கான் யூனிஸ்: ஒரே இரவில் மக்கள் தொகை இரண்டரை மடங்கு உயர்ந்ததால் மூச்சுத் திணறும் நகரம்

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப், கான் யூனிஸிலிருந்து
    • பதவி, பிபிசி செய்தியாளர்

காசா நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் காசா நகரத்திலிருந்து வெளியேறிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் நகருக்குள் நுழைந்துள்ளது.

வடக்கிலிருந்த பல லட்சம் மக்கள், தாம் சுமக்கக்கூடிய அனைத்தையும் தூக்கிக்கொண்டு கான் யூனிஸுக்கு வந்திருக்கின்றனர். எரிபொருள் வைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வைத்திருந்தவர்கள் குதிரை வண்டிகளிலும் வந்தனர், எதுவுமே இல்லாதவர்கள் நடந்தே வந்திருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் கண்ட கான் யூனிஸ், நிலைகுலைந்து போயிருந்தது. ஒரே இரவில் அதன் மக்கள் தொகை இரட்டிப்பாகும் சுமையை அதனால் தாங்க முடியாது.

அதன் ஒவ்வொரு அறையும், ஒவ்வொரு சந்தும், ஒவ்வொரு தெருவும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இதற்கு மேல் செல்ல சுத்தமாக இடம் இல்லை.

வடக்கு காசாவில் இருக்கும் மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அறிவித்ததும், அங்கிருந்த 11 லட்சம் மக்களில் 4 லட்சம் பேர் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (அக்டோபர் 14, 15) தெற்கு நோக்கி வெளியேறியதாக ஹமாஸ் குழு கூறுகிறது.

அவர்களுள் நானும், என் மனைவியும், மூன்று குழந்தைகளும் இருந்தோம். எங்களிடம் இரண்டு நாட்களுக்கான உணவு இருந்தது.

காசா குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒரே இரவில் இரண்டரை மடங்கு மக்கள் தொகை உயர்வு

ஹமாஸ் குழுவினர் வடக்கு காசாவிலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சு மற்றும் இனிவரவிருக்கும் படையெடுப்பு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வெளியேறினர். காஸாவில் இருந்து சென்ற ஆயுதக்குழுவினர் இஸ்ரேலில் 1,200 பேரைக் கொன்ற பிறகு இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.

ஆனால் இந்தக் குறுகிய நிலப்பரப்பு, எல்லாப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டு, உலகிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் எங்கு செல்வது என்பதறகான தேர்வுகள் குறைவாகவே உள்ளன. பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லவே இல்லை.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடக்கிலிருந்த பல லட்சம் மக்கள் கான் யூனிஸுக்கு வந்திருக்கின்றனர். எரிபொருள் வைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வைத்திருந்தவர்கள் குதிரை வண்டிகளிலும், எதுவுமே இல்லாதவர்கள் நடந்தும் வந்திருக்கின்றனர்

அதனால், காசா நகரத்திலிருந்து வந்த மக்கள் — அவர்களில் பலர் இஸ்ரேலின் குண்டுவீச்சில் ஏற்கனவே தங்கள் வீடுகள் உட்பட அனைவரும் இழந்தவர்கள் —அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத பயத்தில் கான் யூனிஸில் குவிந்தனர்.

பொதுவாக 4 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தின் மக்கள் தொகை, ஒரே இரவில் இரண்டரை மடங்கிற்கும் அதிகமாக அதாவது 10 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. வடக்கிலிருந்து மட்டுமல்ல, 2014-ஆம் ஆண்டின் போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு வந்துள்ளனர்.

இதில் ஒவ்வொருவருக்கும் உணவும் தங்குமிடமும் தேவைப்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கென்று யாராலும் சொல்ல முடியாது.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணவும் எரிபொருளும் கொஞ்சமே இருக்கின்றன. கடைகளில் தண்ணீர் இல்லை. நீர் நிலையங்கள்தான் ஒரே நம்பிக்கை. இது ஒரு பேரழிவிற்கான சூழ்நிலை

ஒரு நாளைக்கு 300 மில்லி தண்ணீர் மட்டுமே

இப்பகுதியில் உணவும் பிற அத்தியாவசியப் பொருட்களும் மிக வேகமாகத் தீர்ந்து வருகின்றன. ஏற்கனவே நொடிந்து போயிருந்த நகரம் இது. இப்போது உள்ளே வந்திருக்கும் மக்கள் வெள்ளத்தால் சூழ்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது.

இங்குள்ள பிரதான மருத்துவமனையில், அத்தியாவசிய பொருட்கள் ஏற்கனவே குறைவாக இருந்தன. இப்போது இம்மருத்துவமனை வடக்கிலிருந்து வந்த நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் புகலிடமாக மாறியுள்ளது.

இஸ்ரேலிய வெடிகுண்டுகளால் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது, அகதிகள் தாழ்வாரங்களில் வரிசைகட்டி நிற்கின்றனர். அவர்களின் குரல்களின் சத்தம் காற்றை நிரப்புகிறது.

ஆனால் இங்கு வந்ததற்காக இந்த மக்களைக் குறை சொல்ல முடியாது.

போர்க் காலத்தில், மருத்துவமனைகள் சர்வதேசச் சட்டத்தால் பாதுகாக்கப்படும், மிகவும் பாதுகாப்பான இடங்களாகும்.

சொல்லப்போனால் இந்த மக்கள் அதிர்ஷ்டசாலிகள், தற்காலிகமாகவாவது.

புதிய நோயாளிகளுக்கு வழங்க தங்களிடம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நோயாளிகக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அகதிகளுக்கு எதுவும் கிடையாது.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் துரிதமாகத் தீர்ந்துவரும் நிலையில், கடைகளில் மக்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்

ஒரு சிறிய வீட்டில் 50 பேர்

மற்ற இடங்களில் குடியிருந்தவர்கள் புதிதாக வந்தவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்கனவே யூனிஸில் மக்கள் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்துவந்தனர். இப்போது அங்கு நிற்கக் கூட இடமில்லை.

ஏற்கெனவே சந்தடியாக இருந்தச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இப்போது 50 அல்லது 60 பேர் தங்கியிருப்பதை நான் நேரில் கண்டேன். இப்படி யாராலும் நீண்ட காலம் வாழ முடியாது.

எனது குடும்பம் இப்போது இரண்டு சிறிய படுக்கையறைகள் கொண்ட ஒரு ஃபிளாட்டை வேறு நான்கு பேருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கான தனிப்பட்ட இடம் சில சதுர மீட்டர்கள் மட்டுமே. நாஙாகள் அதிர்ஷ்டசாலிகள்.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐ.நா நிவாரண நிறுவனமான UNRWA-ஆல் நடத்தப்படும் ஒரு பள்ளியில், ஒவ்வொரு வகுப்பறையும் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு பால்கனியிலும் துணிக்கொடிகளில் ஆடைகள் உலர்கின்றன

நிரம்பி வழியும் பள்ளிகள்

கான் யூனிஸ் நகரம் முழுவதும் உள்ள பள்ளிகளில் — இவையும் போரிலிருந்து ‘பாதுகாப்பானவை’ — பல குடும்பங்கள் தங்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கலாம். எண்ணத் தொடங்கினால் முடிவே இல்லை.

ஐ.நா நிவாரண நிறுவனமான UNRWA-ஆல் நடத்தப்படும் ஒரு பள்ளியில், ஒவ்வொரு வகுப்பறையும் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு பால்கனியிலும் துணிக்கொடிகளில் ஆடைகள் உலர்கின்றன.

தாய்மார்களும் பாட்டிமார்களும் பூங்கா இருக்கைகளில் தங்கள் சமையல் செய்கிறார்கள். அவர்களது குழந்தைகள் பசியில் காத்திருக்கிறார்கள்.

காசா குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தங்குமிடத்திற்கு அருகிலேயே விழுந்த குண்டு

ஆனால் தங்க இடமில்லாதபோது — அதிக இடம் உண்மையிலேயே இல்லாதபோது — மக்கள் வேறு வழியின்றி தெருக்களில், சந்துகளில், நிலத்தடிப் பதைகளில் தஞ்சமடைகிறார்கள்.

உணவும் எரிபொருளும் கொஞ்சமே இருக்கின்றன. கடைகளில் தண்ணீர் இல்லை. நீர் நிலையங்கள்தான் ஒரே நம்பிக்கை. இது ஒரு பேரழிவிற்கான சூழ்நிலை.

அனைத்திற்கும் மேலாக கான் யூனிஸ் இந்த நகரமும் பாதுப்பானது இல்லை. இதன்மீதும் தொடர்ந்து குண்டுவீசப்படுகிறது. இது போர் மண்டலத்தில் உள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களும், குப்பைக் குவியல்களும் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனைக்கு அருகில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுவதை நான் கேட்டேன். இது இஸ்ரேலை பதிலடி கொடுக்கும்படித் தூண்டுவது போலத்தான்.

தங்கள் அடுத்த இலக்கைத் தேடிவரும் இஸ்ரேலிய ட்ரோன்களின் ஓசை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

மேலும் குண்டுகள் விழுகின்றன, கட்டிடங்கள் விழுகின்றன. பிணவறைகள் மற்றும் மருத்துவமனைகள் நிரம்புகின்றன.

இன்று காலை (ஞாயிறு, அக்டோபர் 15) எனது குடும்பத்தின் குடியிருப்பிற்கு அருகே ஒரு வெடிகுண்டு விழுந்தது. எல்லா தொலைபேசி சேவைகளும் செயலிழந்துவிட்டதால், அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டதால், எனது மகனைத் தொடர்புகொள்ள எனக்கு 20 நிமிடங்கள் ஆனது.

மக்கள் இப்படி வாழ முடியாது. படையெடுப்பு இன்னும் தொடங்கக்கூட இல்லை.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, கான் யூனிஸ், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனைத்திற்கும் மேலாக கான் யூனிஸ் இந்த நகரமும் பாதுப்பானது இல்லை. இதன்மீதும் தொடர்ந்து குண்டுவீசப்படுகிறது.

வெளியேற இருக்கும் ஒரே வழியும் மூடப்பட்டிருக்கிறது

காசா தான் எனது வீடு. இதுவரை இங்கு நடந்த நான்கு போர்களில் நான் செய்தி சேகரித்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு நிலமையை நான் பார்த்ததில்லை.

முந்தைய போர்கள், அவை எவ்வளவு மோசமாக இருந்தாலும், மக்கள் பட்டினி கிடப்பதையோ அல்லது தாகத்தால் இறப்பதையோ நான் பார்த்ததில்லை. அது இப்போது நடக்கக்கூடும்.

காசாவில் இருந்து வெளியேறும் ஒரே வழி, எகிப்திற்குள் நுழையும் ரஃபா. அது இப்பொது மூடப்பட்டுள்ளது. அதைத் திறப்பது ஒரு புதிய மனிதாபிமானப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை எகிப்து அறிந்திருக்கிறது.

ரஃபாவிலிருந்து 20கி.மீ. தொலைவில் 10 லட்சம் காசா அகதிகள் காத்திருக்கின்றனர். நுழைவு திறந்தவுடன், பெரும் குழப்பம் ஏற்படும்.

2014-இல் ஆயிரக்கணக்கானோர் போரில் இருந்து தப்பிக்க முயன்றபோது நான் அப்படி நிகழ்வதைப் பார்த்தேன். இந்த முறை அது மிகவும் மோசமாக இருக்கும். அதனால்தான் எகிப்து அஞ்சுகிறது.

ஒரு பெரும் மக்கள் வெள்ளம் எல்லைக்குள் புகும். அது ஒரு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

(பிப்ரவரி 16 திருத்தம்: அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டதாக இந்தக் கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது 1,200 க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், கூடுதலாக காயங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்போது காயங்களால் இறந்தவர்களையும் சேர்த்து சுமார் 1,200 இறப்புகள் எனக் குறிக்கும் வகையில் கட்டுரை திருத்தப்பட்டுள்ளது. எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்று இஸ்ரேல் கூறுகிறது.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)