மகாராஷ்டிராவில் 2 எம்.எல்.ஏ. வீடுகள் எரிப்பு - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தால் பா.ஜ.க. பலன் பெறுமா?

பட மூலாதாரம், ANI
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி நடந்து வரும் போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இரண்டு எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தாக்கப்பட்டன , ஒரு பேருந்து தீக்கிரையாக்கப்பட்டது. இதுதவிர அரசியல் கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் இந்தச் சம்பவங்கள் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்தப் போராட்டம் எதற்காக நடக்கிறது? அரசியல் ரீதியாக இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இதுவரை நடந்தது என்ன?
மராத்தா இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்களில் வன்முறை வெடித்ததையடுத்து, மகாராஷ்டிராவின் தாராஷிவ் மற்றும் பீட் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை (நவம்பர் 1), போராட்டக்காரர்கள் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கினர்.
பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீடு போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இது தவிர, மற்றொரு என்.சி.பி எம்.எல்.ஏ.வின் வீடும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பீட் காவல் கண்காணிப்பாளர் நந்த்குமார் தாக்கூர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார் .
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 49 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள பால்கியில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து தாராஷிவ் மாவட்டம் துரோரி கிராமத்தில் எரிக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளும் ஓட்டுநரும் இறக்கிவிட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்திற்கான பேருந்து சேவையை கர்நாடகா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.பி ஹேமந்த் பாட்டீல் அக்டோபர் 30-ஆம் தேதி ராஜினாமா செய்தார், பா.ஜ.க எம்.எல்.ஏ லட்சுமண பவார் பீட் பகுதியின் கெவ்ராய் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார்.
திங்கள்கிழமை, மராத்தா இடஒதுக்கீடுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் நடைபெற்றது. இதற்கிடையில், மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக மகாவிகாஸ் அகாடியின் பிரதிநிதிகள் திங்கள்கிழமை ஆளுநர் ரமேஷ் பெய்ன்ஸை சந்தித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன?
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மனோஜ் ஜரங்கே மற்றும் பாட்டீலிடம் வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். குன்பி ஜாதிக்கு புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மறுபுறம், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) முதல் ஜாராங்கே-பாட்டீல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) கீழ் வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற அனைத்து மராட்டியர்களையும் குன்பி மக்களாக (மராத்தாவின் துணை ஜாதி) என்று அரசாங்கம் கருத வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இதற்கிடையில், செவ்வாயன்று (அக்டோபர் 31), மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். மகாராஷ்டிராவின் 48 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தைரியம் காட்ட வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், வியாழன் (நவம்பர் 2) மாலை மகாராஷ்டிர அரசின் பிரதிநிதிகள் உண்ணாவிரதம் இருந்துவந்த மனோஜ் ஜரங்கே-பாட்டீலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனத் தொடர்ந்து, அவர் மராத்தா இடஒதுக்கீட்டிற்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதிவரை காலக்கெடு கொடுக்க ஒப்புக்கொண்டார். தனது உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
ஆதரவு தரப்பும் எதிர்தரப்பும் சொல்வது என்ன?
“இது உங்களுக்கு முதலும் கடைசியுமான வாய்ப்பு. இனி இது கிடைக்காது. அதனால் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவில் உள்ள ஒட்டுமொத்த மராத்தா சமூகத்தினருக்கும் குன்பி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. இப்போதைக்கு கட்சிகளையும் குழுக்களையும் கைவிட்டு ஒன்றிணைவோம்.”
இது, மகாராஷ்டிரா முழுவதும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ள மனோஜ் ஜரங்கே-பாட்டீல் தனது கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள்.
அரசுக்கு 40 நாட்கள் கெடு விதித்துள்ள அவர், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்கும் செயல்முறையை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கான காலக்கெடுவை டிசம்பர் 24 வரை அரசு நீட்டித்துள்ளது.
இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை பின்வாங்க போவதில்லை என்று ஜாரங்கே-பாட்டீல் தனது கூட்டங்களில் கூறியிருப்பது, வரும் காலங்களில் மராத்தா சமூகத்தின் இயக்கம் மேலும் தீவிரமடையும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், குன்பி சான்றிதழ் வழங்குவதை, அதாவது ஓ.பி.சி இட ஒதுக்கீடு மூலம் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதை, தேசிய OBC கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு மாநிலத்தில் உள்ள ஓ.பி.சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, மாநிலத்தின் மராத்தா மற்றும் ஓ.பி.சி சமூகங்கள் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஓ.பி.சி சமூகத்தினர் ஏன் எதிர்க்கின்றனர்?
மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்குவதற்கு ஓ.பி.சி சமூகம் ஏன் எதிர்க்கிறது?
மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்குப் பிறகு, மனோஜ் ஜரங்கே-பாட்டீல் உட்பட பலர் மராத்தா சமூகம் அடிப்படையில் குன்பி சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வருகின்றனர்.
அதாவது, மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்கினால், இடஒதுக்கீடு கிடைத்தால், ஓ.பி.சி ஒதுக்கீட்டில் பலன் கிடைக்கும்.
தற்போது மாநிலத்தில் ஓ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் 19% இடஒதுக்கீடு உள்ளது. இதில் மராத்தா சமூகத்தினரும் இடம் பெற்றால், புதிதாகப் பங்கேற்பவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் என்று ஓ.பி.சி சமூக அமைப்புகள் கருதுகின்றன. அவர்கள் தங்கள் போராட்டம் மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல என்றும், மாறாக ஓ.பி.சி இடஒதுக்கீட்டின் கீழ் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தே என்றும் கூறுகிறது.

பட மூலாதாரம், ANI
அரசியல் ரீதியாக யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களும் நெருங்கி வருகின்றன. இந்த 'மராத்தா Vs ஓ.பி.சி' விவாதத்தால் அரசியல் ரீதியாக யார் பயன்பெற முடியும், என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசிய அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பலஷிகர், உண்மையில் இது அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். “மகாராஷ்டிராவில் மராத்தா வாக்குகள் அதிகம் என்று கூறப்பட்டாலும், ஓ.பி.சி வாக்குகளும் சம அளவில் உள்ளன. இது அனைத்துக் கட்சிகளையும் பாதிக்கும்,” என்கிறார்.
"மராத்தா சமூகத்திற்கும் ஓ.பி.சி சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் சிறிய கட்சிகள் அல்லது உள்ளூர் அளவில் கிளர்ச்சிகளை உருவாக்க வழிவகுக்கும், இது வாக்குகளைப் பிரிக்க வழிவகுக்கும்," என்று அவர் கூறுகிறார்.
தற்போதைய நிலவரத்தால் அனைத்து முக்கிய கட்சிகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். "அரசியல் ஆதரவுகளுக்கு அப்பால், மராத்தா சமூகத்தின் கோபத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்கிறார்.
"ஓ.பி.சி.க்கு எதிராக மராத்தா போராட்டம் நடந்தால், எந்தக் கட்சியும் தன்னை ஓ.பி.சி சமூகத்தின் கட்சியாக மட்டுமே நிலைநிறுத்த முயலாது. கடந்த காலங்களில் பா.ஜ.க தன்னை ஓ.பி.சி. சமூகத்தின் கட்சியாக நிலைநிறுத்த முயற்சித்தது. ஆனால் பா.ஜ.க.வும் மராத்தா சமூகத்தைப் பகைத்துக்கொண்டு தன்னை ஓ.பி.சி கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளும் அபாயகரமான முடிவை எடுக்க முடியாது,” என்கிறார் பலஷிகர்.
அதே சமயம் மாநிலத்தில் இரு பெரிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவால் தற்போது இரண்டும் நான்கு கட்சிகளாக மாறியுள்ளன. இதனால், மாநிலத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி வலுத்துள்ளது. தேர்தல் வந்தவுடன் இந்தப் போட்டி மேலும் அதிகரிக்கும், என்கிறார்.
இந்நிலையில், “ஓ.பி.சி வாக்குகளை விட பா.ஜ.க மராத்தா வாக்குகளை இழக்கும் அபாயத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஓ.பி.சி வாக்குகளைப் பெறுவதில் பா.ஜ.க கவனம் செலுத்தியது உண்மைதான். ஆனால் மகாராஷ்டிராவில் மராத்தா வாக்குகளை ஒதுக்கிவிட்டு ஓ.பி.சி வாக்குகளைப் பெறுவதால் எந்தப் பலனும் கிடைக்காது," என்கிறார் பலஷிகர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பிரச்னையால் பா.ஜ.க பலன் அடையுமா?
கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், அரசியல் ஆய்வாளருமான பிரகாஷ் பவார், மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைக் குறித்துப் பேசுகையில், இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க அதிக பலன் அடையும் என்று தாம் நினைப்பதாகக் கூறினார். “ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு வரை, சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் சிக்கலில் இருப்பதாக மக்கள் உணர்ந்தார்கள். இப்போது இந்தக் கதை ஓரங்கட்டப்பட்டு, மராத்தா மற்றும் ஓ.பி.சி சமூகத்திற்கு இடையிலான போட்டி என்ற புதிய போக்கு உருவாகி வருவதாகத் தெரிகிறது,” என்கிறார் அவர்.
“இதனால் மக்கள் கருத்து ஒரு புதிய வடிவத்தை எடுத்துள்ளது. இந்த வகையில் பா.ஜ.க பலன் அடையலாம் என்று நினைக்கிறேண்,” என்கிறார். ஆனால், "இது ஒரு சாத்தியம் தான், இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது," என்றும் கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் கதம், வாக்கு அரசியலைப் பற்றிப் பேசினால், கடந்த தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் முக்கிய வாக்காளர்கள் ஓ.பி.சி.க்கள் தான், என்கிறார்.
அதனால், “அவர்கள் ஓ.பி.சி சமூகத்தின் இடஒதுக்கீட்டை நீட்டித்து மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார்
மேலும், பிரசாந்த் கதம், "ஜாரங்கே-பாட்டீல் இயக்கத்தின் மீது தடியடி நடத்துவதற்கு முன்பு, இந்த இயக்கம் பற்றி யாரும் பேசவில்லை. நீதிமன்றத்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பிறகும், அத்தகைய கோபமான எதிர்வினை இல்லை. மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் திடீரென்று ஜாரங்கேவின் இயக்கத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது இந்த விவகாரத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது,” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












