திருப்பத்தூர்: ஆந்திரா, கர்நாடகா கள்ளச்சாராயம் உள்ளே வருவது எப்படி? குமுறும் பெண்கள்

- எழுதியவர், சுஜாதா நடராஜன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆந்திர மாநிலத்திலிருந்து குப்பம், நாட்றம்பள்ளி, வெலத்திகமணிபெண்ட வழியாகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை் - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் மலைப்பகுதிகளின் வழியாகவும் வாகனங்கள் மூலம் மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம் திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதிகளுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பல குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் தாலுகா இருணாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஏழு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த மூன்று மாத காலமாக அப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் மலையால் சூழப்பட்ட பகுதிகளை கொண்டது என்பதால், மலைப்பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகள் பல வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இருணாப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஏழு கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக பெண் ஒருவர் ஆட்களை வைத்து கள்ளச்சாராயம் எடுத்து வந்து கிராமப்புறங்களில் விற்பனை செய்து வருவதாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், இருணாப்பட்டு கிராமத்தில் சுகுணா என்ற பெண்மணி ஜலகனூரில் இருந்து கள்ளச்சாராயம் எடுத்து வந்து கடந்த மூன்று மாதங்களாக இருணாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்களை வைத்து தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக புகார் அளித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் எனவும் அந்தப் பெண்கள் கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக, கந்திலி காவல் ஆய்வாளர் சுரேஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, கள்ளச்சாராயம் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சுகுணா என்ற பெண்ணை கைது செய்துள்ளதாகவும் அப்பகுதி முழுவதும் தனிப்படை அமைத்துத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை காரணமாக தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிபிசி தமிழிடம் பேசிய பெண்கள் பலரும் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், bbc
கள்ளச்சாராயத்தை ஒழிக்கப் போராடும் பெண்கள்
அப்பகுதியை சேர்ந்த சௌந்தரி என்பவர் பேசுகையில், “கள்ளச்சாராயத்தால் ஒருமாத காலமாக எங்கள் வீட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், என் மகனுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எங்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் தான் வேலை இருக்கிறது. 200 ரூபாயை வைத்துக்கொண்டு நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். அதிலும் அவர்கள் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றுவிடுகின்றனர். இதனை தட்டிக்கேட்டால் எங்கள் வீட்டில் தாக்குதலும் நடத்துகின்றனர்” என தெரிவித்தார்.

பொருளாதார பாதிப்புகள்
மஞ்சு என்பவர் பேசுகையில், ”கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று பலமுறை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜலகனூரில் இருந்து எடுத்து வந்து இருணாப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடன் வாங்கித்தான் அன்றாட செலவுகளையே எதிர்கொள்ளும் நிலை தான் எங்கள் வீடுகளில் உள்ளது. பொருளாதார ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிசிலாப்பட்டு காவல் நிலையத்தின் பின்புறம் கூட கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது,” என தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த மே மாதம் கள்ளச்சாராயம் அருந்தியதால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த மே 12 முதல் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படும் பலர் உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதில், கள்ளச்சாராயம் அருந்தியதால் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில், திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், “ஆங்காங்கே மலைப்பகுதிகளில் சாராயம் தயாரிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் தமிழகத்திற்குள் வருவதை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

“போதிய விழிப்புணர்வு இல்லை”
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”வேலைவாய்ப்பின்மை, பொருளாதார காரணங்கள், போதுமான விழிப்புணர்வு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் வகைகளில் அரசு தரப்பில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற அவலங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம். மேலும் கள்ளச்சாராயம் விற்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்பதுடன், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெற்றால் பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என பிபிசியிடம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












