அரையிறுதிக்கு முன்னேற 6.4 ஓவர்களில் 337 ரன் இலக்கு - பாகிஸ்தான் என்ன செய்தது தெரியுமா?

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்திற்கு எதிரான லீக் போட்டியில் 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் அரையிறுதி வாய்ப்பை இழந்து பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறும் அந்த அணியின் எண்ணமும் ஈடேறவில்லை.

பாகிஸ்தானை அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி அதன் அடுத்தக்கட்ட இலக்கான சாம்பியன்ஸ் டிராபித் தொடரில் விளையாட தகுதி பெறுவதை எட்டியுள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

இறுதிக்கட்டத்தில் உலகக்கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.

மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறின.

டாஸ் வென்று இங்கிலாந்து முதல் பேட்டிங்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 44ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மலான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் போராடி நீண்ட நீரம் போராடினர்.

கடைசியாக 13வது ஓவரில் டேவிட் மலான் ஆட்டமிழந்தது மூலம் ஜோடியை உடைத்தனர். 5 பவுண்டரியை விரட்டிய டேவிட் மலான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

அவருடன் மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். இதன்பின்னர் ஜோடி அமைத்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில், ரூட் 60 ரன்களுக்கு அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் ஹாரி புரூக், 17 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்களும், டேவிட் வில்லி 5 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 15 ரன்களும் எடுத்ததை தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ரஃப் 3 விக்கெட்டுகளும், அப்ரிடி, வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் 6.4 ஓவரில் 337 ரன் எடுத்தால் அரையிறுதி

தொடர்ந்து 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், 6.4 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்று இருந்தது. ஆனால், பாகிஸ்தான் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு நிதானமாக விளையாடத் தொடங்கியது. பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

எனினும் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்று பாகிஸ்தான் அணி போராடியது. 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், சிறப்பாக விளையாடிய நிலையில், 45 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிஸ்வான் - ஷகீல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில், 51 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் 2 பவுண்டரியுடன் 36 ரன்களும், ஷகீல் 37 பந்துகளில் 4 பவுணடரியுடன் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

கடைசிக் கட்டத்தில் அதிரடி

பாகிஸ்தான் அணியை முன்னணி பேட்ஸ்மேன்கள் கைவிட்ட நிலையில் கடைசிக் கட்டத்தில் ஹரிஸ் ரஃப், ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோர் சற்று கைகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய அவர்கள் ஓரளவு ரன் சேர்த்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கடந்து கவுரமான ஸ்கோரை எட்ட முடிந்தது.

அந்த அணி 44-வது ஓவரில் 244 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதனால், இங்கிலாந்து அணி 93 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் வெளியேற்றம்

இந்த வெற்றியால் எந்தவித சிக்கலும் இன்றி 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. பாகிஸ்தான் கடைசி அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இதன் காரணமாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)