உலகக் கோப்பை கிரிக்கெட் - ENG vs NZ: அறிமுக போட்டியிலேயே அதிவேக சதம் அடித்த கான்வே, ரவீந்திரா

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் தொடக்க நிகழ்வில் இந்தியாவின் மூத்த நட்சத்திரங்களுள் ஒருவரான டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றியோடு தொடங்கிய நியூசிலாந்து

உலகக்கோப்பைப் போட்டியில் ஆகமதாபாத்தில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

கடந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வென்று கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது நியூசிலாந்து.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 283 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவான் கான்வே 152 ரன்களிலும்(121 பந்துகள், 3 சிக்ஸர், 19பவுண்டரிகள்), ரச்சின் ரவீந்திரா 123 ரன்களிலும்(96பந்துகள், 5சிக்ஸர்,11 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

அறிமுக போட்டியிலேயே அதிவேக சதம்

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பைத் தொடரில் 2வது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை கான்வே, ரவீந்திரா கூட்டணி பெற்றது. இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு லீ ஜெர்மன், கிறிஸ் ஹாரிஸ் ஜோடி சேர்த்த ஸ்கோரைவிட அதிகபட்சமாக சேர்த்து கான்வே, ரவீந்திரா ஜோடி ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணியின் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கான்வே, ரவீந்திரா ஜோடி பிரமாதமான பார்ட்னர்ஷிப்பை வழங்கியுள்ளனர். 23 வயது இளம் பேட்டரான ரவீந்திரா உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமாகியுள்ளார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே ரவீந்திரா 82 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் அடிக்கும் அதிவேக சதம் இது.

கான்வே 83 பந்துகளில் சதம் அடித்தநிலையில் ரவிந்திரா 82 பந்துகளில் சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை கான்வே, ரவீந்திரா இருவரும் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி இதற்கு முன்பு இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 பந்துகளில் அரைசதம் அடித்த ரச்சின் ரவிந்திரா

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம், Getty Images

290 ரன்களை சேஸிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணி அற்புதமான தொடக்கத்தை அளித்தது. ஒன்டவுனில் இறங்கிய இளம் பேட்டர் ரச்சின் ரவிந்திரா, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை வெளுத்துவாங்கி, சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.

மொயின் அலி ஓவரில் சிக்ஸர் அடித்து, ரவிந்திரா 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசரவைத்தார். ரவிந்திராவின் அரைசதத்தில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக 290 ரன்களை சேஸிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணி அற்புதமான தொடக்கத்தை அளித்தது. முதல்பவர்ப்ளேவான 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப்பின் ஒருநாள் போட்டிகளில், நியூசிலாந்து அணி முதல்10 ஓவர்களில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் பிப்ரவரி 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் சேர்த்ததுதான் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இங்கிலாந்து அணியில் 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள்

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல்முறையாக, இங்கிலாந்து அணியின் 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 10வது விக்கெட்டுக்கு அதில் ரஷித் மற்றும் மார்க் வுட் கூட்டணி 30 ரன்கள் சேர்த்ததுதான் 2016ஆம் ஆண்டுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோர்.

இங்கிலாந்து அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததால்தான் 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஜோ ரூட் ஆட்டம்தான். 86 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்லருடன் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

மைதானம்

பட மூலாதாரம், Getty Images

இருவரும் ஆடிய வேகத்தைப் பார்த்தபோது, 350 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேர்ஸ்டோ, ப்ரூக், மொயின் அலி ஆகியோர் அடித்த தவறான ஷாட்களால் விக்கெட்டை இழந்தது போன்ற தவறுகளால் ரன்சேர்க்க முடியவில்லை.

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்ரி அற்புதமான பந்துவீச்சை தொடக்கத்தில் இருந்து கடைசி வரை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சான்ட்னர், பிலிப்ஸ் தலா 2விக்கெட்டுகளை சாய்த்தனர்.

நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர்: யார் இந்த ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ரவீந்திராவின் பெயருக்கு முன்னால் இருக்கும் ரச்சின் என்ற பெயர் சமூக ஊடகத்தில் டிரண்டானது. அதாவது, ராகுல் திராவிட்டின் பெயரில் வரும் “ரா”, சச்சின் டெண்டுல்கரின் “சின்” ஆகிய எழுத்துகளை ஒன்றினைத்து ரச்சின் என்று ரவீந்திரா தன் பெயருக்கு முன்பாக சூட்டியுள்ளார். கிரிக்கெட்டின் மீதான தீராக் காதல், இந்திய ஜாம்பவான்களான சச்சின், திராவிட் ஆகியோர் மீதான அபிமானம் ஆகியவற்றால் இந்தப் பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.

ரச்சின் ரவீந்திரா கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி. பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக இருந்த ரவி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 1990களில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.

ரவி கிருஷ்ணமூர்த்தி தனது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்தில் “ஹட் ஹாக்ஸ்” என்ற கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியவர் ரவி கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, ஐசிசி நடுவராக இருக்கும், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் கிரிக்கெட் விளையாடியவர். ஸ்ரீநாத்தை செல்லமாக “ஸ்ரீமாமா” என்றுதான் ரவீந்திரா அழைப்பார்.

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் சீனியர் பிரிவில் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியில் ஆடிய ரவீந்திராவுக்கு முதல் ஆட்டமே டக்-அவுட்டில் முடிந்தது, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஆனால், இரண்டாவது போட்டியில் ரவீந்திரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 6 டி20 போட்டிகளில் ரவீந்திரா விளையாடியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை ரவீந்திரா கைப்பற்றியுள்ளார்.

ஆமதாபாத் மைதான இருக்கைகள் காலியாக இருப்பது ஏன்?

உலகக் கோப்பை தொடரின் உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், ஆமதாபாத் நரேந்திர மோதி அரங்கின் இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

வார நாளில் போட்டி வந்ததும், இந்தியா போட்டியில் ஆடாததும், ஒரு நாள் போட்டிக்கான ஆதரவு குறைந்திருப்பதும் காரணமாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

உலகக்கோப்பை 2023

13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.

2019 இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

2019-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அனல் பறந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.

ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி, சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இப்போது எல்லோரது கண்முன்னாலும் வந்து போவது அந்த சூப்பர் ஓவர்தான்.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன.

முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.

அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர்த்ரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இரண்டு பவுண்டரிகளை சேர்த்து 15 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.

அடுத்து நியூசிலாந்து அணியின் சார்பாக கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் சார்பாக ஆர்ச்சர் பந்து வீசினார். சூப்பர் ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்திருந்தது. எனவே சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.

இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

டையில் முடிந்த சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும், நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தன. இதன் மூலம் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.

2023 உலகக் கோப்பை

13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)