மேக்ஸ்வெல் நடக்கவே முடியாத நிலையிலும் பை-ரன்னர் வைத்து கொள்ளாதது ஏன்?

மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் குமார்
    • பதவி, பிபிசி நிருபர்

அற்புதங்கள் அரிதானவை. வலிமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுத் துறையில் அற்புதங்கள் ஆகக் குறைவு.

ஆனால் அதிசயங்களை நம்புபவர்கள், மும்பை வான்கடே மைதானத்தில் க்ளென் மேக்ஸ்வெல் வடிவத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஓர் அற்புதத்தைக் கண்டார்கள்.

கிளென் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ், ஒரு வீரர் தனது தைரியத்தால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியது.

போட்டியை முடித்த நான்கு பந்துகளில், மேக்ஸ்வெல் இரண்டு சிக்ஸர்கள், பின்னர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

அவர் காலில் நிற்கக்கூட முடியாத நிலையில் இந்த ஷாட்களை அடித்தார்.

விளையாடும் போது அவர் ஓடக்கூடிய நிலையிலும் இல்லை, அவரது கால்களில் எந்த அசைவும் இல்லை, ஆனாலும் அவர் கிரீஸில் நின்று இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார். இதில் கடைசி 100 ரன்களைக் கிட்டத்தட்ட ஓடாமல், வலியுடன் போராடி முடித்தார்.

மேக்ஸ்வெல் நடக்கவே முடியாத நிலையிலும் பை-ரன்னர் வைத்துக் கொள்ளாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தக் கட்டுரையில் அதற்கான விடையும் இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அவரது இடது காலில் ஏற்பட்ட பிரச்சனை முதுகுப் பிரச்சனையாக மாறியது. மேக்ஸ்வெல் பலமுறை மைதானத்தில் படுத்துக் கொண்டார்

‘மேட் மேக்ஸியின்’ அசாதாரண ஆட்டம்

மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின், சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளைத் தாக்கியது மட்டுமல்ல, தனது வலி மற்றும் அசௌகரியத்தின் தருணங்களையும் எதிர்த்து வென்றார்.

அவர் தனது பிரசித்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் உலகில் ‘மேட் மாக்ஸி’ (Mad Maxi) என்று அழைக்கப்படும் கிளென் மேக்ஸ்வெல், தான் ஒரு மேதை மட்டுமல்ல, அசாதாரணமான திறமையும் கொண்டவர் என்பதை நிரூபித்தார்.

சொல்லப்போனால், மிக இளம் வயதிலேயே தனது திறமையின் அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கலக்கிய கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் அதே வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் அவ்வப்போது தனக்குள்ளிருந்த தீப்பொறியை வெளிக்காட்டினார். இதன் காரணமாக அவர் பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் இருந்தார்.

அவரிடமிருந்து கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்த மாதிரியான பேட்டிங்கை, அவர் நேற்று வான்கடே மைதானத்தில், ஒரு அழகான கலைப்படைப்பினை உருவாக்குவதுபோல அனைத்து வண்ணங்களையும் கொண்டு படைத்தார் என்றே சொல்லலாம்.

ஒரு புல், ஒரு ஃபிளிக் அல்லது ரிவர்ஸ் ஃபிளிக் — எதுவாக இருந்தாலும், மேக்ஸ்வெல் தனது ஃபார்மில் இருக்கும்போது என்ன செய்ய முடியும் என்பதை உலகம் நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும்.

201 ரன்களில் ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் என்பது, உலக கிரிக்கெட்டில் ஆறாவது அல்லது அதற்கும் கீழே உள்ள ரேங்கில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்

மேக்ஸ்வெல் செய்த சாதனை என்ன?

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் செய்யாமல் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறார் க்ளென் மேக்ஸ்வெல்.

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்கள் அனைத்தும் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே அடித்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறை.

இரண்டு பந்துகளில் அதிவேக இரட்டை சதம் என்ற சாதனையை அவர் தவறவிட்டார், இஷான் கிஷன் 126 பந்துகளில் இந்த சாதனையை எட்டினார், மேக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் மேக்ஸ்வெல் மிகவும் பாதகமான சூழ்நிலையில் விளையாடிய போது இந்த இரட்டை சதத்தை அடித்தார்.

இது மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தபோது, ஒன்பதாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அஸ்மத்துல்லா ஏற்கெனவே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டைக் காப்பாற்ற மேக்ஸ்வெல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, சிறிது நேரத்தில் தப்பினார். பந்து அவரது மட்டையின் வெளிப்புற விளிம்பைத் தொட்டு விக்கெட்டுக்கு பின்னால் சென்றது. ஆனால் கீப்பரின் கையுறைகளை அடையவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அவர் காலில் நிற்கக்கூட முடியாத நிலையில் இந்த ஷாட்களை அடித்தார்

மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ் எப்படியிருந்தது?

ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது மேக்ஸ்வெல் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

அவர் விக்கெட்டில் நிலைத்திருக்கும் போது, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஏழு விக்கெட்டுக்கு 92 ரன்கள் ஆக இருந்தது.

மைதானம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பலத்த ஆதரவு இருந்ததால் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்றும் தோன்றியது.

மேக்ஸ்வெல் 26 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்தார். கம்மின்ஸ் ஒரு முனையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். மேக்ஸ்வெல் ஆட்டத்தை மாற்றத் தொடங்கினார்.

இதன்போது, ஸ்கொயர் லெக்கில் ஒரு முறையும், மிட் ஆஃபில் ஒரு முறையும் கேட்ச் தவறியது. ஆனால் அவரது நம்பிக்கை தளரவில்லை.

சிறிது நேரத்திலேயே 76 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கம்மின்ஸால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒருமுறை ரன் எடுக்கும்போது மைதானத்தில் விழுந்தது மட்டுமின்றி, கிரீஸை அடைந்ததும் அவர் வலியால் துடித்தது போல் தோன்றியது

சதம் அடித்த பிறகு வெளிப்பட்ட உண்மை முகம்

ஆனால் மேக்ஸ்வெல்லின் உண்மையான நிறம் இந்த சதத்திற்குப் பிறகுதான் தெரிந்தது.

அவர் ஒரு புயல் பேட்ஸ்மேன் என்று அறியப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் அழுத்தத்தின் தருணங்களில் வீழ்ச்சியடைந்தார். ஆனால் வலியிலும் துன்பத்திலும் அவர் இங்கே உறுதியாக நின்றார்.

முதல் சதத்திற்குப் பிறகு, அவரது இடது காலில் ஒரு தசைப்பிடிப்பு இருப்பதை உணர்ந்தார். மேலும் அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு வர வேண்டியிருந்தது.

அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற சுமார் நூறு ரன்கள் தேவைப்பட்டன.

அவரது இடது காலில் ஏற்பட்ட பிரச்சனை முதுகுப் பிரச்சனையாக மாறியது. மேக்ஸ்வெல் பலமுறை மைதானத்தில் படுத்துக் கொண்டார்.

ஒருமுறை ரன் எடுக்கும்போது மைதானத்தில் விழுந்தது மட்டுமின்றி, கிரீஸை அடைந்ததும் அவர் வலியால் துடித்தது போல் தோன்றியது. அப்போதிருந்து அவருக்கு நிற்பது கூட கடினமாக இருந்தது.

அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வெளியேறிய ஆடம் ஜம்பா இரண்டு முறை களம் இறங்குவதற்கு தயாராகி வந்தார்.

41-வது ஓவரின் போது, மேக்ஸ்வெல் ஸ்ட்ரெச்சருடன் வெளியே செல்ல வேண்டும் என்பதுபோல் தோன்றியது, ஆனால் மேக்ஸ்வெல் மீண்டும் காலில் நிற்க, ஜம்பா பெவிலியனிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது.

2010-11-இல், ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில், மேக்ஸ்வெல் 19 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு வெகுவிரைவாக அவரால் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க முடிந்தது.

சொந்த மைதானத்தில் விளையாடிய 2015 உலகக் கோப்பையில், அவர் இலங்கைக்கு எதிராக வெறும் 51 பந்துகளில் சதம் அடித்தார், இது அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த பேட்ஸ்மேனும் அடித்ததிலேயே அதிவேக சதமாகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தனது வலி மற்றும் அசௌகரியத்தின் தருணங்களையும் எதிர்த்து வென்றார்

எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த பயணம்

தனது ஆரம்ப ஆண்டுகளில், 'இந்த பேட்ஸ்மேன் எந்த பந்திலும் எந்த ஷாட்டையும் ஆட முடியும்' என்ற ஒரே அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது.

ஆனால் வழக்கத்திற்கு மாறான ஷாட்களை ஆடுவது அவரது மிகப்பெரிய குறைபாடாக மாறியது. ஷாட்களை கவனக்குறைவாக விளையாடுவதன் மூலம் அவர் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்று கருதப்பட்டது.

பல போட்டிகளில், அவர் அபத்தமான ஷாட்களை விளையாடியதற்காக கேலி செய்யப்பட்டார்.

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் அவர் சராசரி பத்துக்கும் குறைவாக இருந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் தறுவாயில் இருந்தது ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தனது திறமைகளை இப்படி வீணடிக்க விடுவதில்லை.

மேக்ஸ்வெல் தனது சக வீரர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றார் மற்றும் மனநல சிகிச்சையாளர்களின் உதவியையும் பெற்றார். இவையனைத்தும் பலனளித்ததால், ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்தார்.

ஆனால் உள்ளேயும் வெளியேயும் சுழற்சி தொடர்ந்தது. அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 127க்கு மேல் இருந்தாலும், 136 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 36 கூட இல்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில், நான்கு சதங்களின் உதவியுடன் இன்னும் நான்காயிரம் ரன்களை அவர் பூர்த்தி செய்யவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்த உலகக் கோப்பையை மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவதாகத் தெரிகிறது

மறக்கமுடியாத ஆட்டம்

ஆனால், லீக் கிரிக்கெட்டில், உலகம் முழுவதும் உள்ள அணிகள் அவர் தேவை என்று கருதுகின்றன.

ஐ.பி.எல்.லில் கூட பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் ஐ.பி.எல்.லில் அவரது எந்த இன்னிங்ஸும் மறக்க முடியாத வகையில் நினைவில் இல்லை.

‘தி கிரிக்கெட் மன்த்லி’ மாத இதழ், 2017-இல் அவரைப்பற்றி வெளியிட்ட ‘மேட் மேக்சி’ என்ற கட்டுரையில், அவருக்கு அறிமுகமானவர்களுடனான உரையாடல் நிகழ்த்தியிருந்தது. அதன் அடிப்படையில், பல ஆண்டுகளுக்குப் பிறகும், கொந்தளிப்பான வாழ்க்கைக்குப் பிறகும், மாறாமல் இருப்பது மேக்ஸ்வெல்லின் ஆட்ட பாணியாகும்.

இந்த உலகக் கோப்பையை மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவதாகத் தெரிகிறது. அவர் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், ஆஸ்திரேலியா உலக சாம்பியனாவதை யாராலும் தடுப்பது கடினம்தான்.

மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Getty Images

ஏன் கூடுதல் ரன்னரை அழைக்கவில்லை?

நின்று ஓட முடியாமல் தசைப்பிடித்து மைதானத்தில் கீழே விழுந்த மேக்ஸ்வெல் ஏன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்? பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அதிக ரன்களை அடித்தாலும், தேவைப்படும்போது சிங்கிள்ஸ் எடுப்பதற்குக் கூட அவர் ஏன் இவ்வளவு வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டும்? அவருக்கு ஏன் ரன்னர் கிடைக்கவில்லை? - இதே போன்ற கேள்விகள் பல பார்வையாளர்களால் எழுப்பப்பட்டன.

2011 இல், ஐசிசி நிர்வாகக் குழு சர்வதேச கிரிக்கெட்டில் ரன்னர் விதியை நீக்க முடிவு செய்தது.

ஆட்டத்தின் நடுவே மைதானத்தில் தடைகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்தது. அக்டோபர் 1, 2011 முதல், இந்த வசதி இல்லை.

ரன்னரை அனுமதிக்கக் கூடாது என்ற விதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு ரன்னரை அழைத்துச் செல்வதற்கான வசதி இருக்கிறது.

கம்மின்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மேக்ஸ்வெல்லுக்கு கம்மின்ஸ் உதவியது எப்படி?

ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சியபடி மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் கேப்டன் பேட் கம்மின்ஸும் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானமாக நின்று கொண்டிருந்தார்.

இரண்டு மணிநேரம் களத்தில் இருந்த கம்மின்ஸ் 68 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது கணக்கில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே இருந்தது. ஆனால் விக்கெட்டை பறிகொடுக்காமல் அவர் ஆடிய விதம் பெருமளவு பாராட்டுப் பெற்றிருக்கிறது.

கம்மின்ஸ், மேக்ஸ்வெல் இணை 102 பந்துகளில் 179 ரன்களை எடுத்திருந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட பந்துகளை கம்மின்ஸ்தான் சந்தித்தார். ஆயினும் அவர் பதற்றமே இல்லாமல் கடைசிவரை நிலைத்து நின்றதும் வெற்றிக்கு உதவியிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)