பசுமை பட்டாசு என்பது என்ன? அதற்கும் மற்ற பட்டாசுகளுக்கும் என்ன வேறுபாடு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குத் தேவையான புத்தாடை, இனிப்புகள், வெடிகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
குழந்தைகள் புத்தாடைகளைத் தாண்டி வீட்டில் என்ன பட்டாசு வாங்கித் தர உள்ளார்கள், எந்த பட்டாசு வாங்க வேண்டுமெனத் தேர்வு செய்து வருகின்றனர்.
பல்வேறு பட்டாசுகள் சந்தையில் வந்துள்ளன. இதில் பாதுகாப்பான பட்டாசுகளை சந்தையில் இருந்து தேர்வு செய்து வாங்குவது எப்படி? சீனப் பட்டாசு, பசுமை பட்டாசு, நாட்டு பட்டாசுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
காற்றில் ஏற்படும் மாசு அளவைக் கட்டுப்படுத்த தீபாவளி தினத்தில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பட்டாசு மற்றும் சரவெடிகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலை 1 மணிநேரம், மாலையில் 1 மணிநேரம் என இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சரவெடிக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கி இருந்தது.
இதைப் பின்பற்றி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க அவற்றை சரியாகத் தேர்வு செய்வது அவசியம். அரசு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சந்தையில் அரசின் விதிமுறைகளை மீறித் தயார் செய்யப்படும் சீனப் பட்டாசுகளுடன் நாட்டுப் பட்டாசுகள் சிலவும் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றைப் பிரித்து அறிந்துகொள்வது எப்படி?
பசுமை பட்டாசு என்பது என்ன?

பட்டாசு வெடிக்கும்போது அதில் பச்சை நிறம் வந்தால் அது பசுமைப் பட்டாசு என்பது தவறான கருத்து. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு செய்தால் மட்டுமே பச்சை நிறம் வரும், அரசு அந்த வேதிப் பொருளுக்குத் தடை விதித்துள்ளது.
இதனால் பொட்டாசியம் நைட்ரேட் கலந்து நீலம், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும் வண்ண மத்தாப்பு, புஸ்வானம் வான வேடிக்கை வெடிகள் தயார் செய்யப்படுகின்றன.
பட்டாசுப் பெட்டியின் மீது "பசுமை பட்டாசு" என லோகோ இருக்கும். இதை மக்கள் தேர்வு செய்வதன் மூலம் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடலாம்.
சில பட்டாசு ஆலைகள் அரசின் அனுமதியை மீறி பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிகளைத் தயார் செய்கின்றனர்.
நாட்டுப் பட்டாசுகளால் என்ன ஆபத்து?
"பசுமைப் பட்டாசுகள் மற்ற பட்டாசுகளின் விலைக்குதான் விற்கப்படும். ஆனால், பசுமைப் பட்டாசில் இருந்து வெளியேறும் மாசின் அளவு 30% குறைவாக இருக்கும் என்று அரசு கூறியுள்ளது," என்கிறார் சிவகாசியில் 30 ஆண்டுகளாக பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் குணசேகரன் பிபிசி தமிழிடம் கூறினார்.
மேலும், “நாட்டுப் பட்டாசுகளில் பசுமைப் பட்டாசை விட அதிக அளவில் வெடிமருந்து கலக்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் வெடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதைவெடிப்பதால் அதிக மாசு ஏற்படும். அரசு அனுமதி வழங்கிய 126 டெசிபெலுக்கு மேல் ஒலி வரும். பசுமைப் பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் 10-20% குறைவான விலைக்குக் கிடைக்கும். இதைத் தயார் செய்யும்போது தான் பட்டாசு ஆலையில் வெடி விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன,” என்றார்.

பசுமை பட்டாசு உடல் நலனுக்கு கேடானதா?
பசுமைப் பட்டாசு சீனப் பட்டாசில் இருப்பதைவிட சில வேதிப்பொருட்கள் தவிர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் புகையில் நச்சுத்தன்மை குறையலாம். ஆனாலும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும்போதும் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், பாதரசம் போன்ற உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் வேதித்துகள்கள் வெளியாகின்றன.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட்டாசு காற்றின் தரத்தை இவ்வளவு மோசமாக்குமா?
ஆரோக்கியமான காற்று என்பது (Air Quality index) 0 முதல் 50 AQI வரை இருக்க வேண்டும். சாதாரண நாட்களில் தென் சென்னையில் இதன் நிலை 50 முதல் 60 AQI ஆக இருக்கும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜீயோ டாமின், “கடந்த ஆண்டு தீபாவளி நாளில் சென்னையின் காற்று தரம் 786 AQI எனப் பதிவாகி இருப்பதாக மாசுக் காட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது. இந்தக் காற்று மாசு அளவு என்பது ஒரு நபர் ஒரே நாளில் 31 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம்,” என்று எச்சரிக்கிறார்.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காற்றுத் தர குறியீடு சென்னையில் சென்ற ஆண்டில் பார்க்கும்போது அதிகபட்சமாக சவுகார் பேட்டையில் 786 AQI, நுங்கம்பாக்கத்தில் 545 AQI பதிவானது.
குறிப்பாக, சென்னையில் இரவு 11 முதல் 12 மணி வரை முன் எப்போதும் இல்லாத அளவாக நுண்துகள் அளவு 950 ug/ m3 ஆக பதிவானது.
“சீனப் பட்டாசு, பசுமைப் பட்டாசு என இரண்டு பட்டாசுகளுமே உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். எனவே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவதை மக்கள் தவிர்ப்பதே சிறந்தது,” என ஜீயோ டாமின் கூறுகிறார்.

சீனப் பட்டாசுகளை நாட்டு வெடிகளில் இருந்து வேறுபடுத்தி அறிவது எப்படி?
தடை செய்யப்பட்ட சீனப்பட்டாசுகளில் உள்ள வேதிப்பொருட்களால் உயிரிழப்பே கூட நிகழலாம் என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம்(டான்பாமா) தலைவர் சோனி கணேசன்.
பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, "சீனப் பட்டாசுகள் வெடித்தால் அழகாக இருக்கலாம். ஆனால் அதில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சில்வர் பல்மனெட் போன்ற தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இது சிறு அழுத்தம் ஏற்பட்டாலே வெடிக்கும். அதிலிருந்து வெளியேற்றும் புகையை சுவாசித்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு, கண் எரிச்சல், சில நேரங்களில் உயிரிழப்பே கூட நேரிடலாம்," என்று தெரிவித்தார்.
அவற்றை எப்படி நாட்டுப் பட்டாசுகளில் இருந்து வேறுபடுத்தி அறிவது எனக் கேட்டபோது, "இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் வட மாநிலங்களில் அதிகளவு கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை பர்மா பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
பட்டாசுப் பெட்டியின் பின் பகுதியில் Made in China என்றே குறிப்பிடப்பட்டு இருக்கும்.
தமிழ்நாடு அரசு, பட்டாசு சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் சீன பட்டாசுகள் பெருமளவு விற்பனையில் இல்லை," என்று தெரிவித்தார்.
பசுமைப் பட்டாசு வெடித்தால் காற்று மாசுபடுவது குறையுமா?
தீபாவளி, போகி போன்ற பண்டிகை நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஊடகத்தின் மூலமும், துண்டு பிரசுரம் வழங்கியும் காற்று மாசைத் தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் தாமாக முன் வந்து அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பசுமைப் பட்டாசை வாங்கி வெடித்தால் காற்றில் ஏற்படும் மாசின் அளவைக் குறைக்கலாம்.
இந்த ஆண்டு காற்று மாசு குறையுமா?

இந்த ஆண்டு அதிகளவு பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. காற்று மாசு குறைகிறதா எனக் கண்டறிய தமிழகம் முழுவதும் அதன் அளவுகள் கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், “பசுமைப் பட்டாசுகளால் காற்று மாசு குறைகிறதா என்பதை இந்த ஆண்டு அளவீடு செய்து பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னும், பின்னும் காற்று மாசு அளவு பரிசோதனை தமிழ்நாடு முழுவதிலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் எடுக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சென்ற ஆண்டின் காற்று மாசு அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்து காற்று மாசு எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்,” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












