பரிசோக்காமல், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், தற்சமயம் என்ன என்ன செயலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தால், அவற்றில் சம்மந்தம் இல்லாத செயலிகளின் செயல்பாடு கண்டறிந்தால், அவற்றை உடனே நிறுத்தலாம். அவை சைபர் தாக்குதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை வைரஸாகக்கூட இருக்கலாம்,” என்றார் முரளி.
ஆண்ட்ராய்டு போன் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
எளிமையாகக் கண்டுபிடிப்பதற்கான வழியிருப்பதாகவும் முரளி கூறினார்.
“தொழில்நுட்பம் தெரியாதவர்கள் எளிமையாக கண்டுபிடிக்க ஒரே வழிதான். உங்களது செல்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சூடானாலும், உங்கள் போனின் பேட்டரி திடீரென வேகமாக சார்ஜ் இறங்கினாலோ, உங்கள் சென்போனின் பின்னணியில் எதோ செயலி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சந்தேகிக்கலாம்,” என்றார் முரளி.
அதேபோல, போனில் உள்ள தனியுரிமை அமைப்புகளை(privacy setting) உட்பட ஆண்ட்ராய்டு போனில் உள்ள பொதுவான அமைப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றார், சைபர் குற்றப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற பிஏ ராஜன்.
“பெரும்பாலும், நாம் ஆண்ட்ராய்டு போனில் எந்த வகையில் தாக்குதல் நடைபெற்றது, எப்போது நடந்தது என்பதை கண்டுபிடிக்க கால தாமதமாகலாம். ஆனால், அப்படி சைபர் தாககுதலுக்கு உள்ளான பிறகு உங்கள் செல்போனில் உள்ள அமைப்புகளில்(setting) மாற்றம் ஏற்படும். அதனை சரியாக கண்டுபிடித்து மாற்றிவிட்டால், தாக்குதலுக்குப் பிறகும், நம் செல்போனில் உள்ள தரவுகளையாவது குறைந்தபட்சம் பாதுகாக்கலாம்,” என்றார் ராஜன்.
சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
எந்த செல்போன் பயன்படுத்தினாலும், இரண்டு செல்போன்கள் பயன்படுத்துவது நல்லது என்கிறார், முரளி.
“ஒரு செல்போனில் அனைத்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளை வைத்துக்கொண்டு, மற்றொரு செல்போனில் முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தரவுகளை வைத்துக்கொள்வதுதான் இப்போதைக்கு இருக்கின்ற வழி. இதில், ஒரு செல்போனுடன் மற்றொரு செல்போனுக்கு தொடர்பு இல்லாத வகையில் இ-மெயில் உள்ளிட்டவற்றை பாராமரிக்க வேண்டும்,”என்றார் முரளி.
அதேபோல, நம்பத்தகுந்த மற்றும் அதிகாரப்பூர்வ சைபர் தாக்குதலைத் தடுக்கும் செயலிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறார் ராஜன். “பெரும்பாலும், நாம் பயன்படுத்தும் சமூக ஊடக செயலிகள் மற்றும் அவற்றில் உள்ள லின்க்.களின் மூலம் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, விபிஎன் பயன்படுத்தி ஆபாச வலைத்தளத்தை பயன்படுத்துவோரும், சைபர் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்த்தால், ஓரளவு பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க முடியும்,” என்றார் ராஜன்.
ஆனால், இருவருமே, 100% சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இல்லை என்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












