ரச்சின் ரவீந்திரா - 3 சதங்களை விளாசி அமர்க்களப்படுத்தும் இந்திய வம்சாவளி நியூசிலாந்து வீரர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடப்பு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா 3 சதங்களை அடித்து விளாசியுள்ளார். உலகக்கோப்பையில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய அவர், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் தனது சதங்களின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா உலகக்கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா(123 நாட்-அவுட்), டேவான் கான்வே(152 நாட்-அவுட்) இருவரும் அறிமுக உலகக்கோப்பைப் போட்டியில் சதம் அடித்த 15 மற்றும் 16வது பேட்டர்களாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
அதிலும் இளம் வயதிலேயே உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் 82 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்த முதல் நியூசிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார்.
சச்சின்-திராவிட் ரசிகர்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியை ஒரு ரசிகராக வந்து கண்டு ரசித்தவர் ரச்சின் ரவீந்திரா. இந்த முறை உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று முதல் சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் ரவீந்திரா.
ரவீந்திராவின் பெயருக்கு முன்னால் இருக்கும் ரச்சின் என்ற பெயர் சமூக ஊடகங்களில் டிரண்டானது. அதாவது, ராகுல் திராவிட்டின் முதல் எழுத்தான “ரா”, சச்சின் டெண்டுல்கரின் “சின்” ஆகிய எழுத்துகளை ஒன்றினைத்து ரச்சின் என்று ரவீந்திரா தன் பெயருக்கு முன்னால் சூட்டியுள்ளார்.
ரவீந்திராவின் தந்தை ராகுல் திராவிட் மற்றும் சச்சின் மீது அதிகளவு அன்பு, அபிமானம் கொண்டவர் என்பதால் இரு வீரர்களின் பெயரையும் ஒன்றாக இணைத்து தனது மகனுக்கு பெயராகச் சூட்டினார்.
பெங்களூரு பூர்வீகம்
ரச்சின் ரவீந்திரா கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக இருந்தவர். அவர் 1990களில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ரச்சின் ரவீந்திராவின் தாத்தா, பெங்களூருவில் புகழ்பெற்ற பேராசிரியர். பெங்களூருவில் உள்ள விஜயா கல்லூரியில் பயாலஜி பிரிவில் மூத்த பேராசிரியராக இருந்த டாக்டர் டி.ஏ. பாலகிருஷ்ணா அடிகாவின் பேரன்தான் ரச்சின் ரவீந்திரா.
தந்தையே பயிற்சியாளர்

பட மூலாதாரம், Getty Images
ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தனது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜவஹல் ஸ்ரீநாத்தும், ரவி கிருஷ்ணமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். ஸ்ரீநாத்தை செல்லமாக “ஸ்ரீமாமா” என்றுதான் ரவீந்திரா அழைப்பார்.
நியூசிலாந்துக்கு, ரவி கிருஷ்ணமூர்த்தி குடிபெயர்ந்த பிறகு, வெலிங்டனில் “ஹட் ஹாக்ஸ்” என்ற கிரிக்கெட் கிளப்பை ரவி கிருஷ்ணமூர்த்தி தொடங்கினார்.
இந்த கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெறும் வீரர்களுக்கு கள அனுபவம் கிடைக்க பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளைக் காண இந்த கிளப் சார்பில் அழைத்துச் செல்லப்படும். இந்த கிளப் மூலம்க ரச்சின் ரவீந்திராவுக்கு சிறுவயது முதல் அவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தியே பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அன்று ரசிகர் இன்று வீரர்

பட மூலாதாரம், Getty Images
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தைக் காண ரசிகராக இந்த கிளப் சார்பில் ரவீந்திரா லண்டன் சென்றிருந்தார். இப்போது உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி வீரராக ரவீந்திரா விளையாடியுள்ளார்.
ரவீந்திராவின் குடும்ப உறுப்பினர்கள் பெங்களூருவின் புறநகரான ஜெயாநகரில் வசித்து வருகிறார்கள். 2011ஆம் ஆண்டிலிருந்து ரவீந்திரா தனது விடுமுறைக் காலங்களில் தனது உறவினர்களைப் பார்க்க பெங்களூருவுக்கு வந்துவிடுவார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் சீனியர் பிரிவில் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியில் ஆடிய ரவீந்திராவுக்கு முதல் ஆட்டமே டக்-அவுட்டில் முடிந்தது, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
ஆனால், இரண்டாவது போட்டியில் ரவீந்திரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 6 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். மேலும், 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கான்வே-ரவீந்திரா நண்பர்கள்

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த டேவான் கான்வேவும், ரச்சின் ரவீந்திராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரும் ஒரே உள்நாட்டு அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள்.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் ஒன்றாக தேநீர் கடைக்குச் செல்வது, ஹோட்டல் செல்வது என்று நெருக்கமாக இருந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இருவரின் குடும்பத்தினர் அளவுக்கு நட்பு வளர்ந்தது, இருதரப்பு வீடுகளுக்கும் சென்று உணவு சாப்பிடும் அளவுக்கு ரவீந்திராவும், கான்வேவும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.
கான்வேவும், ரவீந்திராவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால்தான், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடிக்க முடிந்தது.
குறைந்த வயதில் சாதித்த ரவீந்திரா

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வருவதற்கு முன் ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்தின் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் முதல்தரப்பு போட்டிகள் எனப் பல்வேறு தரப்புநிலைகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி நடந்தது. அதில் நியூசிலாந்து தரப்பில் மிகக் குறைந்த வயதான 16 வயதில் இடம் பெற்ற முதல் வீரராக ரச்சின் ரவீந்திரா இருந்துள்ளார்.
மேலும், 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரிலும் ரவீந்திரா விளையாடியுள்ளார்.
முதல் தரப்போட்டி
கடந்த 2018ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டிதான் ரவீந்திராவின் முதல்தரப் போட்டி அறிமுகம்.
இதுவரை 46 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ரவீந்திரா 2,753 ரன்கள் குவித்து, 38.77 சராசரி வைத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். அதோடு பந்துவீச்சில் 54 விக்கெட்டுகளையும் ரவீந்திரா வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்
டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, 2021ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி கான்பூரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திரா அறிமுகமானார்.
ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று ஆக்லாந்தில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் அறிமுகமானார். 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, தனது முதல் சதத்தை இங்கிலாந்துக்கு எதிராக ரவீந்திரா பதிவு செய்துள்ளார்.
அறிமுக போட்டியிலேயே அதிவேக சதம்

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணியின் 283 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கான்வே, ரவிந்திரா ஜோடி பிரமாதமான பார்ட்னர்ஷிப்பை வழங்கியுள்ளனர்.
இந்தப் போட்டியில் 23 வயது இளம் பேட்டரான ரவிந்திரா உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமாகியுள்ளார். தனது அறிமுகப் போட்டியிலேயே ரவீந்திரா 82 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார்.
உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் அடிக்கும் அதிவேக சதம் இது. கான்வே 83 பந்துகளில் சதம் அடித்த நிலையில் ரவீந்திரா 82 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரவீந்திரா பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த விராட் கோலி இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த கான்வே-ரவீந்திரா கூட்டணி
உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை கான்வே, ரவீந்திரா கூட்டணி பெற்றது.
இருவரும் சேர்ந்து 273 ரன்கள் சேர்த்தனர். கடந்த 1996ஆம் ஆண்டு லீ ஜெர்மன், கிறிஸ் ஹாரிஸ் ஜோடி சேர்த்த ரன்களைவிட அதிகபட்சமாக கான்வே, ரவீந்திரா ஜோடி சேர்த்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












