ஷமி, சிராஜ், பும்ரா: தட்டையான இந்திய ஆடுகளங்களில் மூவரும் 'பந்தை ஸ்விங் செய்யும்' ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி நியூஸ்
முகமது ஷமி: மூன்று போட்டிகள், 14 விக்கெட்டுகள். இரண்டு போட்டிகளில் 5-5 விக்கெட்டுகள். ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 45 விக்கெட்களுடன் 44 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானின் சாதனையை முறியடித்தார்.
ஜஸ்பிரித் பும்ரா: ஏழு போட்டிகள், 15 விக்கெட்டுகள் மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களின் சராசரி வெறும் 3.72 ஆக உள்ளது.
முகமது சிராஜ்: ஏழு போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவர்கள் தான் இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் மூன்று பேர். இது 2023 உலகக்கோப்பை போட்டியில் எதிரணிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. இவர்களுடைய வலிமை தற்போதைய வீரர்கள் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்படுகிறது.
தற்போது ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், இதுவரை வெற்றி பெற்று வரும் முகமது ஷமிக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதல் மாற்றமாக முகமது ஷமி பந்துவீச்சில் மூன்றாவது இடத்தில் வருகிறார்.
பந்துவீச்சு பலத்தில் போட்டிக்குப் போட்டி

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் பிபிசியிடம் பேசியபோது, "இதுவரை பும்ராவின் புல்லட் பந்துகளை ஒரு முனையிலிருந்தும், சிராஜின் வேகத்தை மறுமுனையிலிருந்தும் விளையாடிய பேட்ஸ்மேனை பற்றி யோசித்துப் பாருங்கள். இப்போது அவர் ஷமியை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறார்," என்றார்.
“கேப்டனாக இருக்க இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறந்த பேட்ஸ்மென்களை தொடர்ந்து மிகச் சிறந்த பயிற்சியிலேயே வைத்திருப்பேன். இது இந்தியாவின் வெற்றிகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
ஏற்கெனவே வலுவான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற இந்திய அணி தற்போது வேகப்பந்து வீச்சிலும் சிறந்து விளங்குகிறது எனக் கருதப்படும் நிலையில், பந்து வீச்சின் பலத்தில் போட்டிக்குப் போட்டியாக வெற்றி பெறுகிறதா என்ற விவாதம் கடந்த ஓராண்டாக வலுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வியாழன் அன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஷமி, பும்ரா, சிராஜ் மூவரும் இலங்கையின் இன்னிங்ஸை அழித்த விதம், இந்த வேகப்பந்து வீச்சு நிச்சயம் எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்ற வாதத்துக்கு வலு சேர்த்துள்ளது.
அதாவது, இந்த உலகக்கோப்பையைப் பற்றி மட்டும் பேசினால், இந்த மூவரும் இணைந்து ஏழு போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், “இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இந்த மூவரையும்விட சிறப்பாக இருந்ததாக நான் நினைக்கவில்லை,” என்று ஒப்புக்கொண்டார்.
மேலும், "எனது விளையாட்டு அனுபவத்தில், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருந்தனர். நிச்சயமாக ஜாகீர் கான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்.
ஆனால் தற்போது ஷமி, பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய மூவரும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். மேலும் இரண்டு நல்ல சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதரவுடன், இந்தியாவின் ஆல்ரவுண்ட். பந்துவீச்சு ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபிக்கிறது."

பட மூலாதாரம், ANI
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டிய வாசிம் அக்ரம்
இந்த இந்திய வேகப்பந்து வீச்சின் காரணமாக எதிரணி பேட்ஸ்மேன்கள் இரு நிலைகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
முதலாவதாக, இவர்கள் மூவரும் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். இரண்டாவதாக தட்டையான ஆடுகளங்களில்கூட, அவர்கள் மூவரும் விக்கெட்டின் இருபுறமும் ஸ்விங் செய்கிறார்கள்.
வரலாற்று ரீதியாக, இந்த இரண்டு விஷயங்களுக்கும் இந்திய பந்துவீச்சு ஆபத்தானதாகக் கருதப்படவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றிய பயம் மற்ற அணியினரிடையே தோன்றத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம், ஒரு தொலைக்காட்சியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அப்போது, "அவர்களது வெற்றியின் ரகசியம் என்னவென்றால், அவர்கள் பந்தின் மையப்பகுதி மீது பிடிப்பு வைத்திருப்பதுதான்," என்றார் அவர்.
பந்து குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று அழைக்கப்படும் அக்ரம் தொடர்ந்து பேசியபோது, “கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் இந்திய பந்துவீச்சாளர்களைத் தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற அணி பந்துவீச்சாளர்களால் ஏன் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை என்ற விவாதம் நடந்து வருகிறது.
பாகிஸ்தானில் பந்து சேதமடைந்திருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் அடிப்படையற்றது என்று நான் கருதுகிறேன். இந்த பந்துவீச்சாளர்கள் தங்கள் விளையாட்டில் கடினமாக உழைத்து, காலப்போக்கில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதே விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பேசுகையில், "மூன்று பந்துவீச்சாளர்களும் தங்கள் மணிக்கட்டு மற்றும் விரல்களைப் பயன்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மணிக்கட்டில் இருந்து பந்தை விடுவிக்கும்போது, அது முழுமையாக மெதுவான இயக்கத்தில் உள்ளது. பந்து மெதுவாகப் பயணிப்பதாகத் தோன்றினாலும், அதன் வேகம் மிகவும் கொடியதாக இருக்கிறது," எனத் தனது கருத்தை முன்வைத்தார்.
இந்திய அணிக்கு இதற்கு முன்பு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்று கூறுவது தவறு. தனது விளையாட்டு வாழ்க்கையின் உச்சத்தில், கபில் தேவ் பந்தை அபாரமாக ஸ்விங் செய்யும் வீரராகத் திகழ்ந்தார். ஜாகீர் கான், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம்.
இனி தற்காப்பு ஆட்டம் கிடையாது, தாக்குதல் ஆட்டம்தான்!

பட மூலாதாரம், Getty Images
இர்ஃபான் பதான், அஜித் அகர்கர், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஸ்ரீசாந்த், ஆஷிஷ் நெஹ்ரா, உமேஷ் யாதவ் தவிர, நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.
இந்திய அணியில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிக்க வந்துள்ளதால் இந்தப் போக்கு தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், இப்போது இந்திய வேகப்பந்து வீச்சு தற்காப்புத் தன்மையைக் காட்டவில்லை. அதாவது, எதிரணியை ரன் எடுக்கவிடாமல் தடுப்பது முதல் இலக்கு அல்ல. விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மூத்த கிரிக்கெட் ஆய்வாளர் ஆனந்த் வாசு பேசியபோது, "இந்திய ஆடுகளங்களில் விளையாடி மூவரும் சிறந்த முறையில் முன்னேறியிருந்தாலும், அவர்கள் இனி ஆடுகளத்தை மட்டுமே சார்ந்திருக்க மாட்டார்கள்," என்று ஒப்புக்கொள்கிறார்.
அவர் பேசுகையில், "இதுவரை இந்த மூன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்கள் பந்தை ஸ்டம்பில் சரியான இடத்தை நோக்கி வீசுவதால், பேட்ஸ்மேன்கள் அதைத் தங்கள் உடலுக்கு நெருக்கமாக அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிப்படையாக, அவுட் ஆகும் ஆபத்தும் அப்போதுதான் அதிகரிக்கிறது. அதனால், அவர்கள் அடிக்கடி தங்கள் விக்கெட்டுகளை இழக்கும் நிலையும் தொடர்கிறது," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












